பல்சான் றீரே! பல்சான் றீரே!
பல்லுயிர் உலகம் புவிவெப்ப உயர்வால்
அல்லல் பட்டு அழிவதைத் தடுக்க
நல்லுளம் கொண்ட பல்சான் றீரே!
உழைக்கும் மக்களை ஒடுக்கும் முதலியம்
தழைப்பதற் கெனவே உற்பத்தி செய்யும்
பொருட்கள் யாவும் புவிவெப்பம் தன்னைப்
பெருக்குவ தாலும், குளிரச் செய்யும்
மரஞ்செடி கொடிகள் இழப்பைத் தருவதால்
மிரண்டு முதலிகள் தவிர்ப்பதி னாலும்
வினைஞர் ஆட்சியே உயிரினங் காக்கும்
முனைந்து அறிவீர் பல்சான் றீரே!
வினைஞர் விடுதலை வேண்டீர் எனினும்
உலகில் உயிரினம் தொடரும் பொருட்டு
சமதர்மம் ஏற்பீர் பல்சான் றீரே!

(நற்குணம் அமைந்த சான்றோர்களே! பல உயிரினங்கள் வாழ்கின்ற இவ்வுலகம் புவி வெப்ப உயர்வால் அல்லல் பட்டு அழிந்து போவதைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட சான்றோர்களே! உழைக்கும் மக்களை அடிமைகளாகவே வைத்துக் கொள்ள ஆசைப்படும் முதலாளித்துவம் அழியாமல் தழைக்க வேண்டும் எனபதற்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும், புவி வெப்பத்தை மேலும் உயர்த்தவே செய்கின்றன. புவியைக் குளிரச் செய்யக் கூடிய மரம், செடி, கொடிகளை வளர்ப்பது (முதலாளித்துவ முறைப்படி) நஷ்டத்தை ஏற்படுத்துவதால் மிரண்டு போய் அவற்றைத் தவிர்க்கின்றனர். சோஷலிச ஆட்சியில் (இவ்விதமான இலாப, நஷ்டக் கணக்கைப் பார்க்காமல் மக்களின் தேவைகளை முன் வைத்தே உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்பதால் உலகம் அழியாமல்) உயிரினங்களைக் காக்க முடியும் என்பதை அறிவார்ந்த முறையில் சான்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே உழைக்கும் மக்களின் விடுதலை பற்றி இல்லாவிட்டாலும் இவ்வுலகில் உயிரினங்கள் தொடரும் பொருட்டாவது சோஷலிச முறையை ஏற்றுக் கொள்ளுங்கள்.)

Pin It