man 300வாயில்லாப் பூச்சிகளே..
கூர்ந்து கவனியுங்கள்
உண்மையில் சாலையின் உருவில்
நிலத்தில் நசுங்கி அப்பிக் கிடப்பது
குடல், ஈரல், ரத்தம் என
சகலமும் வெளியேறியதுபோக மீதமான
ஒரு மலைப்பாம்பின் தடிமனான தோல்தான் அது.

வெயிலில் வாடிக் கருகி கருப்பு நிறத்தை அடைந்ததே தவிர
அதன் இயல்பு நிறம் வேறு.

இப்போது தென்படும் அக் குழிகள்
மிருகங்களின் பிராண்டல்களால் உருவானவை. மேலும்
மழைகாலத்தில் தேங்குவது நீரல்ல
அவ் வெற்றுத் தோலிலிருந்து வெளியேறிய சீழ்.
இனி இம்மாதிரியாக ஏதோ ஒன்றை உருவகப்படுத்தி
பிரயோஜனமற்ற நாவுகளால் நம்மை நாமே
நக்கிச் சிரிப்போம் .

***

மூளையின் மேல்
மயிர்கள் முளைத்த மண்டை மூடியொன்று
கவிழ்க்கப்பட்டதோடு மட்டுமில்லாமல்
மூடி தானாக திறந்துகொள்ளாமலிருக்க
சுற்றியும் துளைகளிட்டு
ஸ்கூரூக்கள் முறுக்கப்பட்டிருக்கிறது.

நானவற்றை கையால் திருகிப்பார்க்கையில்
அவை என்போன்றல்ல
அவை மிக இறுக்கமானவை என்றுணர்ந்தேன்.

எத்தனையோ வருடங்களாக
திறக்காத அம் மூடியை
திறக்க இப்போதுதான் கிடைத்திருக்கிறது
ஒரு பச்சைக் கைப்பிடியுள்ள திருப்புளி.
நானதை இப்போது திறந்தேயாக வேண்டும்
மேலும் இயங்குக் கோளாறினை சரிசெய்தாக வேண்டும்.

கனவுந்தில் படுத்திருக்கும்
கான்கிரீட் கம்பிகள் திடமானவை என
டிவி விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன்.
ரேடியோவில் கேட்டிருக்கிறேன்
பின் ஏன் அவை
எனைக் கடக்கும் நேரத்தில் கத்திக் கதறின.

- நெகிழன்