மிதவாதக் கட்சியினரும் ஜஸ்டிஸ் கட்சியினரும் வெளிப்படையாக அரசாங்கத்தினோடு ஒத்துழைத்து வருகின்றனர். அவர்களது கொள்கைகளில் யாம் அபிப்பிராயபேதம் கொள்ளினும் அவர்களது ஒத்துழைப்பு எண்ணம் கண்ணியமாக வெளிப்படையாகவுள்ளது என்றே சொல்லுவோம். அவர்கள் சுயராஜ்யக்கட்சியினரைப் போல் ஒத்துழையாப் போர்வையைத் தாங்கி ஒத்துழைக்க முற்படவில்லை. அவர்கள் எப்பொழுதும் பகிரங்கமாகவே ஒத்துழைத்து வருகின்றனர்.
சுயராஜ்யக் கட்சியினர் அப்படி அல்லாது தேச மக்களி டம் பொய்யைக்கூறி ஓட்டுப் பெற்றுத் தங்களது பிரதிநிதித்துவத்தை மாறான வழிகளில், காங்கிரஸின் கொள்கைகளுக்கே விரோதமாக உபயோகித்து வருகின்றனர். சட்டசபைகளுக்குச் செல்வதினால் ஒத்துழையாமையை இன்னும் தீவிரமாக அங்கு அனுஷ்டிக்க முடியும் எனக்கூறிய இவர்கள் காங்கிரஸிற்கே உலைவைத்து விட்டனர். ஒத்துழையாமை என்னும் பதம்கூட இப்புண்ணிய சீலர்களின் சூழ்ச்சிகளால் மறைந்துவிட்டது.
சுயராஜ்யக் கட்சியினர் பலம் உடையவர்கள் என்று அரசாங்கத்தினர் கருதியிருப்பார் களாயின் இவர்கள் வேண்டுவதெல்லாம் தாங்களாகவே வலுவில் கொடுக்க முன் வந்திருப்பார்கள். இவர்களது செயல்களினால் இவர்கள் நம்முடன் ஒத்துழைப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என அரசாங்கத்தினர் கருதியதால் அரசப் பிரதிநிதி ரீடிங் பிரபுவும் “நீங்கள் மாண்ட்போர்டு சீர்திருத்தத்தை ஒழுங்குடன் பரீட்சித்துப் பார்த்தும் எங்களுடன் ஒத்துழைப்பும் கொள்வீர்களாயின் நாங்கள் உங்களுக்கு வேண்டுவன செய்வதைப் பற்றி யோசிப்போம்” எனக் கூறிவிட்டார். ஒத்துழையா இயக்கத்தைக் கண்டு பயந்த ரீடிங் பிரபு இவ்விதம் லட்சியமில்லாது நம்மைச் சிறிதும் மதியாது பேசுவதற்குக் காரணம் சுயராஜ்யக் கட்சியினர் தான் என்பதில் ஐயம் யாது?
ஒத்துழையா இயக்கத்திற்குக் கூற்றுவனாக விளங்கியவர் இச்சுயராஜ்யக் கட்சியினரே என்பதை யாம் பன்னிப் பன்னிக்கம் கூற வேண்டு வதில்லை. சுயராஜ்யக்கட்சியின் மூல புருஷராக விளங்கிய ஸ்ரீமான் பட்டேல் இந்தியா சட்ட சபையின் தலைவர் பதவி ஏற்றுக்கொண்டதைப் பற்றியும், பண்டித நேரு ஸ்ரீமான்கள் அரங்கசாமி அய்யங்கார், கெல்கார் இவர்கள் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகளில் அங்கம் பெற்றதைப் பற்றியும் முன்னர் எழுதியுள்ளோம். நாளாக நாளாக இன்னும் கேவலமாகி வருகின்றனர். அரசாங்கத்தினரைக் கெஞ்சவும் முற்பட்டுவிட்டனர்.
பண்டித நேரு அவர்கள் திங்கட்கிழமை கூடிய இந்திய சட்டசபைக் கூட்டத்தில் கனம் முட்டிமன் அரசியல் சம்மந்தமாக கொண்டுவந்த ஒரு தீர்மானத்திற்கு ஓர் திருத்தப் பிரேரணை ஒன்று கொண்டுவந்தார். அதுவும் நிறைவேறியது. இதில் இந்தியாவுக்கு வேண்டும் தேவைகளையெல்லாம் கூறியுள்ளாராம். இப்பிரேரணையில் இவர் என்ன வேண்டுமென அரசாங்கத்தினரை வேண்டுகின்றாரோ அதற்கும் மிதவாதிகள் ஜஸ்டிஸ் கட்சியினர் விரும்புவதற்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாக எமக்கு விளங்க வில்லை. சுயராஜ்யக் கட்சியினரின் தேவை இவ்வளவுதான் என்றால் இத் தேவைகளையெல்லாம் முன்னரே அரசாங்கத்தினரின் வாயால் பெற்றிருக்கலாம். காந்தி அடிகள் ஒத்துழையா இயக்கம் ஆரம்பித்திருக்க வேண்டுவதில்லை. பல தியாகிகள் சிறைக்குச் சென்றிருக்கவேண்டுவதில்லை. வக்கீல்கள் தத்தம் தொழிலை நிறுத்தித் தவிக்கவேண்டுவதில்லை. வாலிபர்கள் பள்ளியை நிறுத்தியிருக்கவேண்டுவதில்லை. இவைகளையெல்லாம் விழலுக்கிறைத்த நீர்போல் ஆக்கிவிட்டனர்.
