' ஐ ஏ எஸ்’ அதிகாரி ஞான. இராஜசேகரன் தயாரித்த 'பெரியார்’ திரைப்படத்தை. ‘'பெரியார் திரைப்படம் - ஒரு பெரியாரியப் பார்வை’ - எனும் தலைப்பில் விமர்சனம் எழுதியுள்ள தோழர் ருத்ரன் தன்னுடைய பார்வையை மார்க்சியத்திலிருந்து பெரியாரியத்திற்கு ஏன் மாற்றிக் கொண்டார் எனத் தெரியவில்லை. இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் நிறைவளிப்பதாக இல்லை. பெரியார்’ திரைப்படத்தில் பல்வேறு வரலாற்று மோசடிகள் நிகழ்ந்துள்ளன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார் என்பதுடன் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், ஒரு வரலாற்றுப் படத்தில் இருக்க வேண்டிய - ஆனால் இப்படத்தில் இல்லாத- சிறப்பம்சங்கள் குறித்தும், தொழில் நுட்பக் கலைஞர்கள் - குறிப்பாக ஒளி ஓவியர் திருவாளர் தங்கர்பச்சான், வரலாற்றுப் பிழையைக் கண்டுகொள்ளாத கி. வீரமணி, முதல்வர் கருணாநிதி ஆகியோரின் செயல்பாடுகளின் மீதும் ருத்ரன் தனது விமர்சனத்தைக் குவித்துள்ளார்.

பெரியார் என்பவர் வரலாறு படைத்த ஒரு மாமனிதர் என்பதில் - அவர் மீது நிறையவே விமர்சனங்கள் இருந்தபோதும் - இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால், இந்தப்படம் பெரியார் பற்றி ஒரு சதவீதமாவது சரியாகச் சொல்லியிருக்கிறதா? என்பதே கேள்வி மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது கருத்தின்மீது நமக்கு விருப்பு, வெறுப்பு எவ்வளவு இருந்தாலும் அவரை / அதை/ அவராகவே/ அதுவாகவே காண்பிக்க வேண்டும். விமர்சனம் தனி, இதற்கு உதாரணமாக தோழர் ருத்ரன் தொட மறந்த ஒரு செய்தியை எடுத்துக் கொள்வோம்.

பெரியாரும். இராமநாதனும் (படத்தில் முறையே சத்யராஜ், சந்திரசேகர்) சோவியத்தில் இருக்கும்போது பெரியார் சோவியத் பற்றிய தனது மதிப்பீடுகளை முன்வைப்பார். இறுதியாக. ''இந்தக் கட்டுப்பாடு இல்லையானால் சோவியத் செதந்சிடும் போலிருக்கே.’’ என்பார். இந்தச் சொல்லாடல் மூலம் ஞான. இராஜசேகரன், பெரியாரை ஒரு தீர்க்க தரிசியாகக் கட்டமைக்க முயல்கிறார். எந்த மாதிரியான பிம்பங்களை உடைக்க வேண்டுமென்று பெரியார் எண்ணினாரோ, அதற்கு நேரெதிரானது இது.

மேலும் இராமநாதன் சொல்வார்: ''எங்க பார்த்தாலும் போலீஸ். இராணுவம், மக்களுக்குச் சுதந்திரம் இல்லையே’’ இங்குதான் ஞான.இராஜசேகரனின் அப்பட்டமான வக்கிரப்புத்தி வெளிப்படுகிறது.

பெரியாரும், இராமநாதனும் சோவியத்தில் இருந்தபோது ஸ்டாலின் ஆட்சியிலிருந்தார். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்குச் சுதந்திரமில்லை. மாறாக, சர்வாதிகார ஆட்சியே நடைபெற்றது என்பதையே ஞான. இராஜசேகரன் கட்டமைக்க முயல்கிறார். ஸ்டாலினைச் சர்வாதிகாரியாகச் சித்தரிக்க முயன்ற ஞா. இராஜசேகரன், இராமநாதன் யார் என்பதையும் சொல்லியிருந்தால், அவரது படைப்பு நேர்மையை நாம் பாராட்டியிருக்கலாம். என்ன செய்வது? எல்லாம் பணம் செய்யும் வேலை.

இராமநாதன் அடிப்படையில் ஒரு ட்ராட்ஸ்கியவாதி. இவர் பெரியாருடன் சோவியத்தில் தங்கியிருந்தபோது, அங்குள்ள ட்ராட்ஸ்கியவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார். இதுபற்றி பெரியார் சொன்னதாக ஆனைமுத்து குறிப்பிடுவதாவது: ''மாஸ்கோவில் செஞ்சதுகத்தில் போர்டிகோவிலிருந்து மே 1 பேரணியின் போது, ஸ்டாலின் எல்லோருக்கும் சல்யூட் செய்தார். நாங்கள் 28.5.1932இல் ஸ்டாலினைப் பார்த்துப் பேச நாள் குறிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் எஸ்.இராமநாதன் அங்கு ட்ராட்ஸ்கியவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அவரை எச்சக்கும்படியும் என்னிடம் கூறினார். நானும் அவரை எச்சரித்தேன்.

