உப்புத் தண்ணீரில்

இரவெல்லாம் மிதந்துவிட்டு,

பட்டுக்கரை மண்ணில்

பகலினில் இளைப்பாறும்

படகுகளின் தூக்கத்தைப்

பதுங்குகிற ஜோடிகள் கெடுக்கும்...

 

படுக்க வீடின்றிப்

பாதையில் கிடந்துவிட்டு

வெயிலிலே படுத்து

விட்ட தூக்கத்தைத் தேடுகிற

நடைபாதைப் பிச்சைக்காரனை

நாய்வந்து எழுப்பும்...

 

தூக்குச்சட்டியில் கடலையும்

தோளை அழுத்தும் கவலையுமாய்க்

கடந்துபோகிற கந்தசாமியின்

ஒவ்வொரு பார்வையும்

ஓய்வெடுக்க நினைக்கிற

அவன் ஏக்கத்தைப் பகிரும்...

 

பலூன்பொம்மை விற்கிற

பாலுவின் விரல்கள்

பற்றி யிருக்கிற

இழைகளைக் காட்டிலும்

சிக்கலானதாயிருக்கும்

அவன் சொல்லாத துயரம்...

 

எப்படி விலக்கினாலும்

விலகாத  வறுமைதீர,

வார்த்தை மூலதனத்தோடு

வாழ்வுதேடுகிற செண்பகத்துக்குக்

கைத்தொழிலாய்க் கிடைத்ததோ

கைரேகை ஜோசியம்...

 

வண்டியில் ஐஸ் இருக்கும்

வயிற்றினில் பசியிருக்கும்

விற்றபின் வீடுபோகக்

கத்திக்கொண்டிருக்கிற கார்மேகம்,

பசிக்கு உணவுண்ணப்

பலழிந்து இரவாகும்...

 

அத்தனை பேரின்

துயரங்கள் அறிந்தாலும்,

ஆறுதல்சொல்ல

ஆசைப்பட்டும் முடியாமல்,

அனாதையாய் நிற்கிற

என்னுடைய கவலை,

எனக்கு மட்டும்.