sea 03

கடவுள் வீட்டு வாசலுக்கு வந்தார்
பாத்திரத்துடன் வந்த எனக்கு ஒரு கிலோவுக்கு
நாற்பத்தைந்து பூச்சிகளை நூற்றைம்பதுக்கு
விற்று விட்டு
சொம்பு தண்ணீரைக் குடித்து விட்டுச் சென்றார்
பூச்சிகளின் மீசையுடன் தோலையும் தலையையும்
பிய்த்துக் கொண்டேயிருக்கிறேன்
மனம் பாட்டியை மொய்த்துக் கொண்டிருக்கிறது
இவர்களைக் கடவுளென அறிமுகப்படுத்தியவர்
அசைவ உணவைத் தவிர்த்த பாட்டிதான்
கடலைப் பற்றிய பாட்டியின் புரிதல்கள் விசித்திரமானதாகப் படும்
கடலம்மாவிடமிருந்து கடல் குட்டிகளை
கடத்திக் கொல்பவர்களையும்
விற்பவர்களையும் கடவுள் என்பார்
கடலுணவுக்கு மட்டும் நாள் கிழமை எதுவும் பார்க்க மாட்டார்
கடலுணவுகளை வாசனை பிடித்தே உப்பு
புளி கூட்டி வைக்கும் சமையலின் சுவை கனகச்சிதமாகயிருக்கும்
மீன் முள்களைக் கொண்டு கைவேலை செய்வார்
கடலில் கலக்கும் நதிகளிடம் தான் சொல்ல
வேண்டிய இரகசியமொன்று இருக்கிறதென்பார்
கடல் குறித்த கதைகளின் முடிவு சுபமே ஆனாலும் கண் கலங்குவார்
பாட்டியின் வைராக்கியத்தில் வெல்லாத ஒன்றென தாத்தா சுட்டிக்காட்டுவது
கடலுணவு சத்துகளைப் பற்றிய புரிதல்களைத்தான்
ஒரே தோல்வியோடு தாத்தாவும்
ஒரே புதிரோடு பாட்டியும் சென்றே விட்டார்கள்
பதினாறாம் தேதி காரியத்தில் பாட்டியின் ஊரிலிருந்து
வந்தவர் புதிரை உடைத்தார்
மருதென்பவருக்கும் பாட்டிக்குமான காதலை
கடலம்மா புயலொன்றில் பறித்திருக்கிறார்
சமயத்தில் பைத்தியக்காரத்தன வைராக்கியங்களுக்குப் பின்
ஆகச் சிறந்த அன்பு இருக்கவே செய்கிறது...

- சீதா, சென்னை