மெல்ல மெல்ல இருள்கிறதா
மெல்ல மெல்ல விடிகிறதா
எனத் தெரியாமல்
வேடிக்கை பார்த்தபடி இருக்கிறேன்
மெல்ல மெல்ல
நீ விலகுதலை!

~~~~~~~~~~~

முதலாய்ப் பழகிய
அழகிய நாட்களைப் போல்தான்
சத்தமில்லாமல் நீள்கிறது
முதலாய்ப் பிரிந்து கொண்டிருக்கும்
அவஸ்தை நாட்கள்

~~~~~~~~~~~

பழகுதலுக்கும் பிரிதலுக்கும்
வேறுபாடின்றி
ஞானியாய் பயணிக்கிறாய் தேவதை நீ
வெடித்தபடி
மௌனியாய் பயணிக்கிறேன் மனிதன் நான்

~~~~~~~~~~~

தொலைவின் பொழுதுகளில்
மௌனங்கள் புரிந்த நாள்களிலிருந்து
அருகாமை நிமிடங்களின்
கத்தல்கள் புரியாத
இடைவெளிக்கு வந்திருக்கிறோம்
நாம் இருவரும்!

~~~~~~~~~~~

தேவதைக்கிடையில் மட்டும்தான்
தொலைவுகள் வருமெனத்
தெரிந்திருந்தால்
உன்னை மாற்றி இருக்க மாட்டேன்
தோழியிலிருந்து தேவதைக்கு!

- லதாமகன்

 

Pin It