வெளிர்மஞ்சள் நிறத்தில் வழிகிறது வெயில்

துளைத்து வெளியேறும் மண்புழுவின்

தடங்கள் மீது

பாடுகின்றது நிழலை மரம்.

கல்வாழையின் இலைபரப்பில்

இருக்கின்றன

பாதைகள்

பயணித்து மறைகின்றன

சிவந்த எறும்புகள்.

உடைவுண்ட

மணிநாவைப் போல

அமைதியின் கூர்மையை வரைதல்

வெளியெங்கும் பிரதிபலிக்கும்

நிர்வாணத்தின் மேனியை அடைதல்.

உள்ளிருக்கும் எதுவும்

வெளியிலில்லை

உள்ளிலிருந்துப் பரந்த ஒன்றே வெளி

உள்ளும்

வெளியும்

ஒன்றாகும் கணம் ஒன்றே

ஓர்மையின் உள்.

அடர்ந்த புல் தரை நோக்கி

விரட்டும் மேய்ப்பன்

மகிழ்ச்சியில் ஆநிரைகள்

வாழ்வின் அந்தியில் சேர்க்கிறது

வெளிறிய நரையும் திரைந்த தோலும்

கவலைகள் ஏதுமின்றி காய்கிறது நிலா.

எரியும் உலகில் நீள்கிறது தீ நாக்குகள்

துன்பத்தின் மிகுதியில்

வாழ்க்கை

இருளுக்குள்ளான வாழ்வில்

புலனாகும் வழி

தீபமொன்று ஏற்றப்பட்டால்.

அழகிய தோலும்

உறுதியான எலும்புகளும்

வேனிலில் உதிரும்

தென்னை மட்டைகள்

ரத்தம் நிரம்பிய

மதுக்குடுவையில்

தேடுவது எதை.

சன்னல்களை நோக்கி

திருப்புகின்றன தங்கள் தளிர்களை

தொட்டிச்செடிகள்

சன்னல்களின் வழி நுழையும்

வெளிச்சக் கீற்றுகள்.

காத்திருக்கும் கிழக்கொக்கு

வேட்டை சூன்யம்

மீன்களற்ற குளம்.

கொன்றை மரத்தில் படரும்

ஓணான் கொடியில்

சிக்கித் துவள்கிறது பட்டாம்பூச்சி

சிக்கலற்றுப் பூத்திருக்கிறது

கொடிப்பூ.

- யாழன் ஆதி

 

Pin It