என் மலைகளைப் பெயர்த்து
அந்நியர்களுக்கு..
விற்றான் ஒருவன்
தடுத்தேன்..!
வழிபாட்டுக்கு
இடையூறு செய்வதாக
வதந்தியைப் பரப்பினான்..!

யார் நீ என்றேன்
”அனுமார் பக்தன்” என்றான்.

தாகம் மிகுந்து தவித்து
மயங்கினான் ஒருவன்
தண்ணீர் தெளித்து எழுப்ப
உதவி கேட்டேன்
கடுகடுத்த முகத்துடன்
“காசு கொடு” என்றான்
கடைக்காரன்..!

கூடிக் கொலை செய்ய
திட்டமிட்டான் ஒருவன்
அவனோடு கூடி வாழச் சொல்லி
அறிவுரை சொன்னான்
ஆட்சியாளன்
ஏனென்று கேட்டேன்
”தேசியம் -
செத்து விடக்கூடாது”
என்றான்

போர் விமானங்கள்-
குண்டு மழைப் பொழிந்தது..!
”எங்கும் நிறைந்திருக்கும்
இறைவன் எங்கே?” என்றேன்

குழந்தைகளின்
பிணக்குவியல்களைக் காட்டி
”இங்கே இருக்கலாம்
தேடிப் பாருங்கள்..”
என்றான் ஒருவன்

எப்போதும்
ஏழைகளுக்கு
எட்டாத உயரத்தில்
கட்சிக்கொடிகள்
காற்றில் படபடக்கின்றன

தாய்மொழியில் படிக்கவும்
வாய்ப்பற்ற குழந்தைகளிடம்
வருடந்தவறாமல்
மிட்டாய் கொடுத்து
சுதந்திரம் கிடைத்து விட்டதாக
நம்பச் சொல்கிறார்கள்
நயவஞ்சகர்கள்..!

மிட்டா மிராசுகளுக்கு
வழங்கப்பட்ட சுதந்திரத்தில்
எங்களின் பங்கு
மிட்டாய் சுதந்திரம்..!