ஆயினும் அவர் தொடர்ந்து ட்ராட்ஸ்கியவாதிகளுடன் தொடர்பு கொண்டார். ட்ராட்ஸ்கியவாதிகள் அன்றைய சோவியத் அரசுக்கு எதிரானவர்கள். எனவே ஒரு முஸ்லிம் அதிகாரி என்னிடம் வந்து, உங்களுக்கு 28.5.32இல் ஸ்டாலினிடம் பேச உறுதி செய்யப்பட்டிருந்த ஏற்பாடு இரத்துச் செய்யப்பட்டுவிட்டது. உங்கள் குழுவினர் 19.5.32க்குள் சோவியத்து நாட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று கூறினார்’’. (பெரியார் அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள் பதிப்பாசியர் வே. ஆனைமுத்து xxxv)

பெரியார் ஸ்டாலினைச் சந்திக்கவில்லை. ஆனால் பெரியார் ஸ்டாலினைச் சந்தித்ததாக பி.சி. கணேசன் தெவித்துள்ளார். (பார்க்க பெரியார் ஒரு சகாப்தம் - பக்கம் 31) புத்தகத்தில் ஸ்டாலின் என்பது காலினினை எனத் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இராமநாதன் சோவியத் ஆட்சியை விமர்சிக்கிறார். ஆனால் இயக்குநர் ஞான. இராஜசேகரனுக்கு இந்த விவரம் தேவையில்லை. தோழர் ருத்ரன் சriயாகச் சுட்டிக்காட்டியதுபோல் பெரியார் சோவியத் நாட்டில் இருக்கும்போது திரையில் 'ருஷ்யா’ என்றே எழுதப்பட்டிருக்கிறது.

'பெரியார்' படத்தைப் பார்க்காதவர்கள் இனிமேல் பார்த்தால் சில நிகழ்வுகளைச் சriயாகக் கவனிக்க வேண்டுகிறேன். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ''பெரியாரின் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்’’ மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. காட்டாக அந்த நடனப்பாடல், உண்மையில் பெரியாரைச் சriயாகக் காட்ட நினைத்திருந்தால், அவர் நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி, நி. சினிமா பார்த்ததைக் காட்டியிருக்க வேண்டும். அவரது துறவுக் கோலப் புகைப்படங்களையாவது காட்டியிருந்தால் பெரியாriன் மனநிலையை நாம் புந்துகொள்ள உதவியாய் இருந்திருக்கும்.

மலேயாவில் பெரியார் தங்கியிருந்தபோது நடைபெற்ற 'சுவையான’ சம்பவத்தைத் திரையில் காட்டியிருந்தார்கள். ஆனால் அவரை மலேயா வரவிடாமல் தடுப்பதற்குப் பெரிய ஏற்பாடே இருந்தது. அந்நாட்டில் தேசியத்தின் பெயரால் சிலர் கொள்ளையடித்து வந்தனர். மதத்தின் பெயரால் ஏமாற்றி வந்தனர். இக்குழுவினர் ஈ.வெ.ராவின் வருகை கேட்டுத் திகைத்தனர். தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று நடுங்கினர். தங்கள் சூழ்ச்சிகள் வெளிப்பட்டுவிடும் என்று கலங்கினர். இவர்கள் ஈ.வெ.ராவையும் அவர் தோழர்களையும் மலேயாவுக்கு வராமல் தடுக்க வேண்டுமென்று பலமான முயற்சி செய்தனர். மலேயா அரசாங்கத்தாரிடம்,. 'இராமசாமியும் அவர் தோழர்களும் பெரிய புரட்சிக்காரர்கள், காங்கிரசுக்காரர்கள், பொது மக்களைக் கலகம் பண்ணும்படி தூண்டுகிறவர்கள். அவர்கள் இங்கு வந்தால் அரசாங்கத்திற்கு ஆபத்து. பொது மக்களிடையில் குழப்பம் உண்டாகும். ஆதலால் அவர்களைக் கப்பலிலிருந்து இறங்கவிடாமல் கப்பலிலிருந்தபடியே திருப்பிவிட வேண்டும்’ என்று முறையிட்டனர்.

