சந்தோசங்களை சிறைபிடித்து
புலமற்ற ஏதிலியாய்க் கடத்தி
வக்கிரத்தோடு
வணக்கங்களிலும்
மன்னிப்பின்றி
துரத்தித் தாக்கிய
துயரிலிருந்து மீள்கையில்
.......................
மதம்பிடித்த வேறொரு விலங்கு
தன் கோரக் கொடுக்குகளுடன்
கறைபடிந்த
காவிப் பல்லிளித்து
கர்ச்சிக்கிறது

000

இருப்பின் அமைதியை
குலைத்து விடுவதில்
காலத்தின் பங்கு
மண் பற்றென 'பிரித்' நூல் திரித்து
துறவியாய் அலைகிறதின்று

000

நீ அறிந்திருப்பாய்
களைபிடுங்கப்பட்ட
இதற்கு முன்னரான கூட்டத்தின்
கள நிலவரம்

000

மக்குத்தனமாய்
உனக்கு வழங்கப்பட்ட
வாழ் நாட்களை
அண்மிக்கச் செய்து
அவசரப்படாதே
பிக்கு

000

நாங்கள்
கௌரவமானர்கள்
எங்கள் முன் உன்
கூர் மழுங்கிய கோடாரிகளை
கொண்டுவராதே

000

உருகக் காய்ச்சி
பழுப்பேறிய பட்டறைகளில்
துருத்திச் செதுக்கிய மினுக்கத்துடன்
கூர் தீட்டிய அலியின் வாள்களின்
வீச்சுக்கு வித்திடாதே

000

அறுக்கத் தேவையில்லை
நீ பார்த்தாலே பயப்படும்
பக்குவத்துடன்
சாதுவாய் இருப்பதை
பயன்படுத்தும் நிலைக்கு
பணித்து விடாதே
சாதுவே!

- ரோஷான் ஏ ஜிப்ரி