எங்கள் குருதியை வேர்வையாய் சிந்தி
உழுது உழைத்ததினால்
நீ உயர்ரக அரிசியில் பசியாறினாய் 
 
ஒட்டிய குடலோடும் கிழிந்த ஆடையோடும்
துணிகள் நெய்தோம்
நீ விதவிதமான பட்டுடுத்தி
உலா வருகிறாய்
 
கரடு முரடு நிலங்களை சமன் செய்து
கட்டாந்தரையில் கண்ணயர்ந்தோம்
வானுயர்ந்த மாளிகைக்குள்
உல்லாசமாய் வாழ்கிறாய்
 
பள்ளம் மேடுகளை சமன் செய்து
சாலைகள் அமைத்தோம்
அதில் இறக்குமதி வாகனங்களில்
ஊர் மேய்கிறாய்
 
இத்தனை செய்தும்
இன்னும் வறுமை பட்டியலில் நாங்கள்
கோடீசுவர பட்டியலில் நீ
 
இன்னும் ஏழ்மையில் உழல்கின்றோம் நாங்கள்
கோடிகளில் புரள்கிறாய் நீ
 
உழைத்து உழைத்து
உருக்குலைகின்றோம் நாங்கள்
உழைப்பால் உயர்ந்தவர்
பட்டம் பெறுகிறாய் நீ
 
- ம.ச.பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கைப்பேசி: 9884455302