இந்தியாவின் மிகப் பிரபலமான மருத்துவர்களில் ஒருவரான பினாயக் சென் தான் கற்ற மருத்துவக் கல்வி மூலமாக வக்கற்றோர், பழங்குடியினர் நிறைந்து வாழும் சத்திஸ்கர் மாநிலத்தில் தொண்டுப் பணியாற்றி வந்தார். மிகவும் சிறந்த இந்திய மருத்துவர்களில் ஒருவர் எனக் கருதப்படும் இவருக்கு சர்வதேச அளவில் பல விருதுகள், பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் இவர் மாவோயிஸ்டுகளுக்கு நகர்ப் பகுதியில் கட்சி அமைக்க பணி ஆற்றினர் என்ற சதிக் குற்றத்தின் அடிப்படையில் கடந்த 2007 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் இருந்து வந்தார்.

உலகம் அறிந்த இந்த மருத்துவர் இந்த வகையில் ஒரு பொய்யான குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவிப்பதைக் கண்டு நாடு முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் அசையாத, இந்திய அரசும் அதை வழி நடத்தும் சிதம்பரம் போன்ற வக்கிர புத்திக்காரர்களும் வெட்கப்படும் படியில் சர்வதேச அமைப்புகள் வன்மையாகக் கண்டித்து இந்தியா ஒரு ஜனநாயக நாடே அல்ல நடப்பது மக்கள் ஆட்சியே அல்ல என்று கண்டனம் தெரிவித்தன. இருபத்தி  இரண்டு நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள், பல உலகப் புகழ் பெற்ற   மருத்துவர்கள் இந்திய அரசை காறித்துப்பி,  போலியான நீதிதுறையை கேவலப்படுத்தி கண்டனம் செய்து ஒரு கடிதம் அனுப்பினர்.

எதற்கும் அசராத சிதம்பரம், இதெல்லாம் இந்திய சட்டப்படி நடைபெறுகிறது என்று சொல்லி வந்தார். பல இந்திய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் தாங்கள் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெருமையாக இந்தியாவின் நாட்டு நிலைமையைப்  பேச வரும்போதெல்லாம் அவமானப்பட்ட பிறகு, வேண்டா வெறுப்பாக பினாயக் சென் ஜாமீனில் வெளி விடப்பட்டார்.

இந்த வழக்கு இப்போது முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சாட்சியும், ஆவணங்களும் இல்லாவிட்டாலும் எல்லாவித சட்ட முறைகளுக்கும் மாறாக அவர் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களை சிறையில் சென்று சந்தித்தார், அவர்களுக்கு மருத்துவம் செய்தார் என்ற ஒரே சான்று அடிப்படையில் அவர் குற்றவாளிதான் என்றும் இதன் மூலம்   இந்திய அரசை அவர் எதிர்த்துப் போரிட்டார் என்றும் முடிவு செய்துள்ளது.

அவர் சந்தித்து வந்த - சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யால்  நோய்வய்ப்பட்டவர்; வயதானவர்.  பல காலமாக சிறையில் வாடி வருபவர். கைதி எவ்வாறாயினும், எல்லா சந்திப்புகளும் அனுமதி பெற்ற பின்பே நடக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பினாயக் இந்தச் சந்திப்பின்  மூலம்  மாவோயிஸ்ட் தலைவர் நாராயணுடன் பேசிய அனைத்தும் சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையிலே நடைபெற்றது. எல்லா சந்திப்புகளும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டடும்  உள்ளது. அப்படியிருக்க, பினாயக் மாவோயிஸ்டுகளுடன் சிறையில் சதி செய்ததாகவும் அவர்களுக்கு செய்தித் தொடர்பாளராக பணி ஆற்றியதாகவும் முடிவுக்கு வந்திருக்கிறது நீதிமன்றம்.

தனிமைச் சிறையில் பல காலமாக இருந்து வரும் வயதான நடமாடமுடியாத முதியவரான மாவோயிஸ்ட் நாராயணன்  உலகப்புகழ் பெற்ற ஒரு மருத்துவரான பினயக்குடன் சேர்ந்து சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் சதி செய்தார் என்ற குற்றத்தை இந்தியாவின் ஜனநாயக நீதிமன்றம் கண்டுபிடித்து தண்டனை வழங்கியுள்ளது.  அவருக்கு எதிராக 91 சாட்சியங்களில் ஒன்று கூட ஏற்புடைய சாட்சியமே இல்லை ஆனாலும், நீதிபதி போலீஸ் சொன்னபடி சதி வழக்குக்கு எந்த சாட்சியும் தேவை இல்லை என்று ஒத்துக்கொண்டார். இதன் அடிப்படையில் பினாயக் உள்பட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு வழங்கி மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இது எப்படி சாத்தியம் என்று திகைப்படையாதீர்கள்.

இது போல பல வழக்குகள் இருக்கின்றன, எல்லாவற்றுக்கும் நமது சிதம்பரம் தான்  மூளையாக இருந்து செயல்படுபவர்.  இலங்கைத் தமிழர்கள், நாகர்கள், மீஜோக்கள், மணிப்புரிகள் என நாடு முழுவதும் நர வேட்டையடுவதையே பணியாகக் கொண்டு அறிவாளிகளை பல முறை எச்சரித்த உள்துறைச் செயலர் கோபால் கே.பிள்ளை மற்றும் சிதம்பரம் அமைத்துள்ள மாபியா கூட்டணியின் திருப்பணியில் இதுவும் ஒரு காட்சி.

அவ்வளவுதான். இது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பினாயக் போன்றோரின் அறிவு நாட்டு மக்களுக்குப் பயன்படுகிறது, செட்டிநாட்டு சிதம்பரத்தின் அறிவு பண முதலைகளின் காலை நக்குவதற்காகிறது. சிதம்பரம் போல பணத்துக்காக அலையாமல் பிறர்க்குதவும் மருத்துவராக பினாயக் இருப்பதுதான் அவர் செய்த தவறு. சிதம்பரம் அனைத்து அறிவாளிகளுக்கும் இந்த வழக்கு மூலம் தெரிவிப்பது இது தான். "அறிவாளிகள், விஞ்ஞானிகள் அவரவர் வேலையைத்தான் செய்யவேண்டும்".

சிறையில் உள்ள முதியவர்களைப் போய் பார்த்து மருத்துவம் செய்தால், பேசினால் என்ன கிடைக்கும் என்று சிதம்பரம் இந்த வழக்கு மூலம் முடிவு செய்து அறிவித்து உள்ளார்.

இதுதான் இன்றைய இந்தியாவின் நீதி!! ஜனநாயகம்!!

Pin It