உச்சிகால பூஜைக்குத்
தட்டிலே தங்கவெள்ளி மலர்களுடன்
உள் நுழைந்தவனை நிறுத்திக்
கடைசி முழம் பூவை
வாங்கச் சொல்லிக் கெஞ்சுகிறாள்
சுட்டெரித்த சூரியக் கதிரில்
சுருங்கிப் போயிருந்த கிழவி.
பலமான தலை அசைவில்
மறுப்பை உணர்த்தியவனிடம்
தன் காணிக்கையாகவேனும்
கடவுளிடம்
சேர்த்துவிடக் கோருகிறாள்.
ஒதுக்கிவிட்டு நகர்ந்தவனின்
அன்றைய பிரார்த்தனைகள் யாவும்
பலித்திருக்கவே கூடும்.
ஆயினும் அவன் தோட்டத்து
மல்லிகைச் செடிகள் மட்டும்
மொட்டு விட மறந்து போயின
அதன் பிறகு.

***