நாடாளுமன்றத் தேர்தலும் ஓய்ந்தாகி விட்டது. அமைச்சர் பதவிகளுக்கான கூட்டணிக் கட்சிகளின் போராட்டங்களும் அவரவர்களுக்கான பங்குகளைப் பெற்றவுடன் முடிவுக்கு வந்துவிட்டது. காசு பார்ப்பதற்கும், பார்த்த காசை தக்க வைத்துக் கொள்வதற்கும் தோதுவான கறக்கும் அமைச்சகங்களுக்குத்தான் போட்டா போட்டி. கல்வி, சுகாதாரம், ஒலிபரப்பு, போன்ற இன்னும் பிற சேவை சார்ந்த அமைச்சகங்களை யாரும் சீண்டுவாரில்லை. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு பெயரளவிலாவது அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரகடனத்திலும் பொது அறிவிக்கைகளிலும் வாக்குறுதியோ அல்லது புதிய திட்டங்களையோ அறிவிப்பர்.

ஆனால் அந்தோ பரிதாபம்! தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்தான் எவ்வித வாக்குறுதிகளும் வளர்ச்சி திட்டங்களும், சீர்திருத்தங்களும் தேவைப்படாத ஒரு துறையாக ஆள்வோராலும், ஆளப்படுவோராலும் பார்க்கப்படுகின்றது.

வளர்ச்சியடைந்த, வளர்ந்து கொண்டிருக்கின்ற மனிதத்திரளின் நாகரீக, கலை, பண்பாட்டு சமூக முதிர்ச்சியை வெளியுலகுக்கு பறைசாற்றவும், பரிமாறிக் கொள்ளவும் தேவையான ஒரு தூதுவரின் பணியை ஒலி, ஒளிபரப்பு ஊடகங்கள் நிறைவு செய்கின்றன என்றால் அது மிகையில்லை.

ஆனால் நம் பழம்பெருமை மிக்க, பன்முக பண்பாடுடைய இந்தியத்திரு நாட்டின் கலை, பண்பாட்டை, எந்த அளவிற்கு சரியான முறையில் உரிய விகிதத்தில் வெளிப்படுத்துகின்றது. அகில இந்திய வானொலி? என்பது நமது கேள்விக்கும், ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டிய விஷயமாகும்.

அ.இ.வா.யின் குறைகள்

இது இடஒதுக்கீட்டின் காலம். அரசு, தனியார் துறைகளில் நாட்டின் அனைத்து சமய, இன, பால் அடிப்படையில் உரிய விகிதாச்சாரத்திற்கு உரிமை கோரும் மகிழ்வு தரத்தக்க போக்கு உருவாகியிருக்கிறது.

ஆனால் நம் வரிப்பணத்தில் இயங்கும் அகில இந்திய வானொலி (அ.இ.வா.) யின் அன்றாட நிகழ்ச்சிகளை கவனிக்கும்போதுதான் அது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, கலை, பண்பாட்டை பிரதிபலிக்க வில்லை, மாறாக மிகச்சிறுபான்மையாக உள்ள உயர்சாதியினரின் கலை, பண்பாட்டின் மொத்த பரப்புரையாளராக மட்டுமே பணிபுரிவது விளங்கவரும்.

கர்நாடக சங்கீதம், ஹிந்து°தானி இசை போக அரசின் செயல்படாத திட்டங்களைப்பற்றி வாய் ஓயாத பரப்புரை என்று அ.இ.வா. வின் அன்றாட நிகழ்ச்சி நிரல் கழிகிறது.

இத்துடன் உப்புசப்பில்லாத மெல்லிசை, வழமையான திரைஇசை என ஊசிப்போன உப்புமா வகையறாக்களை பரிமாறும் பரிதாப விடுதியாக காட்சியளிக்கிறது அ.இ.வா.

சென்னை வானொலி நிலையத்தைத் தவிர தமிழகத்தின் மற்ற வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் குரலில் சுரத்தே இருப்பதில்லை.

