poetஎப்போதும்
முகத்திற்கு
இடம் பெயர்ந்திருக்கும்
நீங்கள் அதை
அறிய முடியாதபடி
தாடி மயிர்
மறைத்திருக்கும்

அவன் நெஞ்சிலிருக்கும்
கனல்
சில நேரம்
விரலிடுக்கு வரை
இறங்கி வந்துவிடும்

அவனைச் சிலர்
கவிஞன் என்று
அழைப்பதுண்டு

உங்களைப் பெரும்பாலும்
தாமதமாகவே
அடையாளம் கண்டுகொள்ளும்
அவன் மேல்
வருத்தப்பட வேண்டாம்

காகிதம் தேடிக்
கிடைப்பதற்குள்
தன் கவிதைகளையே
மறந்து விடுபவன் அவன்

ஏதாவது
பூங்கா மரத்தடியில்
எழுதிக்கொண்டிருப்பவனைப்
பார்க்க நேர்ந்தால்
சாப்பிட்டாயா
என்று கேட்பது தப்பில்லை

நீங்கள் உண்பதைக்
கொஞ்சம்
அவனுக்கும் கொடுத்தால்
தன்மானம் பார்க்காமல்
வாங்கித் தின்றுவிட்டு
இன்னும் கொஞ்சம்
எழுதுவான்