சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தாக்கல் செய்த மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு கேபிள் டிவிக்காக தான் எடுத்த நடவடிக்கைகாக தன்னைப் பலிவாங்கும் நடவடிக்கையோடு, சோதனை என்ற பெயரில் தன்னைத் தொல்லைப்படுத்துவதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, புதுத்தொலைக்காட்சி துவங்குவதற்கு முன் சுமங்கலி கேபிள் விஷனுக்கு எதிராக உடனடியாக அரசு கேபிள் டிவி துவங்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்விகளுக்குப் பின் மறைந்து கிடக்கிறது உமாசங்கர் மீது தொடரும் நடவடிக்கையின் மர்மம்.

கடந்த 1990-ஆம் ஆண்டு இந்திய அரசுப்பணியில் சேர்ந்த சி.உமாசங்கர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 1992-ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அன்றைய காலக்கட்டத்தில் சூறாவளி நிவாரணப்பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளைத் தட்டிக்கேட்டதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அவர் மாறுதல் செய்யப்பட்டார். ஒரு நேர்மையான அதிகாரியின் மக்கள் பணி இப்படித்தான் துவங்கியது. இதனைத் தொடர்ந்து 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மதுரையில் அவர் கூடுதல் ஆட்சியராகப் பணிபுரிந்தார். அப்போது, அதிமுக அமைச்சராக இருந்த செல்வகணபதிக்கு எதிராக சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கைத் தொடர்ந்தார். இதனால் அக்டோபர் 1995-ம் ஆண்டு அக்டோபரில், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் கூடுதல் இயக்குநராகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு ஜூன் 1996-ஆம் ஆண்டு இணை கண்காணிப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அப்போது முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

ஆனால், அரசு தக்க நடவடிக்கை எடுக்காததால் மனம் நொந்த உமாசங்கர், தன்னை அப்பதவியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி 1999-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்த சமயத்தில் தான், இ-கவர்னர்ஸ் எனப்படும் அரசு நிர்வாகத்தை கணினிப்பொறியாக்குதல் என்ற திட்டத்தை அங்கு அறிமுகப்படுத்தினார். குஜராத்தில் சோனால் மிஸ்ரா, ஆந்திராவில் சஞ்சய் ஜாஜூ ஆகியோர் போல் தமிழகத்தில் இத்திட்டத்தின் முன்னோடியாக உமாசங்கர் திகழ்ந்தார்.

இந்தியா பேன்ற வளரும் நாடுகள் ஏன், கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருளை இ-கவனர்ஸ் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட கணினிப் பொறித்திட்டத்தில் உபயோகிக்க வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பெங்களூருவில் கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச்-20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய கட்டற்ற மென்பொருள் மாநாட்டில் நிகழ்த்திய உரையில், “ஏன் மாணவர்கள் கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருளை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அது எவ்வாறு மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது” என்றும் மாநாட்டில் குறிப்பிட்டார். ஜூன் 2001 வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அவர் 2001-ல் ஒழுங்குமுறை ஆணையராக சேலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு 2001 முதல் 2006-வரை பணியாற்றிய போதும் இ-கவனர்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப தளத்தில் என்ன நடக்கிறது என்பதை மிகவும் உன்னிப்பாக கவனித்ததோடு, அத்தியாவசியத் தலையீடுகளையும் செய்தார். 2005-ஆம் ஆண்டு ஏப்-27 ந் தேதி உமாசங்கர், என்ஐஎஸ்ஜி(National Institute of Smarat Goverment) யின் தகவல் மற்றும் தொழில்நுட்ப முதன்மை செயலாளராக இருந்த சத்திய நாராயணுக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதன் தலைப்பு “சத்தியநாராயணா அவர்களே! நீங்கள் ஒரு ஊழல் பேர்வழியா?“.

ஆந்திர பிரதேசத்தின் சத்தியநாராயணா தகவல் மற்றும் தொழில்நுட்ப முதன்மை செயலாளராக இருந்த போது அதிகமான திட்டங்களை ஒரு கம்பெனிக்கு கொடுத்தாகவும், அதில் அவருக்கு சட்டப்பூர்வமற்ற தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும், அதற்கான பதிலை 7 நாட்களுக்குள் தனக்கு அனுப்பும்படி அவர் இமெயில் கூறியிருந்தார்.

உமாசங்கர் போன்ற அதிகாரி, இன்னொரு அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை வைப்பது சரியல்ல என ஸ்ரீவத்சவா கிருஷ்ணா என்ற மற்றொரு அதிகாரி உமாசங்கருக்கு பதில் எழுதினார். அப்போது அந்த அதிகாரி, அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன்னில் உள்ள உலகவங்கியில் டெபுடேசனில் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட 2006-ஆம் ஆண்டு உமாசங்கருக்கு மீண்டும் தகவல் தொழில்நுட்பத்த்தில் இருந்த திறமையின் காரணமாக எல்காட் நிறுவனத்தின் எம்டியாக நியமிக்கப்பட்டார். அப்போது அங்கு நடைபெற்ற ஒரு ஊழலை அவர் கண்டுபிடித்தன் காரணமாக பழிவாங்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இன்னமும் நிலவுகிறது.

