lovers hug

வழியெங்கும் உன் நிறங்களை
கடக்கவும் முடியவில்லை
கதைக்கவும் முடியவில்லை...

முதுகில் அம்புகள் துளைத்தன
இறுக்கி அணைத்த கையில்
விரலிரண்டு வீணையானது...

கண் பட்ட பறவைக்கெல்லாம்
உன் பெயர் மட்டும் தான்
என் தேர்வு....

என் வாசனை பறிக்கும்
தைலக்காடு நீயாகவே
இருந்தாய்...

மிதக்கும் கருப்பொருள்
எதுவென பட்டும் படாமல் நீ தந்த
முத்தம் சொன்னது....

ஊதா மரங்களைக் காட்டி கையசைக்க,
கண்ணோடு வந்து விட்ட
உன் மருதாணி சிவப்பில்
மீண்டும் பூக்கத் துவங்கியிருந்தது
என் பச்சை மல்லி தோட்டம்....

எப்போதும் போல
பின்னால் அமர்ந்திருந்தாய்...
வண்டி தன்னால் போனதாகத்தான்
நம்பியது நம்மைக் கடந்த யாவும்...
கூட நானும்....

- கவிஜி