நடுநிலையான, சூடான செய்திகள், சமூக அரசியல் பிரச்சனைகளை அதன் அடிஆழம் பரை நுணுக்கிப் பார்க்கும் கூரிய விமர்சன - ஆய்வு நிகழ்ச்சிகள், சமகால தலை சிறந்த இலக்கியங்கள், இலக்கிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள், மக்களின் அறிவியல் கண்ணோட்டங்களை வளர்த்தெடுக்க உதவும் நிகழ்ச்சிகள், தேசிய பன்னாட்டு விருது பெற்ற நாடகங்கள், மக்கள் பிரச்சனைகளை அரசு அலுவலர்களிடம் எடுத்துச் செல்லுதல் என மக்களுக்காக மக்களோடு பயணிக்காமல் கெட்டி தட்டி நிற்கின்றது அ.இ.வா.

சமய பாரபட்சம்

இந்தியத் தாயின் புதல்வர்களில் ஹிந்து, மு°லிம், கிறி°தவர், சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, இயற்கை வழிபாட்டினர், முன்னோர் வழிபாட்டினர், சிறு தெய்வ வழிபாட்டினர், நாத்திகர் என பல்வேறு சமயங்களை கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் நல்லிணககத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நாடு இவர்களுக்கு உரியதைப் போலவே இவர்களின் வரிப் பணத்தைப் பெற்று இயங்கும் வானொலியும் இவர்களுக்கு சொந்தமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் பல்சமய கோட்பாட்டு மக்களின் நம்பிக்கைகளை நமது அ.இ.வா. பிரதிபலிக்கின்றதா? என்ற கேள்விக்கு இல்லையென உறுதிபட உரைக்கலாம். அ.இ.வா.வின் அன்றாட நிகழ்ச்சி நிரலில் ஹிந்து சமயம் தவிர்ந்த பிற மத கோட்பாட்டாளர்களின் நிகழ்ச்சிகள் எதுவுமே இடம் பெறுவதில்லை.

தீபாவளி, பொங்கல் போன்ற இன்னபிற ஹிந்து சமய திரு நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை  ஒலிபரப்பி ஹிந்து சகோதர பெருமக்களின் இதயங்களை குளிர்விக்கும் அ.இ.வா. சேவையை நாம் பாராட்டும் அதே வேளையில் மு°லிம், கிறி°தவ சமயங்களின் பண்டிகை நாட்களில் அதைச் சிறப்பிக்கும் வகையில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒலிபரப்பாமல் புறக்கணிப்பதை நாம் தட்டிக்கேட்க வேண்டும்.

பஜனைகள், மார்கழிமாத திருப்பாவை, திருவெம்பாவை, டிசம்பர் மாத இசை விழா நேரடி ஒலிபரப்பு, பெரும் திருக்கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு, கந்தசஷ்டி, விசாகம், மகரஜோதி, சூரசம்ஹாரம், கிரிவலம் என ஹிந்து சமய மக்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கக் கூடிய அ.இ.வா., பிற சமய கோட்பாட்டாளர்களின் நிகழ்ச்சிகளை, கொண்டாட்டங்களை புறக்கணிப்பது வருந்தத் தக்கது. இந்நிலை மாறி அனைத்து சமய கோட்பாட்டினருக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும்.

இலங்கை வானொலியின் சமய பாரபட்சமின்மை

நம் அண்டைத்தீவு நாடான இலங்கையின் அரசியல் யாப்பிலேயே “இது ஒரு பௌத்த சமய நாடு” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு மதச்சார்புள்ள நாடு. இன்னுஞ்சொல்லப்போனால் தமிழின மக்களுடன் முறுகல் நிலை உறவுகளை கடைப்பிடிக்கும் ஒரு நாடு.

ஆனால் அந்நாட்டு வானொலியின் தமிழ்த் தேசிய சேவையில் சைவ, இ°லாமிய சமயத்தினருக்கு போதுமான மணித்துளிகள் (கிட்டத்தட்ட 5 மணிநேரம்) ஒதுக்கி ஒலிபரப்பி அழகு பார்க்கின்றது. அது மட்டுமில்லாமல் இ°லாமிய, சைவ நெறி மக்களின் எல்லாவிதமான பெரிய, சிறிய சிறப்பு நாட்களுக்கு நேரடி ஒலிபரப்பு வசதியை தாராளமாக செய்து தருகின்றது. இவ்விஷயத்தில் அ.இ.வா., இலங்கை வானொலியிடம் பாடங்கற்க வேண்டும்.