இம்முறையீடு பலிக்கவில்லை. ஆயினும் இக்கூட்டத்தார் சும்மா விடவில்லை. ''தேசத்துரோகிகள் வருகிறார்கள். நாஸ்திகர்கள் வருகிறார்கள். மதத் துரோகிகள் வருகிறார்கள். அவர்களை ஒருவரும் வரவேற்கக்கூடாது. தமிழ் மக்கள் ஒருவரும் அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது. அவர்களுடைய கூட்டங்களுக்கும் செல்லக்கூடாது’ என்று நாடு முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இக்காரணத்தால் ஈ.வெ.ராவையும். அவர் தோழர்களையும் வரவேற்க எண்ணற்ற மக்கள் கூடிவிட்டனர். இவர்கள் பினாங்கு துறைமுகத்தில் இறங்கும்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். (பார்க்க: 'தமிழர் தலைவர்’- ஆசியர். சாமி சிதம்பரனார். பக்கம் 97).

மேற்குறிப்பிட்ட செய்தியில் முற்பகுதியை விட்டுவிடுவோம். 1927இல் பெரியாருக்கு ஐம்பது வயது. அந்தக் காலக் கட்டத்தில் புதிய சிந்தனையைக் கிளறிவிட்டவர். ஐம்பதாயிரம் பேர் (கொஞ்சம் குறைவாகவும் இருக்கலாம்) அவரை வரவேற்கத் திரண்டிருந்த காட்சியை இப்போது நம் மனக் கண்ணில் பார்த்தாலும் பிரமிப்பாய் இருக்கிறது. இதை ஒதுக்கிவிட்டு. 'பிள்ளை வரம்’ கேட்டுவரும் காட்சியைக் காட்டியதன் மூலம் ஞான. இராஜசேகரன் எதை முன் நிறுத்த விரும்புகிறார்? அந்தக் கட்டத்தில். ஆளும் வர்க்கத்திற்குச் சிம்ம சொப்பனமாக இருந்த 'பெரியார்’ என்பவரைப் பின்னுக்குத் தள்ள வேண்டிய அவசியம் என்ன?

'வீரப்பாடல் வரிகளைப் பாடிக்கொண்டு கேரளத் தெருக்களில் சுற்றி, வைக்கம் போராட்ட வீரர்கள் சிறைப்படுத்தப்படுவதுடன் ஞான. இராஜசேகரன் தன்னுடைய வேலையை முடித்துக்கொள்கிறார். வைக்கத்துக்குப் பெரியார் சென்ற காரணம் என்ன? அது பின்னர் எவ்வாறு முடிவுற்றது என்பதைச் சொன்னால் யாருக்குக் கேடு?

இந்தப் போராட்டம் எப்படியெல்லாம் திசை திருப்பப்பட்டது, யார்யாரெல்லாம் இடைத் தரகர்களாக நியமிக்கப்பட்டார்கள் அல்லது நுழைக்கப்பட்டார்கள் என்பது பற்றி, வைக்கம் போராட்டம் முடிவுற்ற பின், மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளில் குறிப்பிட்டுள்ளார். இந்த உரை குடியரசுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. சொற்பொழிவாற்றிய ஆண்டு தெரியவில்லை (என்னிடம் உள்ள ''தீண்டாமையை ஒழித்தது யார்? (வைக்கம் போராட்ட வரலாறு)’’ என்ற புத்தகத்தில் 40 பக்கங்களே உள்ளன. இதரப் பக்கங்கள் இல்லை).

வைக்கம் போராட்டம் தொடர்பாகச் சிறை வைக்கப்பட்டிருந்த பெரியாரையும், அவரது ஆதரவாளர்களையும், மகாராஜா இறப்பை முன்னிட்டு விடுதலை செய்தனர். இனி பெரியார் பேசுகிறார். ''இராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான், என்னிடத்தில் நேரே இராணி பேசக்கூடாது என்று கருதி திரு. இராஜகோபாலாச்சாரியும், எங்கே என்னிடத்தில் இராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்துவிடுமே அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, இதை காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காயம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கும் அதைப்பற்றிக் கவலை இல்லை. எப்படியாவது காயம் வெற்றியானால் போதும். எனக்குப் பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக்கொண்டேன்.’’

அதன்பின் இராணியோடு காந்தி பேசியபோது சாலைகளைத் திறந்து விட இராணி ஒப்புக்கொண்டார். ஆனால் சாலைகளைத் திறந்து விட்டபின், நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டுமென்று கேட்டால் என்ன செய்வது? என்றும் கேட்டார். இதை காந்தி பெரியாரிடம் தெரிவித்தபோது பெரியார் ஒரு சமரசத்தை முன்வைக்கிறார். அதன்பின் சாலைகள் திறந்துவிடப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் இருவரைப் பெரியாரின் தோழர்கள் பொன்னம்பலமும் குருசாமியும் கோயிலுக்குள் நுழைய வைக்கிறார்கள். பின்னரே இந்திய வரலாற்றில் முதன் முறையாகக் கோயில் நுழைவுக்கென்று கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டது சுசீந்திரம் கோயிலில்தான்.

