துப்பாக்கிச் சூட்டை முடித்துக் கொண்டு திரும்பிய மகன்களுக்கு
ஆரத்தி எடுத்துக் கொண்டே அம்மா சொன்னாள்.
துப்பாக்கிகள் உயிரற்றவை வாயற்றவை.
உங்கள் உடம்பிலிருந்து வெளியேறும் வெறுப்புதான்
துப்பாக்கியை பேச வைத்திருக்கிறது.
புறமுதுகிட்டோடியவர்கள் இனி திரும்ப வர மாட்டார்கள்.
அவர்களின் வீட்டில் கூச்சலும் குழப்பமும் இருக்கும்.
வாசலில் அழுகையும் அவமானமும் நிரம்பி வழியும்.
அவர்களால் எங்கேயும் புகாரளிக்க முடியாது.
நீதிமன்றங்களில் உன் சித்தப்பாக்கள், மாமன்மார்களே இருக்கிறார்கள்.
உங்களுக்கெதிரான ஆணையை அவர்களால் எப்படி உச்சரிக்க முடியும்.
உன் விளையாட்டை கொலை வெறியாட்டம் என்பார்கள்.
வீரத்தை அத்துமீறல் என்று வசைபாடுவார்கள்.
அன்பும் கருணையும் வைத்திருப்பவர்கள் கோழைகள்.
ஈவும் இரக்கமும் கையாலாகதவனின் தாய்மொழி
சமதர்மம் பேசுபவர்கள் தெருவெங்கும் பயணிக்கிறார்கள்.
அவர்கள் ஊர்த் தமிழும், சேரித் தமிழும் கைகுலுக்க வேண்டுமென்பார்கள்.
புதைக்கப்பட்ட பிணங்களின் புகைப்படங்களோடு
என்னிடம் வருவார்கள் நீதிகேட்டு
உன் பிள்ளைகளின் லட்சணத்தை பாரென்று சொல்லிக் கொண்டு
பதற்றமடையாதீர்கள் வழக்கம் போல துப்பாக்கிகளோடு பேசிக் கொண்டிருங்கள்.
அவர்களுக்காக முலாம் பூசப்பட்ட சொற்களிருக்கின்றன.
இந்த முறையும் வெறுங்கையோடு தான் செல்வார்கள்.
எனக்கெதிராக முணுமுணுக்க அவர்களுக்கு தெம்பிருக்காது.
துப்பாக்கியின் பாடங்களை அத்தனை சுலபமாக அவர்களால் மறக்க முடியாது.

- கோசின்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)