அ.இ.வா. வின் வெளிநாட்டு, உள்நாட்டு ஒலிபரப்பு - ஒப்பீடு

தமிழக அ.இ.வா, நிலையங்களிலேயே திறன் வாய்ந்ததும், பல அலைவரிசைகளில் ஒலிபரப்பக் கூடியது சென்னை நிலையம் மட்டுமே. தமிழகத்தின் மாவட்டங்களவில் ஒலிபரப்பும் நிலையங்களின் நிலைமை பலகீனமாகவே உள்ளது.

(எ.கா.) எனது ஊருக்கும், திருநெல்வேலி வானொலி நிலையத்திற்கும் உள்ள தூரம் 56 கி.மீ. எனவே வீட்டினுள் வானொலிப் பெட்டியை இயக்கி திருநெல்வேலி நிலையத்தின் அலைவரிசையை கண்டுபிடித்து, நிலைப்படுத்திக் கேட்பதற்குள் வெறுத்துப்போய் விடும். பெரும்பாலான நேரங்களில் மின்னியக்க சாதனங்களின் ஏற்படுத்தும் இடையூறு ஒலிகளுக்கு நடுவே நெல்லை வானொலி கரைந்து போய்விடும்.

ஆனால் அதே சமயம் இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பையும், தூத்துக்குடி அ.இ.வா. இலங்கைக்காக நடாத்தும் ஒலிபரப்புகளை அனைத்து இடையூறுகளுக்கும் நடுவே தெளிவாக கேட்கவியலும்.

நான் இலங்கைக்கு செல்லும் போதெல்லாம் நடுவண் அலைவரிசையில் (ஆறு / ஹஆ) ஒலிபரப்பாகும் தூத்துக்குடி அ.இ.வா.வின் வெளிநாட்டு ஒலிபரப்பை தெளிவாக, துல்லியமாக கேட்பதுண்டு. ஆனால் திருநெல்வேலி வானொலி நிலையம் ஒலிபரப்பு / வீச்சு வரம்புக்குள் வரும் எனதூரில் இருந்து அதை மிகவும் சிரமத்துடன் அல்லது கேட்கவியலாத நிலைதான் உள்ளது.

இந்திய அரசிற்கு வெளிநாட்டில் தனது பிம்பத்தை நிலைநிறுத்துவதில்தான் அக்கறையே ஒழிய, வரி செலுத்தும் தன் குடிமக்களின் ஒலிபரப்பு கேட்கும் / நுகரும் உரிமை பற்றி எவ்வித அக்கறையுமில்லை.

மூச்சுத் திணறடிக்கும் சிகப்பு நாடா முறை

அ.இ.வா.வின் ஒலிபரப்பாளர்கள் / அறிவிப்பாளர்களின் குரல்களில் உணர்ச்சி நீக்கம் செய்யப்பட்டு வெறும் பொறிகதியில்தான் பேசுகின்றனர். சுதந்திரமாக நிகழ்ச்சிகளை அமைக்கவோ, நேயர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விடையளிக்க, செவிசாய்க்க அ.இ.வா.வின் அறிவிப்பாளர்களும், நிகழ்ச்சி பொறுப்பாளர்களும் தனக்கு உயரே உள்ள அலுவலர்களின் தலையசைப்பையும், தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவல நிலை.

அருமையான அயலக வானொலிகள்

நம் அரச வானொலியின் ஒலிபரப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அருள் கூர்ந்து அயல் நிலத்திலிருந்து நம் இல்லம் நோக்கி பாயும் அற்புத வானொலிகளின் தமிழ் நிகழ்ச்சிகளையாவத குறைந்தபட்சம் கேட்க வேண்டும்.

செய்திகளை சுடச்சுட அதன் பல்வேறு பரிமாண கோணங்களில் நின்று அலசும் பி.பி.ஸி.யின் தேமதுர தமிழோசை.

சமூக அவலகங்களை நயன்மிகு மொழியில் இடித்துரைக்கும் வெரித்தா° தமிழ்சேவை.

கொஞ்சு தமிழில் உரையாடி பரிசில் பல அள்ளித்தரும் சீன வானொலி.

