perarivalan_360கிடைக்குமிடம் : திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்

11, கே.கே.தங்கவேல் தெரு, பெரியார் நகர்

சோலையார்பேட்டை - 635 851

தொலைபேசி : 04179 - 241503

சிறையிலிருந்து எத்தனையோ புகழ்பெற்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. புகழ் பெற்றவர்கள், பெரிய தலைவர்கள், போராளிகள் எனப் பலரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து புத்தகங்கள் எழுதி இருக்கின்றனர். அவைகள் பெரும்பாலும், உலக சரித்திரங்களாகவும், தன் வரலாறு களாகவும், விடுதலைப் போராட்டத்தைச் சித்தரிக்கின்ற நூல்களாகவுமே அமைந்தன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நூல் ஒன்று சிறையறையிலிருந்து அதுவும் தூக்குக் கொட்டடியிலிருந்து வெளி வந்துள்ளது. அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்பட்ட நீதிக்கு உயிர்கொடுத்து, தன் உயிரைக் காக்கப் போராடும் ஓர் இளைஞனின் முறையீட்டு மடல்தான் இந்த நூல்.

இராஜீவ் கொலை வழக்கில் பிணைக்கப்பட்டுத் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக் கப்பட்டுள்ள அ.ஞா.பேரறிவாளன் எழுதிய “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்...” என்னும் இந்நூல் உயிரின் துடிப்பை, உயிர் மூச்சின் வாசத்தைச் சுமந்து வந்திருக்கிறது.

19 வயது இளைஞனாக தங்களுடைய ஒரே மகனை விசாரணைக்கென்று காவல் அதிகாரிகளுடன் அனுப்பிவைத்த பெற்றோரின் நம்பிக்கைத் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டன. அகவை முதிர்ந்த பெற்றோர் படும் வேதனைகளை மாற்றிவிடத் துடிக்கும் ஒரு மகனுடைய சட்டப் போராட்டத்தின் எழுத்து வடிவமே இந்த முறையீட்டு மடல். தனக்கு வழங்கப்பட்டுள்ள மரணதண்டனை எந்தவகையிலும் நியாயமானது அன்று என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைத் தருகிறார் அறிவு. நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட சான்றுகளின் அடிப்படையிலேயே தன்னுடைய வாதங்களை வைத்திருப்பதாகக் கூறுகிறார். அவருடைய வாதங்கள் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை முத்துமுத்தாக எடுத்துக் காட்டுகின்றன. ஒரு தேர்ந்த சட்ட வல்லுனரைக் காட்டிலும் ஒரு படி மேலேயே தன்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்து வைத்துள்ள ஆளுமையைப் பார்க்கும்போது பேரறிவாளன் என்ற பெயர்ப்பொருத்தம் குறித்து எந்த வியப்பும் நமக்கு ஏற்படவில்லை. அதோடு பெரியாரின் பிள்ளைகள் ஆதாரமின்றி வாதிடுவது இல்லை. பெரியாரின் பேரப்பிள்ளையின் நேர்மைத்திறம் இந்நூல் முழுவதும் நிறைந்திருக்கிறது.

பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டையும், அதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் சொன்னால் மனநிலை பாதிக்கப்பட்டவன் கூட நகைப்பதற்கு இடமிருக்கிறது. வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் கூட பெட்டிக் கடைக்குப்போய் வாங்கக்கூடிய 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி) வாங்கிக் கொடுத்த குற்றத்திற்கு மரணதண்டனை. முதலில் வெடி குண்டு நிபுணனாகச் சித்தரித்து, பிறகு மின்கலம் வாங்கித்தந்ததாக முடித்திருக்கிறது மத்திய குற்றப்புலனாய்வுத் துறை. இதற்கு அவர்கள் சான்றாகச் சொல்வது பேரறிவாளனின் கல்வித் தகுதியை. மின்னணுவியலில் பட்டயப் படிப்புப் படித்தவர் அறிவு. எனவே அவர்தான் வெடிகுண்டு தயாரித்துக் கொடுத்தார் என்பது புலனாய்வில் தெரியவந்த உண்மை என்கிறது சி.பி.ஐ. அதே புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி ரகோத்தமன், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், குமுதம் வார ஏட்டிற்கு அளித்த நேர்காணலில், “தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட்டைச் செய்து கொடுத்த நபர் யார் என்பதற்கு இன்றுவரை விடை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி தன் மீதான குற்றச்சாட்டு எவ்வளவு பலவீனமானது என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறார்.

