manual scavengingவிடியும் முன்னே
வெகுண்டெழுந்து
கஞ்சிப்பானைக்குள்
கைவிட்டுத் துழாவி
பிள்ளைகளுக்கான
பகல் உணவை
உறுதி செய்து
மூத்தவனை உசுப்பி
கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள
அப்பளமோ ஊறுகாயோ
வாங்கிட சிறுகாசு தந்து
மத்தியானச் சோத்துக்காகவேனும்
பள்ளிக்கூடம் போக
புத்தி சொல்லி
குடிவெறியில் குறட்டை விடும்
கணவனையும் கிளப்பிக்கொண்டு
ஓட்டோட்டமாய் ஓடுகிறாள்
தோட்டித்தாய்
நரகலின் முகத்தில்
விடியலைக் காண்பதற்கு ...

கால் வைக்க இடமின்றி
நரகலால் நிரப்பப்பட்டு நரகமாகிக் கிடக்கிறது
நகர்புறத்துக் கழிப்பறை

மூக்கையும் தாண்டி
மூளையைக் குடையும்
மலத்தின் வாடை சகித்து
திரண்டெழுந்த அருவருப்பை
வெற்றிலையோடு துப்பிவிட்டு
விதியை நொந்துகொண்டே
விளக்குமாறை கையிலேந்தி
வேகமாய்ச் சுழன்று
நரகலை அப்புறப்படுத்தி
நகர்ந்துபோகும் முன்னே
சொத்தென்று விழுகிறது
மீண்டும் நரகல்.....

நாத்தம் தீர
உடல் கழுவி
மலம் அள்ளிய சோர்வு
மனதில் வடியும் முன்னே
பிள்ளைகளின் பசி
நெஞ்சிலே நிழலாட
சோர்ந்த கால்களின்
கெஞ்சல்களைப் புறந்தள்ளி
வீடுவீடாகப் போகிறாள்
ஊர்க்கஞ்சி எடுத்துவர...

சம்பளம் வாங்கல
கஞ்சிக்கு நிக்கிறயே
வாங்குற சம்பளத்த
வட்டிக்கு விடுவீங்களோ என
எகத்தாளம் பேசி
மீந்த சோற்றை
பாத்திரத்தில் கொட்டி
மிதமிஞ்சிய சொற்களை
மனதில் கொட்டி
மிடுக்காக
நகர்கிறார்கள்
தெருவாசிகள்....

எப்படி புரியவைப்பது
சம்பளமாய் வாங்கும்
சொற்பப் பணம்
சோற்றுக்கே காணாத
கதையை...

நரகலைக் காட்டிலும்
நாறிக்கிடக்கிறது
ஊர்ப் பேச்சுக்களால் நிறைந்த
தெருக்கஞ்சி...

- வீர பாண்டி

Pin It