அதன்பின் எர்ணாகுளத்தில் பெரியார் தலைமையில் கூட்டப்பட்ட மாநாட்டில், இஸ்லாம் மதத்தில் சேருவது அல்லது கிறித்துவ மதத்தில் சேருவது எனத் தீர்மானிக்கப்படுகிறது. தீர்மானம் வந்த அன்றே ஐம்பது பேர்கள் அளவில் முஸ்லீமாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள். இது ஒரு பெரிய கலக்குக் கலக்கிவிட்டது. அங்கங்கு கலவரங்கள் எழுந்தன. அப்போது திவானாக இருந்த சர்.சி.பி. இராமசாமி அய்யர் இதை இந்து- முஸ்லீம் சச்சரவு என்று சொல்லாமல் முதலாளி - தொழிலாளி சண்டை என்று அடக்கிவிட்டார். அதன்பின் எல்லோரும் மதம் மாறுவதைக் கண்டு. இதற்கு மருந்து கோயிலைத் திறந்தவிட வேண்டியதுதான் எனும் ஞானம் பிறந்தது. இராஜா பிறந்த நாள் செய்தியாக, ''கோயில் எல்லா இந்துக்களுக்கும் திறந்துவிடப்படும்’’ என்று அறிவித்தார்.இப்படித்தான் ஆலயப் பிரவேச உமை கிடைத்தது.

ஞான. இராஜசேகரன் காட்டியிருப்பது போல், பாட்டுப்பாடி கலைந்துவிட்ட நிகழ்வல்ல வைக்கம் பேராட்டம். இன்றைய அரசியல் பண்பாட்டுச் சூழலில் பார்க்கும்போது ஆலய நுழைவு என்பது மக்களை மீண்டும் மீண்டும் அடிமைத் தளைக்குள் மாட்டவைப்பது என்று தோன்றலாம். ஆனால் அன்றைய காலக்கட்டதில் அது உரிமை மீட்பு அல்லது உரிமைப்போர் என்பதாகவே இருந்துள்ளது.

'பெரியார்’ படத்திற்கு 'ஆன்மீகத் தளபதி’ ரஜினியின் விளம்பரம் பெறப்பட்டது குறித்து தோழர் ருத்ரன் வருத்தப்பட்டிருந்தார். ஏதோ திராவிட இயக்கம் ஆன்மீகத்திற்கு எதிரானது என நினைத்துக்கொண்டு, ஆழ்வார் ஆர்.எம். வீரப்பன் சொல்வதைக் கேளுங்கள்:

''திராவிட இயக்கம் என்பது ஆன்மீக நெறிக்கு விரோதமான ஒன்றுமல்ல; அவர்கள் ஆன்மீகத்தைப் புறக்கணித்தவர்களுமல்ல. மாறாகச் சொல்லப்போனால் அவர்கள் எல்லாம் ஆன்மீகத்தை வளர்த்தவர்கள்.’’

''இந்த இயக்கத்தினுடைய தொடர்ந்த வரலாறுகள். இதனுடைய அஸ்திவாரம் ஆன்மீக நெறியிலே கட்டப்பட்டது. (ஆர்.எம்.வீ. சொற் பொழிவுகள். பக். 7-10.)

அப்புறம் பெரியாரைப் பற்றி நமக்குத் தெரியாத ஒரு செய்தியையும் சொல்கிறார்.

''பிள்ளையாரை உடைக்கவேண்டுமென்று சொன்னபோது கூட எங்கேயும் பாதுகாப்பற்று, அரசமரத்தடியிலே பல்லாயிரக் கணக்கான பிள்ளையார்கள் இந்த நாட்டிலே வணங்குகின்ற உருவங்களாக இருக்கின்ற இந்தச் சமுதாயத்தில், ஒரு பிள்ளையாருக்கும் சேதம் விளைவிக்காமல், மண்ணாலே செய்து உடைக்கச் சொன்னாரே தவிர இருக்கிற பிள்ளையாரை உடைக்கச் சொல்லவில்லை’ (மேற்படி புத்தகம். பக்கம் 9.)

நீந்தத் தெயாமல் மூழ்கிக்கொண்டிருப்பவன், கிடைக்கும் எதையேனும் பற்றிக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுவான். அந்தக் கதைதான் 'பெரியார்’ படத்துக்கும். ரஜினியின் விளம்பரம் பெறுவது இது முதல் நிகழ்வல்ல. ஏற்கனவே இதுபோல் பெறப்பட்டதுண்டு. இரண்டு இயக்குநர்கள் - சேரனும். தங்கர்பச்சானும் - தங்களுள் யார் யோக்யன் என்று இப்போது சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுள் மகாயோக்யனான சேரன். அவருடைய 'தேசிய கீதம்’ படத்திற்கு, ரஜினியின் பாராட்டுக்குய கடிதம் ஒன்றை வாங்கினார்.

