நேற்று நீ கனவில் வந்தாயென்றாள்...
கனவைப் பெரிதாக்க
உடன்
தாத்தா, அம்மா, அப்பா, அவ்வா
தைலா என்று சுழன்றவள்
தன் பொம்மையினைக் கண்டதும்
பட்டியலின் முடிவும் நெருங்கிற்று...

அவளது கனவு
மூன்று அல்லது நான்கு வரிகளுக்குள்
முடிந்துவிடுவதாய்த் தெரிகிறது...

கனவைப் பற்றிய
குரலில்
கழிவிரக்கம் ஸ்ருதி சேர்வது
அவளது விடுப்பு நிலையை
உடல்நலமற்றதாய்
காட்டிக் கொள்ளும்
ஒரு அம்மாஞ்சியின்
பாடலாகப் பிசகுகிறது...

கனவையே பகல் தூக்கமாய்
கண்டு கொண்டிருக்கும்
ஓர் அதிகாலை மந்தத்தில்
அவள் மீதான கவன ஈர்ப்பில்
விலகி விலகிச் செல்கின்றது
எனதொத்த திசை....

பக்கவாட்டில்
கிடத்திவிட்டுச் சென்றிருக்கும்
அவள் பொம்மைக்கு
உடல் இருக்கிறது
அதன் முழுவதும் குட்டியம்மு
அலங்கரித்திருக்கும்
திருஷ்டிப் பொட்டுகளின்
தழும்புகள்...

அவள் கனவிலிருந்து
சிறிது சிறிதாய் மீள்கிறாள்
அத்திசையறியாது
தன் இரு கரங்களையும்
விரித்துக் கிடக்கின்றது
திருஷ்டி பொம்மை....!

- புலமி