கோயமுத்தூரில் உள்ள கல்லூரி யொன்றில் செய்தித் தொடர்பு ஊடகங்கள் பற்றிய ஒரு வாரகாலக் கருத்தரங்கு அண்மையில் நடந்தது.  அந்தக் கருத்தரங்குகளில் ஒரு நிகழ்வாகத் தமிழ்த் திரைப்பாடல்கள் குறித்த ஓர் ஆய்வரங்கமும் இடம்பெற்றது.  தற்போதைய தமிழ்த் திரைப் பாடல்களில் வரலாறு காணாத அளவிற்கு ஆபாசமும் ஆங்கில வார்த்தைகளும் மிகவும் இழிவான வகையில் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆய்வாளர்கள் உரையாற்றினார்கள்.  பார்வையாளர்களாகப் பங்கேற்ற ஊடகத் துறை மாணவர்கள் ஆய்வாளர்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டார்கள்.  எனினும் ஒரு சில மாணவர்கள் கேள்வி நேரத்தின்போது ஆய்வாளர்களை நோக்கி எதிர்க்கேள்வி கேட்கவே செய்தார்கள்.

திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதுகிற எந்தவொரு கவிஞரும் ஆபாசமான பாடல்களை மட்டுமே எழுதுவதில்லை.  இன்னொரு பக்கத்தில் அவர்கள் நல்ல பாடல்களையும், மிக நல்ல கவிதைகளையும் எழுதியிருக்கிறார்கள்.  இப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களின் நல்லவை குறித்து பேசுவதைத் தவிர்த்துவிட்டு அல்லவை குறித்தே ஆதங்கப்பட்டுக் கொண்டு கிடக்கலாமா? என்பது அவர்களின் எதிர்க்கேள்வியாக இருந்தது.

ஆபாசப் பாடல்களை எழுதியமைக்காக மிகக் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுகிற பாடலாசிரியர்களும் இதே கருத்தை அவ்வப்போது முன் வைக்கிறார்கள். மெட்டுக்காகவும், மக்களை வசப்படுத்தும் குறிக்கோளுடனும் மிகக் குறிப்பாக இளைஞர்களை வசப்படுத்தும் குறிக்கோளுடனும் பாடல் எழுதும்போது இப்படியெல்லாம் எழுதுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது என்றெல்லாம் அவர்கள் ஆறுதலடைந்து கொண்டாலும் தங்களுக்கான கூடுதல் பாதுகாப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்ல முகம் காட்டும் தங்களது பாடல்களையும் அது போன்ற பிற படைப்புகளையும்தான்.  இதை ஒரு வகையில் ஒப்புதல் வாக்குமூலம் என்றும் கொள்ளலாம்.  மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விடை நியாயமானதாகவே தோன்றக்கூடும்.

ஆனால், இந்த விடை பொறுப்புள்ள படைப்பாளிகள் அளிக்கக்கூடிய விடைதானா?  ஒரு சாரார் கெட்டுச் சிதைந்து கேலிக்கூத்தாடுவதற்கும், இன்னொரு சாரார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்குமாக இரு வேறு வகையான படைப்புகளைத் தருவது படைப்புத் தர்மமாகுமா?  மக்களிடம் போய்ச் சேருகின்ற படைப்புகள் இழிவாகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு ஏன் வந்திருக்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழவே செய்கின்றன.

இன்று விஷச் சாராயம் காய்ச்சி விற்பவர் ஒரு காலத்தில் இளநீர் விற்பவராக இருந்தார்.  வாய்ப்பு கிடைக்கும்போது இப்போதும் சில வேளையில் இளநீர் விற்பனை செய்கிறார் என்கிற வாதத்தின் அடிப்படையில், அவரது இளநீர் வியாபாரத்தின் சிறப்புகளை மட்டுமே கருத்திற்கொண்டு இந்தச் சமூகம் அமைதியாக இருந்துவிட முடியுமா?  ஒருவர் பல நாள்கள் திருடாமல் இருந்ததைக் கணக்கில் கொண்டு அவர் சில நாட்கள் திருடியது கண்டுகொள்ளாமல் விடப்படுகிறதா?  தேவையின் பொருட்டும், தம்மை நிலைநிறுத்திக் கொள்ளவும் இவ்வாறாக எழுத நேர்கிறது எனில், சமூகத்தின் பல்வேறு வகையான குற்றவாளிகள் அவர்களுக்குத் தேவையே இல்லாமல் குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா?

kannadasanஇன்றைய பல திரைப்படப் பாடல்கள் மேற்கோள்காட்டி எழுதக்கூட இயலாத அளவிற்குத் தரம் தாழ்ந்திருக்கின்றன.  படங்களில் இடம் பெற்றாலும்கூட, பாடல்கள் அந்தப் படங்களுக்கு அப்பாற்பட்டவை.  இன்றைய தமிழ்த் திரைப் படங்களை நான் பார்த்ததேயில்லை என்று ஒருவர் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.  ஆனால் அப்படங்களின் பாடல்களைக் கேட்காமல் அவரால் நடமாடவே முடியாது.  எங்காவது பேருந்துக்காக கால் கடுக்கக் காத்துக் கிடக்கும்போது கூட, ‘என்னைக் கணக்கு பண்ணேன்டா!’ என்ற அழைப்பினை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும்.  தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகர்கள் நீதி, நேர்மை, தேச பக்தி, பெண்களின் கற்பு நெறி போன்றவற்றைக் குறித்துத் தாங்கள் நடிக்கும் படங்களில் நாகரிகமான வசனங்களை நிறையவே பேசினாலும் கதாநாயகி களுடன் ஆடிப்பாடும்போது மட்டும் எத்தகைய பாடலுக்கும் அவர்கள் வாயசைக்கத் தயாராக இருக்கிறார்கள்.  பெண்களுக்குத் தரவேண்டிய மதிப்பு, மரியாதை குறித்துப் பக்கம் பக்கமாக வசனம் பேசிவிட்டு, அதற்கு எதிரான பாடல்களைப் பாடி நடிக்கிறோமே என்று நினைக்க, அவர்களுக்கு நேரமில்லை போலும்.

தற்காலத் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெறுகிற தரமற்ற பாடல்களைக் குறித்து சமூகத்தில் பல்வேறு தளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழவே செய்கின்றன.  ஆயினும் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை.  அத்தகைய பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களோ நான் எழுதிய நல்ல இலக்கியங்களை விட்டுவிட்டு இதைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்களே என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள்.  அதாவது அழுகிக் கொண்டிருக்கும் இதயத்தைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு நன்றாக இருக்கிற கைகள், கால்கள் மற்றும் காதுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசுங்கள் என்பது அவர்களது வாதம்.  சமூகத்தின் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து தமது ஆக்கங்கள் குறித்து இது போன்று முரண்பட்ட, பொறுப்பற்ற இரு வேறு கருத்துகள் வரவே வராது.

தள்ளு வண்டியில் தோசை விற்பவர்கள் கூட, ‘குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்; நிறைகளை உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்’ என்று பலகையில் எழுதி அதைத் தங்களது தள்ளுவண்டியிலேயே தொங்க விடுகிறார்கள்.  குறைகளைச் சுட்டிக் காட்டினால் நாங்கள் திருத்திக் கொள்வோம் என்கிற, தைரியமும் தெளிவும் நிறைந்த பிரகடனம் அது.  அப்படியொரு பிரகடனத்தை இன்றைய நமது தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களிடமிருந்து எதிர்பார்ப்போமாக!

- ஜெயபாஸ்கரன்