ஏடறி வரலாறு வர்க்கப் போரே
கேடறிந்து நீக்கும் வினைஞர் அரசு
அறிவியல் வழியில் வென்ற பின்னர்
நெறியிலா சூழ்ச்சியில் இடறி யுளதே
வென்றதாய் எண்ணும் முதலிகள் மகிழ்வைக்
கொன்ற நெருக்கடி தணிய மறுக்குதே
போதாக் குறைக்குப் புவிவெப்ப உயர்வு
தீதாய் உலகை அழிக்கும் விசையாய்
அறிஞர் உணராப் புதிராய் வளருதே
மறித்து உலகைக் காக்க வல்லது
பொதுமைத் தத்துவம் ஒன்றே என்பதால்
எதுவும் அதனை வெல்வது அரிதே

(ஏடறிந்த வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு தான். வர்க்கப் போராட்டத்தின் (சுரண்டல் என்னும்) கேடுகளை நீக்கக் கூடிய தொழிலாளர்களின் (சோஷலிச) அரசு (மார்க்சும் எங்கெல்சும் காட்டிய) அறிவியல் வழியில் வென்ற பின்னர் (இப்பொழுது முதலாளிகளின்) ஒழுக்கமற்ற சூழ்ச்சியால் இடறியுள்ளது. (இவ்வீழ்ச்சியைக் கண்டு) பொதுவுடைமைத் தத்துவத்தை வென்று விட்டதாக நினைக்கும் முதலாளிகள் மகிழ்ச்சி அடைய முடியாத படி, பொருளாதார நெருக்கடி தணியாமல் கொன்று கொண்டு இருக்கிறது. போதாக் குறைக்கு உலகை அழிக்கும் தீய சக்தியாகப் புவி வெப்ப உயர்வு, அறிஞர்களும் தீர்வு அளிக்க முடியாத புதிராக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்புவி வெப்ப உயர்வைத் தடுத்து உலகைக் காப்பதற்கு வல்லது (புவி வெப்ப உயர்வை அதிகமாக்கும் இலாபம் தரும் தொழில்களில் மட்டும் முதலீடு செய்வதைக் கட்டாயப்படுத்தும் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கைவிட்டு, மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட) பொதுவுடைமைத் தத்துவம் ஒன்றே என்பதால், அதை யாராலும் எந்த சக்தியாலும் வெல்ல முடியாது.)

- இராமியா