மாலைக் காற்றுடன் எனது உரையாடல்
அரசமரத்தடியில் சிலுசிலுவென்று துவங்கி
வறண்ட ஏரிக்கரைமேல் வெம்மையாய் நீண்டு
இடுகாட்டில் கடவுளைப் புதைப்பதில் நிறைவுபெற்றது
அனைத்து சீவராசிகளுக்கும் 
சாதி மதம் பாராது மனிதர்களுக்கும் நீ
சுவாசத்திற்கும் சுகமான சில் தழுவலுக்குமாகி  
சமத்துவத்திற்கான குறியீடுமாக நிற்கிறாய்
கண்ணுக்கு புலப்படாத
தீண்டுதலால் உணரமட்டுமே முடியும் கடவுள் நீ என்றேன்.
உங்களது கடவுள் எனக்குப் பிடிக்காது என்றது காற்று
கடலில் புயலாகச் சுழன்று பெரும் மழைப் பொழிந்து
சூறைக்காற்றாக கரையைக் கடக்கும் போதுதான்
உயிர்சேதம் பொருள் சேதமாகுகையில் கொஞ்சம் கசக்கிறாய்-நான்
கோவில்களில் கடவுள் இருப்பதாகச் சொல்லும் உங்களது
மூட நம்பிக்கை சிரிப்பூட்டுகிறது என்றது காற்று
மார்கழியில் குளிர்வதைத் தரும்போது உன்மேல் கோபம் பொங்குகிறது-நான்
உங்களது புகைபோடும் வழிபாட்டுமுறை என்னை மாசாக்குகிறது என்றது காற்று
கோடையில் நீ சூடாக மேனியைத் தழுவி எரிச்சலூட்டுகிறாய்-நான்
இல்லாத கடவுளின் பசிக்கு நீங்கலிடும் படையல் வீண் என்றது காற்று
கடவுள் இல்லாத சமூகம் மதங்கொண்டு அலையாது
மரங்களை வழிபடுவோர் பெருகும்போது
தென்றலாய் எங்கும் புழங்குவாய் நீ-நான்
கடவுள் வதம் என் கோட்பாடு என்றது காற்று.
கடவுள் சிலையை இழுத்துப்போட்டு காலால் நசுக்கி
இடுகாட்டு நோக்கி நடந்தோம் இருவரும் கடவுளைச் சுமந்துகொண்டு

- வெ.வெங்கடாசலம்