எல்காட் நிறுவனத்திற்கு எம்டியாக உமாசங்கர் நியமிக்கப்படுவதற்கு முன்பே நெட் நிறுவனமும், எல்காட்டும் கூட்டாக எல்நெட் டெக்னாலஜி லிமிடெட் என்ற நிறுவனத்தைத் துவங்குகின்றன. இதில் எல்காட்டின் பங்கு 26 சதவீதம், நெட்டின் பங்கு 24 சதவீதமாகும். மற்றவைகள் பொதுப்பங்குகள் ஆகும். கடந்த 2004 ஆம் ஆண்டு எல்நெட் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம் இடிஎல் இன்பெரஸ்ரெக்சர் என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கிறது. இது எல்நெட் டெக்னாலஜி நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனமாகும். இதில் எல்நெட் டெக்னாலஜி லிமிடெட் சொத்துக்களைக் காட்டி அதிக கடன் வாங்கப்படுகிறது. இடிஎல் இன்பெரஸ்ரெக்சர் நிறுவனத்திற்கு பள்ளிக்கரனையில் 18 இலட்சம் சதுர அடி சொந்த நிலம் உள்ளது. இதன் சொத்து மதிப்பு 700 கோடி ரூபாயாகும்.

எல்நெட் டெக்னாலஜி லிமிடெட் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு இயக்கப்பட்ட இடிஎல் இன்பெரஸ்ரெக்சர் நிறுவனம், எல்நெட் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்தது என்பது உமாசங்கருக்கு மர்மமாகவே இருந்தது. இதை அறியும் பொருட்டு தரமணியில் உள்ள இடிஎல் இன்பெரஸ்ரெக்சர் அலுவலகத்தின் கோப்புகைளத் தேடியும் உண்மை அறியும்படியான விபரங்கள் கிடைக்கவில்லை. இடிஎல் இன்பெரஸ்ரெக்சர்ரின் சேர்மன் என்ற முறையில் 2008-ஆம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி நடைபெறவிருந்த இடிஎல் இன்பெரஸ்ரெக்சரின் வருடாந்திரக் கூட்டத்தில் கம்பெனி செயலாளர் மூலமாக ஒரு சிறப்புத்தீர்மானத்தை சுற்றறிக்கையாக பங்குதாரர்களிடம் விடச்சொன்னார். உண்ணாமலை தியாகராஜர் என்பவரை இடிஎல் இன்பெரஸ்ரெக்சரின் எம்டி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே அந்த தீர்மானமாகும். இதன் விளைவாக உமாசங்கர் எல்காட் எம்டி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி அரசு கேபிள் டிவியின் எம்டியாக நியமிக்கப்பட்டார். அரசு கேபிள் டிவிக்கு எதிராக சன் குழுமத்தின் சுமங்கலி டிவியின் நடவடிக்கைகளை உமாசங்கர் கண்டித்தார். 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் அலுவலகத்திற்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும், சுமங்கலியின் சட்டவிரோத செயல்களை விவரித்தும், அதன்படி நடவடிக்கை எடுக்கும்படியும் கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு ஜன-7 ந்தேதி முதல்வர் கருணாநிதிக்கு, உமாசங்கர் ஒரு கடிதம் எழுதினார். அரசு கேபிள் டிவியைக் காப்பாற்ற வேண்டுமானால், சுமங்கலி கேபிளை அரசுடமையாக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறியிருந்தார்.

இதனையொட்டி ஜன-19ந்தேதியே உமாசங்கருக்கு அரசு ஒரு மெமோ கொடுத்தது. உமாசங்கர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய மனைவிக்கு Tessolve என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று கொடுத்ததகாவும், அதன் மூலமாக Tessolve நிறுவனம் சில அரசாங்க சலுகைகளைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை மறுத்த உமாசங்கர், மதுரை தகவல் தொழில்நுட்ப பூங்காவில் Tessolve -வுக்கு கொடுக்கப்பட்ட 2.5 ஏக்கர் நிலம் கேபினட்டின் ஒப்புதலுக்குப் பிறகே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்-28ந்தேதி வழங்கப்பட்டது எனவும், 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்குச் சொந்தமான TIICயிடம் Tessolve கடன் கேட்ட போது, உமாசங்கர், தன்னுடைய மனைவி Tessolveவிடம் வேலைபார்ப்பதாக அரசாங்கத்திற்கு தெரிவித்ததாகவும் Tessolveவுக்கு அந்தக்கடன் மறுக்கப்பட்டதாகவும் பதில் எழுதினார்.

இது போன்ற அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அவருக்கு இந்திய அரசாங்கத்தில் கிடைக்க இருந்த இணை செயலாளர் பதவி பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜன-23ல் உமாசங்கர் சிறுசேமிப்புத்துறை ஆணையராக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தான் 2010-ஆம் ஆண்டு மே-6 ந்தே உமாசங்கர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யமால் அரசு விசாரணைகளை ஆரம்பித்தது எனக் கூறப்படுகிறது. ஜூன் 6 ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் படி தன்மீதுள்ள நிரூபணமாகாத குற்றங்களை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படியும், வழக்குப்பதிவு செய்யாமல் டிஎஸ்பி பதவியிலிருக்கும் ஒருவரைக் கொண்டு தன்னை விசாரிப்பது, அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என உமாசங்கர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவருக்குச் சாதகமாகவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய அமைச்சராக இருக்கும் ஆ.ராசா செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த போது, அவர் தலித் என்பதால் பழிவாங்குவதற்காக புகார் எழுகிறது என முதல்வர் கருணாநிதி கூறினார். ஆனால், அவருடைய ஆட்சியில் அரசு நிர்வாகம் சரியாக நடக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பல்வேறு பணிகளுக்கு பந்தாடப்பட்டு வரும் உமாசங்கரும் ஒரு தலித் தான் என்பதை முதல்வர் அறியாமல் இருக்கமாட்டார். பழிவாங்கும் நோக்கோடு முதலாளிகள் ஒன்று சேர எடுக்கும் முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கப்போகிறதா இல்லையெனில் பழிவாங்கப்பட்டவர் பக்கம் நிற்கப்போகிறதா என்பது தான் தற்போது சமூகத்தின் முன் நிற்கும் கேள்வியாகும்.

- ப.கவிதா குமார், ச.கார்த்திகேயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It