உலக மனித உரிமை காக்கும்
மன்றத்தின் மத்தியில் - ஒரு
பலி பீடம்
அருகில்
கண்களில் கட்டப்பட்ட கறுப்புத்துணி
அப்படியே இருக்க
கைகளில் துலாக்கோல் பறிக்கப்பட்டு
நிறுத்தப்பட்டிருந்தாள்
நீதி தேவதை

"ரத்தம் சரணம் கச்சாமி"
கூவிக்கொண்டே
காவுகொடுக்க காத்திருக்கும்
இன அழிப்பில்
சான்றிதழ் பெற்ற
தமிழின அழிப்பன்; பக்கத்தில்
பாதுகாப்பாக பாரத தேவி!.

அருகே
அடுத்த பலிக்காக
கைகளும் வாயும் கட்டப்பட்டு
கண்களில் மிரட்சியுடன்
தமிழ்த் தாய்!

முதல் பலி நடக்கும் வரை - அவள்
விழிகள் மூடாதிருக்க
அருகில்
ஊடகத் தளபதிகள்.

பார்வையாளர் மாடத்தில்
உலகத் தலைவர்கள்
பாரத தேவியிடம்
ரத்த தானம் பெறுபவர்கள்,
உறுப்பு தானம் பெற
காத்திருப்பவர்கள்,
ஒவ்வொருவராய்
வந்தமர்ந்தபடி இருக்க,

பலியிடும் நிகழ்சிக்கு
தலைமைப் பொறுப்பில்
சுதந்திர தேவி -
தனது கைச்சுடர் மூலம் - மன்றத்திற்கு
ஒளியூட்டிக் கொண்டிருந்தாள்.

அவ்வப்போது
ஆதரவாய்ப் பேசி
வேடம் கலைந்து நிற்கும்
பாரத தேவியை
தமிழ்த் தாயின் ஏக்கப் பார்வை
சென்றடைய
இவளது பார்வையை
ஏறிடத் திராணியற்றவளாய்
சுதந்திர தேவியைப்
பார்த்தபடி பாரத தேவி

இதற்கும் மேலும்
யாரிடம் முறையிட - என
இன்னும் நம்பிக்கையுடன்
யாரையோ தேடினாள்
தவிதாயப் பாட்டிருந்த தமிழ்த்தாய்..

யாரிடமும் சென்றடையாத
அவளின் பார்வை
தனது பாதங்களை நோக்கி
திரும்பி வந்து இறங்கியது
ஊடகத் தளபதிகள்
அவளது பார்வையை - மறுபடியும்
பலிபீடம் நோக்கி திருப்பினர்.

அனைவரும் வந்ததும்
வாக்கெடுப்பு நடத்தி
ஒப்புதல் பெற்ற பின்
பாரத தேவியின்
கண்ணசைவுக்குப் பின்
பலியிடுதல் நடை பெறும்.

உலகத்தலைவர்கள்
ஒட்டுமொத்த வருகைக்காக
காத்திருக்கும் மன்றத்தின் அமைதி,
நடக்கவிருக்கும
சோகத்தின் கணத்தை
கூட்டிக்கொண்டே இருந்தது.

பலியிடும் போது கிளம்பிடும்
அசாதாரண சூழலை சமாளிக்க
பலரும் உச்சரிக்கும் ஸ்லோகங்கள்
ஒலிபெருக்கியில் - மெலிதாக
ஒலிக்கத் துவங்கியது
தொடர்ந்து பலரும்
உச்சரிக்கத் தொடங்கினர்
வாழ்க உலகமயம்!
வளர்க மனித உரிமை!

- உலகாயுதா