காந்தி அடிகளை பள்ளத்தில் இறக்கி விட்டனர். 1921-ம் ஆண்டில் சர். சங்கரன் நாயர் தலைமையின் கீழ் பம்பாயில் கூடிய சர்வகட்சி மகாநாட்டின் பொழுதாவது தங்களது விருப்பம் அரசாங்கத்தாரை அண்டிக் கெஞ்சுவது எனத் தெரிவித்திருப்பார்களாயின் அரசாங்கத்தினர் வேண்டுவன செய்வதாகக் கூறியிருப்பார்கள். அப்பொழுதெல்லாம் தங்களது எண்ணங்களை மறைத்து மாறுவேடம் தாங்கிய இவர்கள் இப்பொழுது தங்களது உண்மை உருவத்தைக் காண்பித்து விட்டார்கள். இவர்களால் காந்தி அடிகளுக்கு, காங்கிரஸிற்கு தியாகம் செய்த வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கு ஓர் அளவில்லை. இவர்கள் இந்தியாவின் விடுதலைக்கே பங்கம் வைத்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இக் கட்சியினரை தேச விடுதலைக்குழைப்பவர்கள் என்று சொல்லி மித வாதிகளைவிடவோ, ஜஸ்டிஸ் கட்சியினரை விடவோ மேலென்று கூறுவது எவ்வாறு ஏற்றதாகும்? இவர்களை உண்மைக்கு மாறானவர்கள் என்றேதான் சொல்லவேண்டும். இனியாவது பொதுமக்கள் இவர்கள் மற்றக்கட்சியினரை விட மேலானவர்கள் அல்லது தேசபக்தி மிகுந்த வர்கள் எனவெண்ணி ஏமாறாதிருப்பார்களா?
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1925)
மிதவாதக் கட்சியினரும் ஜஸ்டிஸ் கட்சியினரும் வெளிப்படையாக அரசாங்கத்தினோடு ஒத்துழைத்து வருகின்றனர். அவர்களது கொள்கைகளில் யாம் அபிப்பிராயபேதம் கொள்ளினும் அவர்களது ஒத்துழைப்பு எண்ணம் கண்ணியமாக வெளிப்படையாகவுள்ளது என்றே சொல்லுவோம். அவர்கள் சுயராஜ்யக்கட்சியினரைப் போல் ஒத்துழையாப் போர்வையைத் தாங்கி ஒத்துழைக்க முற்படவில்லை. அவர்கள் எப்பொழுதும் பகிரங்கமாகவே ஒத்துழைத்து வருகின்றனர்.

சுயராஜ்யக் கட்சியினர் அப்படி அல்லாது தேச மக்களிடம் பொய்யைக்கூறி ஓட்டுப் பெற்றுத் தங்களது பிரதிநிதித்துவத்தை மாறான வழிகளில், காங்கிரஸின் கொள்கைகளுக்கே விரோதமாக உபயோகித்து வருகின்றனர். சட்டசபைகளுக்குச் செல்வதினால் ஒத்துழையாமையை இன்னும் தீவிரமாக அங்கு அனுஷ்டிக்க முடியும் எனக்கூறிய இவர்கள் காங்கிரஸிற்கே உலைவைத்து விட்டனர். ஒத்துழையாமை என்னும் பதம்கூட இப்புண்ணிய சீலர்களின் சூழ்ச்சிகளால் மறைந்துவிட்டது.சுயராஜ்யக் கட்சியினர் பலம் உடையவர்கள் என்று அரசாங்கத்தினர் கருதியிருப்பார்களாயின் இவர்கள் வேண்டுவதெல்லாம் தாங்களாகவே வலுவில் கொடுக்க முன் வந்திருப்பார்கள். இவர்களது செயல்களினால் இவர்கள் நம்முடன் ஒத்துழைப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என அரசாங்கத்தினர் கருதியதால் அரசப் பிரதிநிதி ரீடிங் பிரபுவும் “நீங்கள் மாண்ட்போர்டு சீர்திருத்தத்தை ஒழுங்குடன் பரீட்சித்துப் பார்த்தும் எங்களுடன் ஒத்துழைப்பும் கொள்வீர்களாயின் நாங்கள் உங்களுக்கு வேண்டுவன செய்வதைப் பற்றி யோசிப்போம்” எனக் கூறிவிட்டார்.

