மத்திய அரசு 2011 ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முடிவு செய்திருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் கணக்கெடுப்பு என்ற வகையில் இந்த கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பிறகு அறிவுஜீவிகள் மத்தியிலும்,அரசியல் தளத்திலும் ஆதரவான மற்றும் எதிரான விவாதங்கள் எழுந்தது.

ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் சாதிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமான விவாதம் பெரிய அளவில் நடைபெறவில்லை. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நிகழ்வாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமல்ல இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது. கௌடில்யரின் அர்த்த சாஸ்த்திரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மேலும் அதில் பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என அந்தந்த வர்ணத்தினருடைய மக்கள் தொகை மிகச் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர் காலகட்டத்தில் அக்பர் அமைச்சரவையில் இருந்த அபுல் பாசல் என்பவர் எழுதிய ஐந்-+இ+-அக்பர் என்ற புத்தகத்தில் பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நவீன மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. இதில் கவனிக்கப்படவேண்டிய விசயம் என்னவெனில் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரே ஒரு முறை 1931 ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்று இருக்கிறது அதன் பின்னர் இன்று வரை நடைபெறவில்லை.

சாதி வாரி கணக்கெடுப்பிற்கு எதிராக இன்று பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. அக்கருத்துக்களை ஆழமாகப் பார்த்தோமெனில் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமில்லாதவை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சாதி வாரி கணக்கெடுப்பிற்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்களில் ஆனந்த் டெல்டும்டேயின் கருத்துக்களை முக்கியமாக கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர் சாதிவாரி கணக்கெடுப்பு ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக அமையும் என்று வாதிடுகிறார். மேலும் அவர் ஆங்கிலேயர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்ததே பிரித்தாலும் கொள்கையை கையாளுவதற்காகத்தான் என்றும் குறிப்பிடுகிறார். அதே போல் இன்றைய ஆளும் வர்க்கமும் மக்களை திசைதிருப்பி பிரித்தாளுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பை பயன்படுத்தும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

மேலோட்டமாக பார்க்கும்பொழுது இது உண்மையாக இருக்குமோ என்று தோன்றும். ஆனால் யதார்த்தமான நிலைமை இதற்கு மாறாகத்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானப் போராட்டத்தில் சாதியையும் கடந்து அனைத்து மக்களும் ஒன்றாக நின்று போராடி வருகின்றனர். ஏனெனில் தனியார் மயமும், தாராளமயமும் பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதன் மூலமாக அரசே மக்களுக்கு சாதி அடையாளத்தை குத்திவிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதிலும் நாம் உற்றுநோக்க வேண்டிய விசயம் என்னவெனில் சாதிய அடையாளம் என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் சாதிய அடையாளம் இந்திய மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. எனவே இந்த கருத்தை நிராகரிக்க வேண்டியிருக்கிறது.

மூன்றாவதாக, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதன் மூலமாக சாதிய அமைப்புகள் வலுப்பெற்றுவிடும் என்றும் அடையாள அரசியல் தலைதூக்கும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுவும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை ஏனெனில் இதுவரை பல ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காத நிலையிலும் கூட சாதி அமைப்புகளும், அடையாள அரசியலும், வலுப்பெற்றுத்தான் வந்திருக்கிறது. நான்காவதாக, இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கிறது. அதனால் எல்லாத் தரப்பு மக்களும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே சமமான வாய்பும், சமத்துவமும் இன்றைய சூழலில் இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அதோடு சாதிவாரி கணக்கெடுப்பால் சமுதாயம் பிளவுபட்டுவிடும் என்று வலியுறுத்துகின்றனர். இக்கருத்தும் உண்மையல்ல. இன்றும் கூட சாதியக் கொடுமையும், தீண்டாமையும் இந்தியச் சமூகத்தில் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பல இடங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டுதான் வருகின்றது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் விடுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இழைக்கும் அநீதி ஆகும். ஆகவே இக்கருத்தையும் நிராகரிக்க வேண்டி இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. இதுவரைக்கும் அமைக்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியிருக்கிறது.மேலும் தொடர்ச்சியான கால இடைவெளியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். குறிப்பாக மண்டல் கமிட்டி இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த மற்றும் புதிய சமூக நலத்திட்டங்களை உருவாக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறது.

மறுபுறத்தில் பல்வேறு புதிய காரணங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. முதலாவதாக , இடஒதுக்கீடு முழுமையான சமத்துவத்தை ஏற்படுத்தாவிட்டாலும் குறைந்தபட்சம் சமூகநீதியை நிலைநாட்ட உதவியாக இருக்கும் என்ற வகையில் இடஒதுக்கீடை முறையாக நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளில் உச்சநீதிமன்றமும், பல மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றமும் 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டாவதாக சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை புரிந்துகொள்ள உதவும் என்ற வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது இருந்த பல சாதிகள் இன்று இல்லாமல் இருக்கலாம். பல புதிய சாதிகள் உருவாகியிருக்கலாம். இடப்பெயர்ச்சியின் காரணமாகவும், கலாசாரப் பரவலாக்கத்தின் காரணமாகவும் சாதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இவற்றை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.

மூன்றாவதாக சமூகத்தில் எந்த வகுப்பைச் சார்ந்தவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு தக்கபடி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. நான்காவதாக தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்கள் போன்ற மிகவும் பின் தங்கியுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்தவராகவோ, முஸ்லீமாகவோ மாறிய தலித் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வகைப்படுத்தப்படுகின்றனர். ஆனால், அங்கும் அவர்கள் சாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். ஆகவே அவர்களைப் பற்றி அறிய சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம்.

ஐந்தாவதாக தற்போது நாம் பயன்படுத்தி வரும் தகவல்கள் அனைத்தும் 1931 ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தகவலை வைத்துக்கொண்டு பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல. ஆகவே இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய கணக்கெடுப்பை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் அதே நேரத்தில் தேசம் முழுவதும் ஒரே மாதிரியான கணக்கெடுப்பு சாத்தியமா என்றும் ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியா பல்வேறு தரப்பட்ட மக்களை உள்ளடக்கிய ஒரு நாடு. ஆகவே ஒரே மாதிரியான கணக்கெடுப்பு நடைமுறைச் சிக்கலை உருவாக்கும் . ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வரும் சாதி வேறு மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பாக இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கேற்ப சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே தகவல்கள் முழுமையாக இருக்கும்.

இறுதியாக, பலரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு சாதியை வலுப்படுத்தும் என்கிற நம்பிக்கை ஆழமாக இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்றால் நல்ல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியாது. அதோடு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்போது சாதியின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த சாதியையும் சார்ந்தவர்கள் அல்ல என்று பதிவு செய்யவும் வழிவகை இருக்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பில் மேலோட்டமாக முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று மட்டும் எடுக்காமல் பல தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதோடு பல்வேறுபட்ட சாதிகளின் சமூக பொருளாதார நிலையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பலனளித்திருந்தாலும் அதில் ஒரு பகுதியினருக்கே பலன் கிடைத்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களில் பலர் இன்றும் இடஒதுக்கீட்டின் பலனை பெறாமல் தான் இருக்கின்றனர். ஆகவே இத்தகைய தகவல்கள் மிகவும் முக்கியமானது. ஒட்டுமொத்தமாக சமூக வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும். அப்படியெடுக்கப்படும் பொழுது நாம் அறியாத பல உண்மைகள் வெளிவரும்.

Pin It