நேயர்களின் நாடித்துடிப்பறிந்து இலகு, அழகு தமிழில் நம் உள்ளங்களை கட்டிப்பிணைக்கும் இலங்கை வானொலியின் தமிழ்த்தேசிய சேவை.

அ.இ.வா. இன் பணியாளர்களுக்கு ஒலிபரப்புத்துறை என்பது அவர்களது வாழ்க்கையை நகர்த்திச்செல்ல உதவும் ஒரு தொழில், கடமை, உத்தியோகம் மட்டுமே. ஆனால் அயல்நாட்டு வானொலியின் ஒலிபரப்பாளர்களோ இத்துறையை ஒரு கவின்மிகு கலையாகப் பார்க்கின்றனர்.

பண்பலைகளை தனியாருக்கு விற்றல்

பேராயக் கட்சியினர் பொதுத்துறைகளையும், சேவைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கும் திருப்பணியை தொடங்கி வைத்தனர். கொழுத்த ஆதாயம் ஈட்டும் பெரும் பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு தூக்கிக் கொடுத்தவர்கள் வானொலித்துறையையும் விட்டு வைக்கவில்லை.

பண்பலை வரிசைகளை ஏலத்துக்கு விட்டனர். நிலத்தில் உள்ளவற்றை தூக்கிக் கொடுத்தது போக வான்வெளியையும் வணிகமயமாக்கினர். இதன் விளைவாக புற்தீசல்கள் போல ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்துக்களில் பெயர்களை சூட்டிக் கொண்டு தனியார் பண்பலை ஒலிப்பரப்புக்கள் பெருகிவிட்டன.

ஆங்கிலத்தையும், தமிழையும் கலக்கு கலக்குவென கலக்கி, தொடர்ச்சியாக நொறுங்கி விழும் பொருட்கள் எழுப்பும் ஓசைக்கு நிகரான காதிற்கு வாதையூட்டிம் வெற்றரட்டைகளில் (சுயனiடி துடிஉமநநள) என்றழைக்கப்படும் பண்பலை நிகழ்ச்சி நடத்துனர்கள் அடிக்கும் அக்கப்போரை சொல்லிமாளாது.

அவர்கள் பேசுவது இன்னதென்று உள்வாங்கி புரிவதற்குள் திரை இசையுடன் விளம்பரமும் சேர்ந்து நாராசமாக தலையைச் சுற்ற வைக்கின்றது. என்னத்தையாவது உளறித்தட்டி, தட்டுநிறைய காசையள்ளும் பண்பலைகளை நமது அரச வானொலியின் ரெயின்போ, கோல்ட் பண்பலை வரிசைகளும் அடியொற்றி பின்தொடரத் தொடங்கியிருப்பதை என்னவென்று சொல்ல?

பொதுமக்களுக்காக அரசின் அறிவிப்புகள், ஊகங்களுக்கும், வதந்திகளுக்கும் அறவே இடமளிக்காத உறுதியான, நம்பகமான செய்தியறிக்கைகள் தலையாய துறைகளான வேளாண்மை, சுகாதாரம், கல்வி போன்றவைகளுக்கென தனி நிகழ்ச்சிகள், விரிவான வானிலை அறிவிப்புகள், நுகர்வியத்தை ஊக்குவிக்காத போக்கு ஆபாசமின்மை என தனக்கென தனிமுத்திரை பதித்திருக்கின்ற அரச ஊடகங்கள் தனியார் பண்பலைகளின் தரத்திற்கு தாழத் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது.

தீர்வுகள்

அ) அரசிடம் நாம் எதிர்பார்ப்பவை

தற்கால நிலைமை, தேவைகளுக்கேற்ப புதிய ஒலிபரப்புக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அக்கொள்கையில் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம் பெற வேண்டும்.