ஒத்துழையா இயக்கத்தைக் கண்டு பயந்த ரீடிங் பிரபு இவ்விதம் லட்சியமில்லாது நம்மைச் சிறிதும் மதியாது பேசுவதற்குக் காரணம் சுயராஜ்யக் கட்சியினர் தான் என்பதில் ஐயம் யாது?ஒத்துழையா இயக்கத்திற்குக் கூற்றுவனாக விளங்கியவர் இச்சுயராஜ்யக் கட்சியினரே என்பதை யாம் பன்னிப் பன்னிக்கம் கூற வேண்டு வதில்லை. சுயராஜ்யக்கட்சியின் மூல புருஷராக விளங்கிய ஸ்ரீமான் பட்டேல் இந்தியா சட்ட சபையின் தலைவர் பதவி ஏற்றுக்கொண்டதைப் பற்றியும், பண்டித நேரு ஸ்ரீமான்கள் அரங்கசாமி அய்யங்கார், கெல்கார் இவர்கள் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகளில் அங்கம் பெற்றதைப் பற்றியும் முன்னர் எழுதியுள்ளோம். நாளாக நாளாக இன்னும் கேவலமாகி வருகின்றனர். அரசாங்கத்தினரைக் கெஞ்சவும் முற்பட்டுவிட்டனர்.

பண்டித நேரு அவர்கள் திங்கட்கிழமை கூடிய இந்திய சட்டசபைக் கூட்டத்தில் கனம் முட்டிமன் அரசியல் சம்மந்தமாக கொண்டுவந்த ஒரு தீர்மானத்திற்கு ஓர் திருத்தப் பிரேரணை ஒன்று கொண்டுவந்தார். அதுவும் நிறைவேறியது. இதில் இந்தியாவுக்கு வேண்டும் தேவைகளையெல்லாம் கூறியுள்ளாராம். இப்பிரேரணையில் இவர் என்ன வேண்டுமென அரசாங்கத்தினரை வேண்டுகின்றாரோ அதற்கும் மிதவாதிகள் ஜஸ்டிஸ் கட்சியினர் விரும்புவதற்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாக எமக்கு விளங்கவில்லை. சுயராஜ்யக் கட்சியினரின் தேவை இவ்வளவுதான் என்றால் இத் தேவைகளையெல்லாம் முன்னரே அரசாங்கத்தினரின் வாயால் பெற்றிருக்கலாம். காந்தி அடிகள் ஒத்துழையா இயக்கம் ஆரம்பித்திருக்க வேண்டுவதில்லை. பல தியாகிகள் சிறைக்குச் சென்றிருக்கவேண்டுவதில்லை. வக்கீல்கள் தத்தம் தொழிலை நிறுத்தித் தவிக்கவேண்டுவதில்லை. வாலிபர்கள் பள்ளியை நிறுத்தியிருக்கவேண்டுவதில்லை. இவைகளையெல்லாம் விழலுக்கிறைத்த நீர்போல் ஆக்கிவிட்டனர்.காந்தி அடிகளை பள்ளத்தில் இறக்கி விட்டனர்.

1921-ம் ஆண்டில் சர். சங்கரன் நாயர் தலைமையின் கீழ் பம்பாயில் கூடிய சர்வகட்சி மகாநாட்டின் பொழுதாவது தங்களது விருப்பம் அரசாங்கத்தாரை அண்டிக் கெஞ்சுவது எனத் தெரிவித்திருப்பார்களாயின் அரசாங்கத்தினர் வேண்டுவன செய்வதாகக் கூறியிருப்பார்கள். அப்பொழுதெல்லாம் தங்களது எண்ணங்களை மறைத்து மாறுவேடம் தாங்கிய இவர்கள் இப்பொழுது தங்களது உண்மை உருவத்தைக் காண்பித்து விட்டார்கள். இவர்களால் காந்தி அடிகளுக்கு, காங்கிரஸிற்கு தியாகம் செய்த வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கு ஓர் அளவில்லை. இவர்கள் இந்தியாவின் விடுதலைக்கே பங்கம் வைத்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இக் கட்சியினரை தேச விடுதலைக்குழைப்பவர்கள் என்று சொல்லி மித வாதிகளைவிடவோ, ஜஸ்டிஸ் கட்சியினரை விடவோ மேலென்று கூறுவது எவ்வாறு ஏற்றதாகும்? இவர்களை உண்மைக்கு மாறானவர்கள் என்றேதான் சொல்லவேண்டும். இனியாவது பொதுமக்கள் இவர்கள் மற்றக்கட்சியினரை விட மேலானவர்கள் அல்லது தேசபக்தி மிகுந்தவர்கள் எனவெண்ணி ஏமாறாதிருப்பார்களா?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1925)
Pin It