lonely girl painting

மழை இரவில் உஷ்ணமூட்டப்பட்ட 
இசையாளின் கன்னத்தோல் பதித்த 
முத்தச்சத்தத்தை 
ஒரு முழவு 
ஒரு தடாரி 
ஒரு பறை 
விஞ்சி இசைத்ததில்லை.. 

அடர்க்கார்குழலியின் 
வனவாசமாகிப்போன நாளொன்றில் 
உஷ்ணப்பரவலின் மெல்லிசையை 
ஒரு கொம்பு 
ஒரு வாங்கியம் 
ஒரு புல்லாங்குழல் 
மறந்தும் பாடியதில்லை 

நவப்புழையாளின் உணர்குவி முகட்டில் 
'நா' மீட்டெழும் சப்தசுவரங்களை 
ஒரு கின்னரம் 
ஒரு பேரியாழ் 
ஒரு வில்யாழ் 
மீட்டும் யுக்தி அறிந்திருக்கவில்லை. 

ஒரு நெய்தல் நிலத்தலைவியின் 
ஏக்கங்களை தின்றுக்கொழுத்த 
அவ்விரவுகளின் நீளத்தை 
புயல்காலப்பொழுதுகளில் 
அம்மூன்று நாட்கள் தனிமையின் கோரத்தை 
ஓர் ஆம்பல் 
ஒரு விளரி 
ஒரு பாலை 
பண்ணிசைத்து நினைவூட்டவில்லை 

கனிந்து விழும் குழவி அழுகை 
கன்னி குறுநகை 
கலவிப் பொழுதின் மோகனமொழியை 
ஒரு பாணன் 
ஒரு துடியன் 
ஒரு கிணையன் 
கிஞ்சித்தும் பாடிப் பறந்ததில்லை 

- கே.பாக்யா