1. நம் நாட்டு குடிமக்களில் எல்லா பிரிவினரின் விருப்பம், பண்பாடு, கலை போன்ற அம்சங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

2. வற்றாத ஜீவநதியின் பொங்குமாங்கடல் போல 24 மணிநேரமும் தனியார் தொலைக்காட்சி, இணையதளம் போன்றவை செய்திகள், பகுப்பாய்வுகள், விமர்சனங்கள், துப்பறியும் உத்திகள் மூலம் எல்லாவித தடைகளையும் தகர்த்தெறிந்து தகவல்களை பெருக்கெடுத்து ஓட விடுகின்றனர். இந்நிலையில் காலத்துக்கொவ்வாத, கவைக்குதவாத துருப்பிடித்துப் போன சட்டங்களின் மூலம் அ.இ.வா. வை அரசு உடும்புப்பிடியாய் பிடிப்பதில் எவ்வித பொருளுமில்லை. பி.பி.ஸி., அல்ஜஸிரா போன்ற வானலை ஊடகங்களை வகை மாதிரியாக கொண்டு அ.இ.வா.வை சுயேச்சையான சுதந்திரமான ஒலிபரப்புக் கழகமாக மாற்றவேண்டும்.

3. காய்கறி, மீனைப்போல ஏலம் விடப்பட்ட புற்றிசல் தனியார் பண்பலை நிலையங்களின் நுகர்வுவெறி, இளமையை வணிகப் பொருளாக்கும் போக்கு, சமூக அக்கரையின்மை போன்றவற்றை தடைசெய்யும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கட்டாயமாக்க வேண்டும்.

4. நம் வாழ்வின் எல்லாத்துறைகளிலும் அயல் நாடுகளுடன் புரிந்துணர்வு, பரிமாற்ற ஒப்பந்தங்கள் போடுவது போல பன்னாட்டு வானொலி கழகங்கள், நிலையங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு நிகழ்ச்சிப் பரிமாற்றம், அஞ்சல் வசதி, ஒலிபரப்பு நட்புறவு அமைப்புகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

5. நம் நாட்டு வானொலி நேயர்களை ஊக்கப்படுத்தும் பொதுமக்கள் = வானொலியினர் சந்திப்பு, போட்டி, பரிசு என ஊக்கப்படுத்த வேண்டும்.

6. சமுதாய வானொலி (ஊடிஅஅரnவைல சுயனiடி) மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தி சலுகை, மானியம் அளித்து ஊக்குவித்து பரவலாக்க வேண்டும்.

ஆ) நாம் செய்ய வேண்டியவை

1. மக்கள் நலன் நாடும் முற்போக்கு சிந்தனையுள்ள ஓய்வுபெற்ற பணியிலுள்ள ஒலிபரப்பாளர்கள், முன்னோடிகளை சந்தித்து நமது எண்ணவோட்டங்களை எடுத்துரைத்து அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பெறுதல்.

2.அச்சு, காட்சி, கேள்வி ஊடகங்களில் உள்ள நமது நண்பர்கள் மூலம் நமது நோக்கத்தை செய்திகள், விமர்சனங்கள், ஒப்பீடு, திறனாய்வு என கொண்டு வரச்செய்தல்

3. முன்னோடி ஒலிபரப்பாளர்கள், விமர்சகர்கள், சமூக அறிவியலாளர்களைக் கொண்டு விவாத அரங்குகளை நடத்துதல்.

4. சென்னை, புதுச்சேரி, திருச்சி, கோவை, மதுரை, கொடைக்கானல், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் அ.இ.வா. வானொலி நிலைய இயக்குநர்கள் / நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், அறிவிப்பாளர்களை தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால அளவில் இடைவெளிகளில் சந்தித்து நம் கருத்துக்கள், பாராட்டுகள், விமர்சனங்களைத் தெரிவித்தல்.

5. தமிழக வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை அச்சு ஊடகங்களில் மண்டல வாரியாக திறனாய்வு விமர்சனம் செய்து அதை அவற்றில் வெளியிடச் செய்ய வேண்டும்.

6. மேற்கண்ட செயல்பாடுகள் வாயிலாக கிடைக்கும் அனுபவங்கள், விமர்சனங்கள், கருத்துக்களை தொகுத்து இந்திய ஒலிபரப்புக்கொள்கை மக்கள் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

7. இவற்றை நடுவணரசின் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுபோய் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

8. பொதுநலன் வழக்கொன்றின் மூலமாக இது தொடர்பாக ஏதாவது சாதிக்கும் வாய்ப்பு உண்டென்றால் அதையும் செய்ய வேண்டும். 

Pin It