''நான் சிந்தித்ததை சேரன் சிந்தித்திருக்கிறார். என் படமாக நினைத்து அவர் படத்தைப் பாருங்கள்’’ என்கிற ரஜினி கொடுத்த கடிதம் பத்திகைகளின் விளம்பரமாக வந்தது. அந்த விசுவாசத்தை மறக்காமல, 'ரஜினியோட கடிதத்தால் படத்துக்கு இன்னும் ப்ளஸ் பாயிண்ட். பத்து பர்சென்ட் வெற்றிக்கு ரஜினிதான் காரணம்னு சொன்னாக்கூட எனக்கு அதுவும் சந்தோஷந்தான். ரஜினி சாரிடம் தொடர்ந்து பாராட்டுப் பெற்றுக் கொண்டே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். என்னுடைய படங்களை அவர் தொடர்ந்து பாராட்ட வேண்டும் என்பதே என் ஆசை’ என்று புளகாங்கிதமும் பட்டிருந்தார் 'இதயம் சினிமா’ என்ற இதழில். ஆனால் படம் படுதோல்வி. தேசிய கீதம் சோக கீதமாகிவிட்டது.
(பார்க்க: 'தமிழ் சினிமாவில்’- ஜெ. பிஸ்மி. பக்.138.)

''அரிசி விலை தெரிந்தவர் முதல்வராக வேண்டுமென்று 'தேசிய கீதம்’ படத்தில் சொல்லும் சேரன். நிஜ வாழ்க்கையில் தன்னையும், தமிழகத்தையும், அரிசி விலை அறியாத ரஜினியிம் ஒப்படைக்க ஆசைப்படுகிறார் .’’ (மேற்படி புத்தகம். பக்கம் 138) தி.மு.க. ஆட்சியிலிருந்த காலங்களில் எல்லாம் ரஜினிதான் சிறந்த நடிகர். அவரது படங்கள்தான் (அருணாச்சலம். படையப்பா) சிறந்த படங்கள். அவரும் அரசியலுக்கு இதோ வருகிறார் அதோ வருகிறார் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்.

''மணிரத்தினத்தின் வீட்டில் ஒரு குண்டு வெடித்தவுடன் குமுறி எழுந்தாரே ரஜினியுõ ஓராயிரம் குண்டுகள் ஓயாமல் வெடித்துக் கொண்டிருக்கும் ஈழத்தின் ஓலம் அவருக்குக் கேட்காத மர்மம் என்ன? தனது இனத்தைச் சேர்ந்த சினிமாக்காரனுக்கு பிரச்சனை என்றவுடன், பஞ்சாபைப்போல் போலீசுக்கு அதிகாரம் கொடு என்று பேசுபவன் வெறும் கிறுக்கனா காரியக் கிறுக்கனா? பாஸிஸ்டா? ரஜினி கட்சி தொடங்கினால் கூட்டு சேருவோம் என்று காரணமில்லாமலா சொன்னார் அத்வானி?

('கழிசடை அரசியல் நாயகன் ரஜினி’- ம.க.இ.க. வெளியீடு. டிசம்பர் 1995. பக்கம் 10.)

இதுதான் ரஜினி. இவரை நம்பித்தான் தி.மு.க. படுபாவம் தமிழகம்.

படத்திலுள்ள முரண்பாடுகள், வரலாற்றுத் திரிபுகள் குறித்தும், நடிகர்களின் நடை. உடை பாவனை குறித்தும் தோழர் ருத்ரன் உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார். நிகழ்வுகளுக்குத் தொடர்புடைய மேற்கோள்களைப் பெரியார் வழித் தோன்றல்களிடமிருந்து பெற்றிருப்பது அவரது கூடுதல் பலம்.

தோழர் ருத்ரன் சொல்வது போல். படத்திலுள்ள வரலாற்றுப் பிழைகள். முரண்பாட்டுக்கு வீரமணி. கருணாநிதி. ஞான. இராஜசேகரன் ஆகிய மூவருமே பொறுப்பு. கூடுதலான செய்தி என்னவென்றால் திரைப்படத்தைப் பற்றி ஞான. இராஜசேகரனுக்கு என்ன தெரியும்? என்பதே கோடம்பாக்கத்தில் இருந்து நமக்கு வந்த செய்தி.

நடிகர்களைத் தெவு செய்வது ஒரு பக்கமிருக்கட்டும். ஒப்பனையாவது பொருத்தமாக இருக்க வேண்டாமா? பாடற் காட்சிகளில் ஏதேனுமொன்று பொருத்தமாக இருக்கிறதா? அந்த நடனமாதர் இல்லத்தில் நடிகர்கள் அணிந்திருக்கும் உடை. 'பெரியார்’ உள்பட பொருத்தமானதுதானா? அந்தப் பாடல். 'ஓ. ரசிக்கும் சீமானே’, 'ஆளை ஆளைப் பார்க்கிறார்’ எனும் பழைய பாடல்களின் ஓரத்திலாவது நிற்குமா?

