'செய்குவோம் கொல்லோ நல்வினை!' எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே:
தேங்கும் பொருளா தாரக் கொடுமைகள்
மறைந்து மனமகிழ் வாழ்விற் காக
முறையாய்ச் சமதர்மம் படைத்திட் டாலே
அனைத்தையும் அனைவரும் பெற்றிட லாமே
வினைபுரி நேரம் உண்டே எனிலோ
உடனடி யாகப் புவிவெப்ப உயர்வைத்
தடுத்திடும் திருப்பிடும் திட்டங் களைத்தான்
எடுத்திவ் வுலகைக் காத்திட லாமே

(உள்ளத்திலே தெளிவின்றி 'நம்மாலும் நல்வினை செய்யக் கூடுமோ?' என்ற ஐயம் கொண்டு, அதனின்றும் நீங்க வகையின்றித் துணிவற்றவராக மயங்கி நிறபவர்களே! (நெருக்கடி தோன்றி) பொருளாதாரத் தேக்கத்தினால் ஏற்படும் கொடுமைகள் மறைந்து, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, சரியான முறையில் சோஷலிச சமூகத்தைப் படைத்தால், அனைவரும் அனைத்து நலன்களையும் பெறலாமே? (அவ்வாறு அனைத்து நலன்களையும் பெறுவதற்குச்) செயல்படு நேரம் தேவைப்படலாம் என்றாலும், புவி வெப்ப உயர்வைத் தடுத்திடும் பொருட்களின் உற்பத்தியை நிறுத்தவும், புவி வெப்ப உயர்வைத் திருப்பி, புவியைக் குளிரச் செய்யும் மரம் வளர்த்தலையும் மேற்கொண்டு இவ்வுலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றும் செயலை உடனடியாகச் செய்ய முடியுமே?)

- இராமியா