ஒரு சலூனில் சவரத்திற்காக காத்திருந்தபோது 

தற்செயலாகத்தான் நிகழ்ந்தது எங்கள் சந்திப்பு 

அசப்பில் ரொம்பவும் தெரிந்தவர்போல் தோற்றம் 

உன் யூகம் சரிதான் என்றார் அவராகவே 

கண்களில் முன்பிருந்த கருணையில்லையே என்றேன் 

ரெண்டாயிரம் வருசமாய் தீராமலிருக்க 

என் கண்களென்ன கருணைக்கிடங்கா என்றார் எரிச்சலோடு 

மயக்கும் வசீகர மொழியும்கூட மறைந்துவிட்ட வருத்தம் எனக்கு 

மயங்குவதற்கு மொழியொன்றும் லாகிரிவஸ்து அல்லவென எச்சரித்தார் 

மேலோட்டமாய் செய்தித்தாளைப் புரட்டியபடியே 

இப்படி சலூனில் காத்திருக்கப் பொறுக்காமல்தான் 

இத்தனைநாளும் தாடிவளர்த்ததாய் சலித்துக்கொண்டார் 

உண்மையில், பின்லேடனுடையதை விடவும் நீளமானதுதான் 

- ஒப்பிட வேறு ஆளே கிடைக்கவில்லையா... 

அவனைத் தேடியலைந்துதான் இப்படியானேன் என்று 

பட்டென அறைந்தார் கன்னத்தில் 

மறுகன்னத்தைக் காட்டினேன் 

அவர் மன்னிப்பேதும் கோரவில்லை 

 

ராணுவச்சிப்பாய் போன்ற சிகையலங்காரத்தோடு வெளியேறும் 

அவரது அங்கியிலிருந்து குதித்துப் பின்தொடர்கின்றனர் 

எண்ணற்ற பின்லேடன்கள் 

 

நிழல்போலும் தெரிகின்றனர்.

 

- ஆதவன் தீட்சண்யா

Pin It