ghost 324நேற்றிரவு
ஒரு பேயைக் கண்டேன்
நூறு முகங்களை
சுமந்து கொண்டு நின்றது

முதலில் பயந்தாலும்
பின் தைரியமாய்
என்ன வேண்டும் என்றேன்

அது அங்கும் இங்கும்
நடந்தது
ஏதேதோ பேசியது

தூரத்தில் பிரபஞ்சம் உடைந்து
விழும் ஓசையாய் எனக்குள்
தீர்ந்து கொண்டிருந்தது
ஓர் இரவு

அறுபடும் சத்தத்தில்
காதுகளில் கண்கள் முளைக்க
தீ தின்ற தவிப்போடு
தாகம் தோண்டச் சொன்னதாக
காட்சியின் மாற்றத்தை
காவு வாங்கியது
கால் வழியே வழிந்து ஒழுகிய
அதன் இல்லாமை

என் கண்கள் குடைந்து
உள்ளிருந்த மச்சங்களை
பிடுங்கி கையில்
வைத்து ஓ வென
அழுது அரட்டியது

கண்களற்ற எனக்கு
பாவமாய் இருந்தது
அழுகையை வாரித் தந்து
இன்னும் அழ தட்டிக்
கொடுத்தேன்

கை கொட்டி சிரித்த பேய்
சற்று நேரம்
என்னை உற்றுப் பார்த்து விட்டு
கண்ணாடிக்குள் என்னை அடைத்து
விட்டுப் போனது

பிறகு எப்போதும் அது வரவேயில்லை
என்றார்கள்
என்னை எப்போதும் காணாதவர்கள்

- கவிஜி