பெரியாரின் மரணம் பற்றிய விவரங்களைக் கூடச் சரியாகச் சொல்லித் தராத தமிழர் தளபதிகள், அதுபற்றிய தேடல்கூட இல்லாத இயக்குநர் ஆகியோர்களிடமிருந்து ஒரு முழுமையான வரலாற்றுப் படத்தை நாம் எதிர்பார்க்கக் கூடாதுதான். இருந்தாலும். சமகாலத் தலைவர் ஒருவன் வாழ்க்கை வரலாறு கொச்சைப்படுத்தப்பட்டதற்காக நாம் வருத்தப்படலாம்.

தமிழ்த் திரையுலகம் பல விபரீதங்களையும். விசித்திரங்களையும் உள்ளடக்கியது.

''சில வருடங்கட்கு முன்னே ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். அதில் ஒரு நடிகர் தூங்கும் பெண்ணை முத்தமிட்டார். முத்தமிட்ட சப்தம் மூன்று பர்லாங் தூரம் கேட்டிருக்கும். அவர் முத்தமிட்டது கூட ஆச்சர்யமில்லை. அந்த முத்தத்தின் சப்தத்தைக் கேட்டு அந்தப் பெண் விழிக்காமல் இருந்தாளே. அதுதான் எனக்கு ஆச்சர்யமாயிருந்தது.’’

(பார்க்க சினிமா சிந்தனைகள். ஏ.கே. செட்டியார். பக்.43)

தமிழ்ப்படத்தின் யதார்த்தமின்மையைச் சொல்கிறாரா. அல்லது முத்தத்தின் முக்கியத்தை ஏ.கே. செட்டியார் முதன்மைப்படுத்துகிறாரா என்பது விளங்கவில்லை. படிப்பறிவே இல்லாத கதாநாயகன் எப்படிப் பாடுகிறான் பாருங்கள்:

மனநலம் குன்றியவன். தாலி என்றால் என்ன என்பதைக் கூடத் தெந்துகொள்ள இயலாத, படிப்பற்றவன் பாடுகிறான்.

''தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே.’’ (படம்: சின்னதம்பி)

'கவியரசர்’ மேலும் எழுதுகிறார்:
''வான்மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை...
மனிதன் மாறிவிட்டான். (படம்: பாவமன்னிப்பு)

மதியும் நதியும் மாறவில்லையா?
மலரும் மண்ணும் மாறவில்லையா?

இயங்கியலுக்கு எதிரான பாடலாயிற்றே என்று எவரும் கேட்டுவிட முடியாது. ஏனென்றால் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்!

'கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதுகிறார்:

''மேதினம் உழைப்பவர் சீதனம்’’ (படம்: சிவப்பு மல்லி)

ஏதோ எவ்விதப் போராட்டமுமில்லாமல் முதலாளிமார்கள் அப்படியே தூக்கித் தங்கத்தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டாற்போல!

தஞ்சை இராமையாதாசின் பாடல் வரிகளை நாம் அசைபோட்டிருக்கிறோம். பொருள் இருக்கிறதோ இல்லையோ ஒரு லயம் இருக்கும்.

'கட்டழகு பாமா பொட்டழகு பூமா
விட்டுப்புட்டு ஓடாதே வெட்கங்கெட்ட டோமா’ (படம்: வணங்காமுடி)

ஆனால் உரைநடை என்று சொல்வதற்கே தகுதியற்ற சில வரிகளை நம்முடைய 'இசைப்புயல்’களும். சாதாரண இசையமைப்பாளரும் எப்படிப் பாடலாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்.

'' பாபா உன் பாதையிலே பல பெண்கள்
காத்திருக்க எனை ஏன் தேர்ந்தெடுத்தாய்?
(படம்: பாபா இசை: ஏ.ஆர். ரகுமான்)

''அடுத்தவீட்டுக் கல்யாணப் பத்திகை
பார்க்கும்போது நமது பேரை மணமக்களாக
மாற்றி எழுதி இரசிக்கிறேன்’’ (படம்: ஐயா. இசை: பரத்வாஜ்)

இது இப்படி இருக்க. நமது கதாநாயகர்களைப் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை.

ஒருவட்டம். அதைத் தாண்டிப் பயணிக்க எத்தனை பேர் தயாராயிருக்கிறார்கள்?

''காந்தி’ படத்தில் இருந்த நேர்மைகூட பெரியாரில் இல்லையே.

திருமாவளவன். அழகிய பெரியவன் ஆகியோரின் கருத்துகளை தோழர் ருத்ரன் பதிவு செய்துள்ளார்.

