uthapuram_331எத்தனை முறை
எழுதுவது
எங்களின் துயரத்தை?
படித்தோ, படிக்காமலோ
கிழித்தெறியப்பட்டுள்ளது
இதுவரை
எங்களின் கோரிக்கை.

எழுதி எழுதி தீராத
எங்களது சோகத்திற்கான முடிவுரையை
இனி வீதிகளில் இறங்கி தான்
எழுதவேண்டியுள்ளது.

உத்தமபுரமாம் அது.
அப்படித்தான் சொல்கிறார்
தமிழக முதல்வர்.
அரசு திறந்து விட்டபாதையில்
நாய்கள் கடக்கலாம்.
நாங்கள் கடக்கக்கூடாதாம்.
இரவு , பகல் பாராது
கண்விழித்து
காவல்துறை பணி செய்கிறது.
உத்தப்புரத்து தலித்துகளை
சாதி பார்த்து தெருவைக் கடந்து போ
என்று சொல்வதற்காக. . .

உடைத்தும் நொறுங்காத
ஆணவம்
வேலி போடுகிறது
தோட்டக்காரனையே
உள்ளே போகாதே என்று.
 
ஒடித்து , ஒடித்து
வளர்க்கப்படும்
முருங்கை மரத்தைப் போல
போற்றிப் பாதுகாத்து
வளர்க்கப்படுகிறது
சாதீயம்.
அது கற்பிக்கும் பாடம்
மிக மிக கேவலம்.

மற்றவர்களுக்கு
பிள்ளை பிறந்தால்
அதற்குப் பெயர் குழந்தை.
தலித்துகளுக்கு பிறந்தால்
அதற்குப் பெயர்
கீழ்சாதி மகன்.

உயர்த்திக்கட்டப்பட்ட
உத்தப்புரம் சுவரின் உச்சியில்
இருப்பது செங்கற்கள் அல்ல.
சாதித்திமிர்.

வர்ணாசிரமத்தின்
வளர்ப்புப் பிள்ளையாய் மாறிய
காவல்துறையால்
காவிகளின் வெறியோடு
எங்கள் மீது
நிகழ்த்தப்பட்டது
நூற்றாண்டு வெறி.

பழக்கப்பட்ட வேட்டைநாய்கள்
அவிழ்த்து விடப்பட்டதால்
வீதியில் எங்கும்
சிந்திக்கிடந்தது
சமூகநீதியின் குருதி.

கூலி உயர்வு கேட்ட
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின்
ரத்தத்தில் தாமிரபரணி நதி
மூழ்கடிக்கப்பட்ட வரலாறுகளை
மீண்டும் மீண்டும்
எழுதுகிறது காவல்துறை
தனது அதிகாரங்களின் மூலம்.
நேற்று
கொடியன்குளத்தில்
நாலுமூலைக்கிணற்றில்
சங்கரலிங்காபுரத்தில்
காங்கியனூரில்
ரெட்டணையில்
இன்று
மதுரையில்.

ஒவ்வொரு முறையும்
குண்டாந்தடிகள்
எங்கள் மீது பாயும் போதும்
போராட்டங்களை
சாவுகள் மூலமாக
சத்தியமாகத் தோற்கடிக்க முடியாது
என்ற புரட்சிகீதம் இசைத்துக் கொண்டேயிருக்கிறது
எங்கள் இதயங்களில்.

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)