சமதர்மம் ஏற்றால் உலகம் பிழைக்கும்!
நிலமெனும் நல்லாள் உழைப்பெனும் துணையில்
நலமது அனைத்தையும் நல்குவாள் நமக்கு
வேதியர் வேள்வியில் உயிர்களைக் கொன்றபின்
மீதி மாடுகள் போதா நிலையில்
உழவும் தொழிலும் நசியும் காலை
விழலாய்ப் போக்கும் வேள்வியை எதிர்த்து
பெரும்போர் தொடுத்தார் கெளதம புத்தர்
செருக்குப் பார்ப்பன வாதம் நில்லாது
அனைத்து அரசரும் புத்தரைப் பணிய
வினையுந் தீர்ந்து உலகம் பிழைத்தது
புத்தரின் காலப் பார்ப்பரைப் போல
அத்தனை முதலியும் புவிவெப்பம் உயர்த்தும்
சந்தை விதியைப் பற்றி நிற்கையில்
பண்டை அரசர் பணிந்ததைப் போல
உண்மை யாய்ப் பணிந்து சமதர்மம் ஏற்றுச்
சந்தை விதியை ஒழிக்கும் அரசை
சிந்தித்து ஏற்பதே இன்றைய கடமை.

 
(இந்நிலம் தாயாகவும் உழைப்பு தந்தையாகவும் இருந்து நமக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறுகின்றன. (ஆனால் உழைப்பதற்குத் தேவையான கால்நடை போன்ற) உயிர்களைப்  பார்ப்பனர்கள் வேள்வியில் பலி கொடுத்த பின் உழவுக்குத் தேவையான மாடுகள் போதுமான அளவில் கிடைக்காமல் போயிற்று. இதனால் உழவும் அதைச் சார்ந்த தொழில்களும் நசியத் தொடங்கின. இவ்வாறு (இயற்கை ஆதாரங்களை) வீணாக்கும் வேள்வியை எதிர்த்து, கெளதம புத்தர் பெரும் போர் தொடுத்தார். (புத்தரின்) வேள்விக்கு எதிரான பார்ப்பனர்களின் செருக்கான வாதங்கள் நிற்க முடியாமல் தோல்வி அடைந்தன; அரசர்கள் அனைவரும் புத்தரிடம் பணிந்தனர். ஆகவே வரவிருந்த ஆபத்து விலகி உலகம் பிழைத்தது. புத்தரின் காலத்தில் (உலகை அழிவுப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த) பார்ப்பனர்களைப் போல், இன்று முதலாளி வர்க்கத்தினர் அனைவரும் புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களையே உற்பத்தி செய்யக் கட்டாயப்படுத்தும் (அதன் மூலம் உலகத்தை அழிவிற்கு இட்டுச் செல்லும்) சந்தை விதிகளைப் பற்றி நிற்கின்றனர். பண்டைக் காலத்தில் புத்தரிடம் அரசர்கள் பணிந்தது போல, சோஷலிச முறையைப் பணிந்து உண்மையாக ஏற்று, சந்தை விதிகளை ஒழிக்கும் அரசைச் சிந்தித்து ஏற்பது நமது இன்றைய கடமையாகும்.)

- இராமியா