சில ஆண்டுகட்கு முன் சாதி ஒழிப்பு தியாகிகளை நினைவுகூரும் வகையில். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரால். சென்னை இலயோலா கல்லூயில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரியாரின் ஒரு சிறு படத்தைக்கூட மாட்டவில்லை. தோழர் அ. மார்க்சின் நண்பர் புத்தகக்கடை போட அனுமதி இல்லை; திருமாவளவனை தோழர் அ. மார்க்ஸ் விமர்சனம் செய்தார் என்பதற்காக. இன்று, மேல்சாதி பார்ப்பனர்கட்கு மாயாவதி இரத்தினக் கம்பளம் விரித்து, தலித் மக்களுக்குத் துரோகம் செய்த அரசியலை ரொம்பவும் சிலாகித்துப் பேசுகிறார். இதுதான் பெரியாருக்கும். அம்பேத்கருக்கும் திருமாவளவன் செய்யும் நன்றிக்கடன். அவடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

''தந்தான துதிப்பமே. அப்ப தராதவன ஒதப்பமா’ என்று தனது கருத்தைக் கதாபாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தியவர் அழகிய பெரியவன்.
(பார்க்க: தகப்பன் கொடி. பக். 165.)

இந்தச் சிந்தனைக்கான தூண்டுதல் எங்கிருந்து வந்தது என்பதை அழகிய பெயவன் யோசித்திருந்தால் 'பெரியார்’ திரைப்படத்தை 'மக்களுக்கான திரைப்படம்’ எனச் சொல்லியிருக்கமாட்டார். அழகிய பெரியவனின் இந்த நகைச்சுவையை எவரும் இரசிக்கமாட்டார்கள்.

பொதுவாக கம்யூனிஸ்ட்களுக்கு நகைச்சுவை உணர்வு கிடையாது என்றும், சரியாக எழுதத் தெயாதவர்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அந்தக் கருத்தை இந்தப் புத்தகத்தில் தோழர் ருத்ரன் தவிடுபொடியாக்கியுள்ளார். 'தன்னுடைய வீட்டுப் பெண்கள் உள்பட சமைஞ்சது எப்படி’ என்று வரும் சொல் தொடர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு மார்க்சியவாதியாக இருந்தும், சமகாலத் தலைவர் ஒருவன் வரலாறு, அவரது தளபதிகளாலேயே சிதைக்கப்படுவது கண்டு அவர் எதிர்வினையாற்றி இருப்பது அவரது அரசியல் நேர்மையைக் காட்டுகிறது.

பிற்சேர்க்கை என்ற தலைப்பில் இளையாஜா, குறித்துப் பலர் சொன்ன கருத்து. அவற்றை தோழர் ருத்ரன் இலகுவாக நிராகரிக்கும் தன்மை அவர்மீதான மரியாதையை மேலும் கூட்டுகிறது.

இங்கே ஒரு செய்தியை நான் பதிவு செய்ய வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் தோழர் சுப. வீரபாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தபோது. ''ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ எனும் திருமூலர் கருத்தை திராவிட இயக்கம் உள்வாங்கிக் கொண்டது ஒருபுறம் இருக்கட்டும். எதையும் ஒற்றையாகப் பார்ப்பது பாசிசம்; ஏகாதிபத்தியம். ஆனால் மார்க்சியம் பன்முகத் தன்மை கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு தமிழ்ப்புலவன் சிந்தனையில் பாசிசக் கருத்து இருந்துள்ளது. அதை அண்ணாதுரை உள்வாங்கிக் கொண்டது உங்களுக்கு ஏற்புடையதுதானா?’’ என்று கேட்டேன். அவரிடம் பதிலில்லை.
பெரியார் விட்டுச் சென்ற ஆவணங்கள் இன்னும் சிதைந்துபோகாமல் உள்ள நிலையில். ஆயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் இன்னும் உயிரோடு உள்ள நிலையில். அவரது கருத்துகள் மிகப்பெரிய ஊடகத்தில் திரித்துக் காட்டப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு செய்தியையும் நான் சொல்ல வேண்டும்.

பெரியார் உயிருடன் இருந்த நாள்வரை. அவரது இறுதிச் சொற்பொழிவு வரை நாட்டுப்பிரிவினை என்பது அவரது சிந்தனையில் இருந்தது. பெரியார் 1973 இல் மரணமடைகிறார். ஆனால் 9.9.76 அன்று பெரியார் திடலில் மணியம்மையார் தலைமையில் நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில் இரண்டாவது தீர்மானம்:

''திராவிடர் கழகம், அரசியல், மத, வகுப்புவாத ஸ்தாபனம் அல்ல. அது தனித்தன்மையான சமூக சீர்திருத்த இயக்கமாகும். பிற்படுத்தப்பட்ட. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபடும் இயக்கமாகும். இது எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடைய இயக்கம் அல்ல.