கலைஞரின் பாராசக்தி படத்தில் நீதிமன்றக் காட்சியில் நடிகர் திலகம், “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது” என்று தன்னுடைய வாதத்தைத் தொடங்குவார். ஆனால் பேரறிவாளனின் வழக்கு உண்மையிலேயே ஒரு விசித்திரமான வழக்குதான். பொதுவாக ஒரு வழக்கில் குற்றம் நிருபிக்கப்படவில்லையென்றால் குற்றம் சுமத்தப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்துவிடுவது நியதி. இந்த வழக்கில், குற்றம் நிருபிக்கப்படாத நிலையிலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

அதோடு, தடா சட்டத்தின் கீழ் இந்தச் சதி வழக்கு வராது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பின்னரும், தடா சட்டத்தின் 15(1) பிரிவின் படி பதிவுசெய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ள இந்தக் கருத்துகளையே அலசி ஆராய்ந்து, அதிலுள்ள முரண்பாடுகளை சரியான வாதங்களால் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் அறிவு.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என்பதைத் தாங்களேதான் நிருபித்துக்கொள்ள வேண்டுமாம். குற்றம் சுமத்துவது மட்டும்தான் அவர்களுடைய வேலை. குற்றமற்றவர் என்று நிருபிப்பது நமது தலைவலி. இப்படி ஒரு சட்டத்தால்தான் அறிவின் தலைக்கு மேலே தூக்குக் கயிறு தொங்கவிடப்பட்டுள்ளது.

 இது அரசியல் காரணங்களால் முற்றிலும் பொய்யாகப் புனையப்பட்ட ஒரு பொய் வழக்குதான் என்பதைப் படிக்காதவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சான்றுகளை அறிவு இந்நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். காவல் துறைக் கண்காணிப்பாளர் தியாகராசன் பதிவு செய்ததாகச் சொல்லப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தில் அவருடைய பெயருக்குப் பதிலாக ராபர்ட் பயஸின் பெயர் எழுதப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் ஏற்கனவே எழுதிக் கொண்டுவந்த வாக்குமூலத்தில் தங்களுடைய கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.

தான் குற்றமற்றவன், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிக்குப் புறம்பானவை என்பதை இதை விடச் சிறப்பாக யாராலும் விளக்கிவிட முடியாது. இருந்தும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. 19 ஆண்டுகள் சிறை வாசம் முடிந்து 20 ஆம் ஆண்டு தொடங்கி விட்டது.

“ஒருவர் மரணதண்டனையை எதிர் நோக்கி மூன்றாண்டுகளுக்கு மேல் அந்த அச்சத்திலேயே கிடக்க நேரிட்டால் அவரைத் தூக்கிலிட முடியாது. தண்டனையைக் குறைத்தாக வேண்டும்” என்கிறார் நீதியரசர் சின்னப்ப ரெட்டி.

மூன்றாண்டுகள் அல்ல 19 ஆண்டுகள் மரணத்தின் வாயிலிலேயே நிறுத்திவைக்கப் பட்டுள்ளார் பேரறிவாளன். அவர் மட்டுமன்று, அவருடைய வயோதிகப் பெற்றோரும் அதற்குக் கொஞ்சமும் குறையாத மன வேதனையுடனே மகனின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர்.

மரணதண்டனை மனிதத் தன்மையற்ற செயல் என்பதை எத்தனையோ நாடுகள் உணர்ந்துவிட்டன. காந்திதேசம், அகிம்சா பூமி என்று சொல்லப்படுகின்ற இந்தியா இன்னும் உணராமல் இருப்பது வேதனை. ஜுன் 15 ஆம் தேதி 8 பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கருணை மனு பிப்ரவரி 23 ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது (தினமணி : 28.06.2010)

பேரறிவாளனின் கருணை மனுவுக்கு வயது பத்தாண்டுகள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. நீதியரசர் கிருஷ்ணய்யர் உள்ளிட்ட மனிதநேய மிக்கவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும், மரணதண்டனைக்கு எதிரான வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டும் எதற்காக இந்த பாராமுகம்?

பேரறிவாளனின் இந்த நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் அதன் உண்மையால் உந்தித்தள்ளப்பட்டு அவரின் விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டும். தண்டணை குறைப்பன்று நாம் கோரவேண்டியது முழுமையான விடுதலை. அதற்கு முழுத் தகுதியும், உரிமையும் பேரறிவாளனுக்கு இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது அவருடைய தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு கோரிக்கை மடல் என்னும் இந்நூல்.

- இரா.உமா

Pin It