மக்கள் வறுமையில் வாடா திருக்கத்
தக்க வழிகளைத் தன்னுள் கொண்டதும்
எந்திரம் தன்னால் வேலை இழந்தனர்
என்பதால் அவற்றை வேண்டாம் எனாது
யாவரும் நலனைத் துய்க்கவே மாற்ற
ஆவன செய்வதும், புவிவெப்ப உயர்வும்
சூழ்நிலைக் கேடும் உயிரினம் அழிக்கையில்
ஊழ்வினை மாற்றும் மனித ஆற்றலாய்
நிமிர்ந்து நிற்பதும் சமதர்மம் ஒன்றே

(மக்கள் வறுமையில் வாடாது இருப்பதற்கான தக்க வழிகளைத் தன்னுள் கொண்டதும், இயந்திரங்களினால் மக்கள் வேலை இழந்தனர் என்பதால் அவற்றை வேண்டாம் என்று ஒதுக்காமல்(வேலைப் பளுவைக் குறைத்து) மக்கள் அனைவரும் நலனைத் துய்ப்பதற்கான வழியாக மாற்றுவதற்கு ஆவன செய்வதும், புவி வெப்ப உயர்வும், சூழ்நிலைக் கேடும் (உலகில்) உயிரினங்களை அழித்துக் கொண்டு இருக்கையில் (முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்பட்டு உள்ள) இத்தீவினைகளை மாற்றும் மனித ஆற்றலாய் நிமிர்ந்து நிற்பதும் சோஷலிசத் தத்துவம் ஒன்றே.)

- இராமியா