girl_243இன்று நிச்சயம்
இறந்து விடுவதென தீர்மானித்துக் கொண்டேன்.
அர்த்தமற்ற வாழ்க்கையை
கற்பனைகளை மட்டும் சுமந்தபடி
வாழ்வதில் அர்த்தமில்லை.
எனது எல்லா அடையாளங்களும்
அழிக்கப்படுகின்றன.
எனது எல்லா உடைமைகளும்
ஆக்ரமிக்கப்படுகின்றன
என் நேரங்களும்.
எதையும் எவரிடமும் சொல்வதில்
சிக்கல்கள் பல.
எதிர்மறையாய்,
இருவிதமாய்,
பலவிதமாய்
புரிந்து கொள்ளப்படுகின்றன
என்குறித்த எல்லாம்.
இருப்பதில் பயனில்லை.

எப்படியும் இறந்தாக வேண்டும் இன்றே.
புரிதலற்ற காதல்.
அர்த்தமற்ற கோபம்.
கை நழுவிப் போன நட்பு.
நாடகம் முடிந்த வெற்று அரங்கமென
மனம்.
எந்த நினைவுகளும் வேண்டாம்.
எல்லாம் தொலைந்து போகட்டும்.
அலைகடலின் ஊடாட்டமென
நான் துரத்தியடிக்க
அது வந்து மோத
நினைவுகளால் அலைகழிக்கப்படுகிறேன்.
வேண்டாம் எதுவும்.
கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
இறந்துவிட வேண்டும்.
இறுதியாக
அம்மாவின் மடி வேண்டும்.
நிச்சயம் கிடைக்காது.
ஆனாலும் கடைசி ஆசை அது.
அலாரம் அடித்தது.
சோம்பல் முறித்து எழுந்து
கையில் பேஸ்ட் பிரஷ்ஷுடன்
கண்ணாடிமுன் நின்று பார்க்கிறேன்
படுக்கையில்
சாந்தமான முகத்தோடு
என் பிணம்.

- மனுஷி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It