நமது தலைவர் தந்தை பெரியார். தன்னுடைய இறுதி அறிக்கையில் பிரகடனப்படுத்தியபடி, மக்கள் ஒருமைப்பாடு, மண் ஒருமைப்பாடு, ஆகியவைகளுக்காக உழைப்பது திராவிடர் கழகத்தின் நிகழ்கால, எதிர்காலப் பணியாகும் என்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்கள் விடுதலை 10.9.76 இதழில் வெளியிடப்பட்டன. எமர்ஜென்சி அறிவிக்கப்படும்வரை தி.மு.க.வுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த, அ.தி.மு.க.வை நடிகர் கட்சி என்று அழைத்து வந்த திராவிடர் கழகம்தான் 'எந்தக் கட்சியுடனும் தொடர்பு கொண்டதல்ல, என்று எமர்ஜென்சியின்போது மேற்சொன்ன 2ஆம் தீர்மானத்தில் அறிவித்தது.

''மனிதனுக்குள் ஒருமைப்பாடு காண வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை. அது தடைபடக் கூடாது என்பதற்காகத் தந்தை பெரியார் பல அதிர்ச்சி வைத்தியங்களை வைத்தாரே அல்லாமல் மண்ணைக் கூறுபோடும் நோக்கமல்ல. இந்திய நாட்டிற்கு அந்நியர்களால் ஆபத்து வந்த காலத்திலெல்லாம் இந்திய நாட்டின் பாதுகாப்பு மீது பெரிதும் அக்கறை கொண்டு மக்கள் சக்தியைத் திரட்டுவதில் முன்னிலையில் நின்றவர் தந்தை பெரியார் ஆவார்கள். தந்தை பெரியார் அவர்களையும். திராவிடர் கழகத்தையும் ஒற்றுமைக்கு விரோதிகள் என்று எவரேனும் கருதுவார்களேயானால் அது ஒரு தவறான காயமாகும்.’’

(விடுதலை 15.9.76) இதழை மேற்கோள்காட்டி தோழர். எஸ்.வி. ராஜதுரை. பார்க்க பெரியார்: மரபும் திரிபும் பக்கங்கள் 126-127. 130)

மேற்குறிப்பிட்ட கி. வீரமணியின் கட்டுரைக்கு தோழர். எஸ்.வி. இராஜதுரை பெரியார் உரையை ஆதாரம் காட்டி எழுதுகிறார்:

''அப்படி இல்லாவிட்டால் பிரிவினைதான்! பிரிவினைதான்õ! பிரிவினைதான்!!! முக்காலும் முடிவு ஆகவேண்டியது ஆகும்.’’ இந்த வரிகளைத்தான் பெரியார் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்.

''பெரியாருக்குப் பிந்திய திராவிடர் கழகத் தலைமை. திராவிடர் கழகத்தின் வரலாற்றை மட்டுமல்ல. நீதிக்கட்சியின் வரலாற்றைக் கூடத் திரித்து விட்டது.’’ (மேற்படி நூல் பக்கங்கள் 118. 130.)

எனவே 'பெரியார்’ படத்தில் வரலாறு திரிக்கப்பட்டதற்காகத் தோழர் ருத்ரன் வருத்தப்பட வேண்டியதில்லை.

''காரல் மார்க்ஸ் சிலை பற்றிய விஷயம் எழுந்தபோது. அல்யோஷின் குழுவினர் மார்க்ஸ் சிலை வைக்கப்பட வேண்டிய இடத்தில் ஒரு சிறியளவிலான மாடலை அமைத்திருந்தார்கள். விளாதிமிர் இலியச் (இலெனின் கட்டுரையாளர்) அதைப் பார்ப்பதற்கென்றே அவண் சென்றார். அந்தச் சிலையைச் சுற்றிப் பலமுறை நடந்தார். அது எவ்வளவு பெதாக இருக்கும் என்று கேட்டார். இறுதியில் தமது அனுமதியை அளித்தார். என்னிடம், 'அனதோலி வாசிலியேவிச், தலைமுடி அப்படியே உயிர்ச்சித்திரமாக இருக்க வேண்டும் என்று கலைஞருக்குக் கூறுங்கள். அப்பொழுதுதான் காரல்மார்க்சை நல்ல ஓவியத்தில் பார்த்தவர்களுக்கு அவரைப் பற்றிய ஒரே சித்திரம் கிடைக்கும். ஏனெனில் பெருமளவு அவரைப் போன்ற சாயல் இதில் காணப்படவில்லை’ - என்று லெனின் சொன்னாராம்.

(கலை இலக்கியம் பற்றி வி.இ. லெனின் நியுசெஞ்சு புத்தக வெளியீடு பக்கம் 215-216.)

மேற்குறிப்பிட்டுள்ள கருத்து 'பெரியார்’ திரைப்படத்திற்கும் பொருந்தும்.

தோழர் ருத்ரன் புத்தகம் குறித்து இதற்கு மேல் தனியான விமர்சனம் எதையும் செய்ய வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது.
மேலும் அவர் முன்வைத்துள்ள கருத்துகளை வழிமொழிவதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

பெரியார். திரைப்படம். ஒரு பெரியாரியப் பார்வை.
ருத்ரன். செரா வெளியீடு. விலை ரூ.50/-

Pin It