சொகுசு கார் ஒன்றின்
பின்புறத்தில் ஒட்டியிருந்த வாசகம் -
“வறுமையிலும் நேர்மை”.

போக்குவரத்து சைகை விளக்கில் பச்சை
மீண்டும் முரண்பாடுகளுடன் நகர்கிறது யாவும்.

"உயர் செல்வத்திலும் நேர்மை”
"கந்தலையே கசக்கி கொண்டு இராதே”
"கற்கள் கணவனாக வேண்டியதில்லை” - என்றோ
எதிர்மறை பதிவுகளில்லை தெரிந்த வரையிலும்.

ஜீவநதிகளும் கிழக்கு நோக்கியே இத்தேசத்தில்.
எதிர்மறை நர்மதைகளும் எங்கோ ஒன்று.

எதிர்மறைகள் முரண்கள் என
முரண்கள் அரண்கள் என உள்ள
தளத்தில் இயங்கும் நிர்பந்தத்தில்

முரண்பாடுகள் மூக்கில் ஏறி
ஏதோரு திரைப்பட நாயகனை போல
“எல்லாமே அசிங்கம், அசிங்கம்” என
சுற்றிச் சுற்றி வந்து மூர்ச்சை அடையாமலிருக்க

கைவசம் எப்போதிருக்கும் சகிப்பை
அவ்வப்போது கைகுட்டையில் தெளித்து
மூக்கை மூடியபடி தொடர்கின்றன பயணங்கள்.

- கே.சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)