தை முதல் நாள் தமிழர்க்குப் புத்தாண்டு! பூத்துக் குலுங்கும் பொங்கல் திருநாள், உலகெங்கும் வாழும் தமிழர்கள் உவந்து கொண்டாடும் தமிழர் திருநாள் ஆகும்.

அறிவுக்கு ஒவ்வாத மதம், கடவுள், சாதி, புராணம் போன்றவற்றை அக்கு அக்காகப் பிரித்து அவற்றின் பொய்மைகளைப் போட்டுடைத்தவர் பெரியார். அப்படிப்பட்ட பெரியார் அறிவுக்கு உகந்த விழாவாகப் போற்றிப் பாராட்டியது பொங்கல் விழாவை மட்டும்தான்.

“தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Havest Festival) என்ற கருத்தில்தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்”. (விடுதலை 30.1.1959)

வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாய்ச் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர் பெரியார். ஓய்வென்பதையே அறியாத விடுதலை வேழம் அவர். வெற்று விழாக்கள், வீண் கொண்டாட்டங்களில் நேரம் பாழாவதை அவர் விரும்புவதில்லை. என்றாலும் பொங்கல் விழாவுக்கு முதன்மை தந்து அவர் போற்றியது ஏன்? அவரே கூறுகிறார்:

“மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகிறது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.”

மேலும் தமிழ் இனத்தின் மொழியை, பண்பாட்டை, கலை இலக்கியத்தைப் போற்றிக் காக்கவும், வரும் தலைமுறையினர்க்கு அவற்றை வாகாகக் கையளிக்கவும் வேண்டுவது நம் வரலாற்றுக் கடன் என்பதும் பெரியார் கருத்தாக இருந்தது. இடைக்காலத்தில் உள்புகுந்த இன எதிரிகள் தமிழர் பண்பாட்டைச் சிதைத்தனர். அக்கேட்டிலிருந்து தமிழரை மீட்டெடுக்கவும் இதுபோன்ற விழாக்கள் தேவை என்று பெரியார் எண்ணினார்.

“கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டின் தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிக மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டு விட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பது கூட இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது.” (பெரியார் சிந்தனைகள், பக்.505, தொகுதி 1 இல் 2)

பெரியார் தன்னுடைய எழுத்துகளிலும் பேச்சுகளிலும் தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பல இடங்களில் பல்லை உடைக்கும் சொற்களால் கண்டித்திருக்கிறார். திருக்குறளை உயர்த்திப் பேசும் பெரியார், தெய்வத்தன்மை பொருந்தியதாகச் சொல்லப்படும் கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களைக் கடுமையாகக் காய்ச்சி இருக்கிறார்.

“நம் புலவர், பண்டிதர், தமிழறிஞர் என்பவர்களுக்குத் தமிழ்மொழி பற்றிய இலக்கியம், இலக்கணம் என்னும் துறைகளில் ஏதாவது அறிவுப் பயிற்சி இருந்தால் இருக்க முடியுமேயொழிய உலகம், சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு, விஞ்ஞானம் என்னும் துறைகளில் அறிவோ ஆராய்ச்சியோ இருக்க முடியுமா என்பது பெரிதும் ஆலோசிக்கத்தக்கதாகும். இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக் கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால், அப்புலவர்கள் தங்களைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்க்கட்டும். புலவரைப் பற்றி என் கருத்து : புலவர் என்றால் சொந்த புத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் கூறுவேன்.” (பெரியார் சிந்தனைகள், பக். 262, தொகுதி 5-இல் 1)

இப்படிப் பெரியார் சினந்து சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழ் இலக்கியங்கள், இதிகாசக் கதைகள் அனைத்தும் ஆரியச் சார்புள்ளவை யாயும், ஆரியக் கருத்துகளைத் தாங்கி நிற்கும் தத்துவத் தூண்களாயும் உள்ளன என்று அவர் சரியாகவே கணித்தார். அதனால்தான் முத்தமிழ் இலக்கியம் என்று போற்றப்படும் சிலப்பதிகாரத்தைக் கூடப் பெரியார் விட்டு வைக்கவில்லை. தமிழர் சமுதாயம் அடியோடு ஆரியமாவதை அவர் அறவே வெறுத்தார்.

