அவள் : உச்சி வெய்யில் கருக்குய்யா
               உழவைக் கொஞ்சம் நிறுத்து! - சோறு
            உண்டிடவே வந்திடுவாய்
               உரைக்க வேண்டாம் மறுத்து.

அவன் : மேழி பிடித்து உழுபவர் நாம்
                  நாழி பார்க்கலாமா ? - கிணற்று
             மேட்டினிலே குந்திச் சோற்றை
                  உண்டு எழுவோம் வாம்மா.

அவள் : ஏறு தாங்கி நிற்கும் அந்த
                 எளச்ச ரெட்டை மாடு - போல
            இன்னும் எதனை நாளைக்கய்யா
                 நமக்கு இந்தப் பாடு ?

அவன் : வஞ்சமில்லாப் பாடுபட்டா
                  வளத்தக் கொடுக்கும் காடு - உன்
             வாட்டத்த நான் கண்டுகிட்டேன்
                  வாங்கித் தாரேன் தோடு.

அவள் : அடகு வச்ச நகையை நீயும்
                மீட்கும் வழியைத் தேடு - உன்
           அச்சு வெல்லப் பேச்சு என்றும்
                நீரில் கிழிச்ச கோடு!

அவன் : நெஞ்சினிலே துணிவு கொண்டு
                  நாளும் படுவோம் பாடு - நமக்கு
            நேரங்காலம் பொருந்தி விட்டால்
                  வாழ்வில் அடைவோம் மேடு

அவள் : நினைப்பினிலே கட்டிடுவாய்
                நித்தம் மணலில் வீடு - நாம்
           நேற்றுவரை கண்ட பலன்
                இந்த எலும்புக் கூடு!

அவன் : அந்திக்குள்ளே மூய்க்கவேணும்
                 அகண்டிருக்குது காடு - (இ)ராவில்
            ஆர அமர பேசிக்கலாம்
                வந்து சாலப் போடு !

- செந்தேவன்