‘மனிதர்களுக்கு முன்னேற்ற உணர்ச்சி - சுதந்திர உணர்ச்சி வேண்டுமானால், அவர்களுக்குத் தங்கள் நாடு, சமுதாயம், மொழி, கலை முதலிய உணர்ச்சி இருந்தால் தான் ஏற்படும். அவை ஒன்றும் தமிழனுக்கு இல்லை. தமிழனது நாடு இன்று தமிழ்நாடு ஆகும். தமிழனது சமுதாயம் தமிழர் சமுதாயமாகும். தமிழனது மொழி தமிழாகும். அப்படி இருக்கத் தமிழ்நாடு என்பது இன்று, சித்திரத்தில் இல்லாமல் செய்யப்பட்டாய் விட்டது. தமிழ் நாளுக்கு நாள் மறைந்து கொண்டே வருகிறது. தமிழர் சமுதாயமோ அடியோடு ஆரியமாகி வருகிறது.’ (தமிழ், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு நூல், பக். 13)

பொங்கல் விழா என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை, ஆதாரம் போன்ற எதுவும் இல்லாமல் தை முதல் நாளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வருவதால் பொங்கல் விழாக் கொண்டாட்டங்களை மட்டும் பெரியார் உயர்த்திப் பிடித்தார்.

“அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூசை, தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி, விடுமுறை இல்லாத பண்டிகைகள் கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைபூசம் இந்தப்படியாக இன்னும் பல உள. இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு - ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?” (பெரியார் சிந்தனைகள், பக்.506, தொகுதி 1-இல் 2)

இப்படிக் கூறும் பெரியார் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடி மகிழும் தமிழர்களைப் பார்த்து அறிவு நிலையில் ஆன அடுக்கடுக்கான வினாக்களைக் கேட்டு அசத்தினார். பூமியைப் பாயாகச் சுருட்டிப் போன புராணப் புளுகைத் தன் பகுத்தறிவுச் சம்மட்டி கொண்டு தகர்த்தார்.

“பூமி தட்டையாய் இருந்தால் அல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே! பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்? அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும் தானே பாயாகச் சுருட்டப்பட்டுப் பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும்? அப்படி இருக்க, அவன் பூமியைத் தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரம் ஏது? வேறு சமுத்திரம் இருந்தால் அது எதன் மீது இருந்திருக்கும்? அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியைத் திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரம் எதற்கு? அப்போது அது ஆகாரமாக எதைத் தின்று இருக்கும்?” (பெரியார் சிந்தனைகள், பக்.4083, தொகுதி 4-இல் 2)

இப்படிப் பார்ப்பனர்களால் புகுத்தப்பட்ட புராணக் கதைகளையும், இதிகாசப் பொய்மைகளையும் மக்களிடையே விளக்கி அறிவு கொளுத்திய பெரியார் அறிவுக்கேற்ற பொங்கல் விழாவையும், அறிவுநூல் தந்த திருவள்ளுவரையும் உயர்வாக மதித்தார்.

“திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துகளுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர்கள் யாரும் மறுக்க முடியாத - வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அடங்கி வருகிறது. குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில்தான் கம்பனுக்குக் கூலி கொடுத்துக் கவி பாடும்படி செய்துவிட்டனர், ஆரியப் பார்ப்பனர்கள். வான்மீகி இராமாயணத்தில் தன் இஷ்டம் போல் மாற்றி விட்டான் கம்பன். எனவே தான் அவனைச் சாட வேண்டியிருக்கிறது.” (பெரியார் சிந்தனைகள், பக்.1939, தொகுதி 4-இல் 1)

மானமும் அறிவும் உள்ள மக்களாக தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே பெரியாரின் அடிப்படைக் குறிக்கோள். மானுட இனத்தைப் பிரிக்கும் எந்த வேற்றுமையையும் அவர் கடுமையாக எதிர்த்தார். தமிழரிடையே தோன்றிக் கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி ஆணவத்தைத் தகர்த்தெறியப் போராடினார்.

உலகமயச் சூழலின் கொடும் பிடியுள் சிக்குண்டு, எல்லா நாட்டு மக்களுமே இன்று ஆற்றாது அழுது கண்ணீர் வடிக்கின்றனர். இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் தமிழ்த் தேசியர்களாகிய நாமும் இதற்கு விதி விலக்கானோர் அல்லர். என்றாலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என முழங்கிய கணியன் பூங்குன்றப் புலவனின் கால்வழியினர் நாம். தமிழர் ஒற்றுமைக்கு ஊறு செய்யும் பல்வேறு காரணிகளில் ஒன்றாயுள்ள சாதியத்தை எதிர்த்துச் சமரசமின்றிப் போரிடுவோம்!

போகித் தீயில் வர்க்க வேற்றுமைகளைப் பொசுக்குவோம்!

சமத்துவப் பொங்கலிடுவோம்! 

Pin It