“என்னுடைய எழுத்து உண்மையில் தேசங்களையும், வரலாறுகளையும் பற்றியதல்ல; அது அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரத்தின் மனப்பிரமைகளையும், ஈவிரக்கமின்மைகளையும் பற்றியது. அதிகாரத்தின் இயல்பைப் பற்றியது. ஓர் அரசோ அல்லது நாடோ, ஒரு ஆணையமோ அல்லது நிறுவனமோ - ஏன், ஒரு தனிமனிதன், ஒரு வாழ்க்கைத் துணை, ஒரு சினேகிதன் அல்லது சகோதரன் கூட - எந்தத் தத்துவத்தின் பெயராலும் பரந்த, தங்குதடையற்ற அதிகாரத்தை தன்னகத்தே குவித்துக் கொள்ளும்போது கோட்பாடுகள் எதுவானாலும் அதீதங்களுக்கு இட்டுச் செல்லும். அத்தகைய அதீதங்கள் பற்றிதான் இங்கு நான் பேசப்போகிறேன்.”

                                                                                                           - அருந்ததி ராய்
                                                                                                           நன்றி: செப்டம்பர் நினைவுகள்

நான் ஜனநாயக நாட்டில் வாழ்கிறேன் என நம்பிக் கொண்டிருக்கும் என் பாவனையின் கடைசிப் பாதையும் திடீரென குருட்டு சந்தில் முடிந்து விட்டது. நான் அங்கிருந்து எலியென துளைத்து வெளியேற வேண்டும் அல்லது வந்தவழியே திரும்பி சென்று மந்தையுடன் பட்டியில் அடைபட வேண்டும். மக்களாட்சியோ மன்னராட்சியோ காலனியாட்சியோ ராணுவ சர்வாதிகார ஆட்சியோ இவற்றின் பலிபீடங்கள் அந்நில மனிதர்களை தினம் தினம் பலி கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. அரசு எந்திரம் முதலாளிகளை பாதுகாக்க தனது அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பின் குரல்களை நசுக்குகிறது. எல்லா நாட்டு அரசுகளும் மனித உரிமைகளை ஒடுக்குவதில் ஒரேவிதமான சட்டத்திட்டங்களையும் வழிமுறைகளையும் வைத்துள்ளன என்பதை எட்டு நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களின் உரையிலிருந்து அதிகபடியாக தெரிந்துகொள்ள முடிந்தது.

விடுதலை, மனித உரிமை பற்றிய பேச்சுகள் எழுத்துகள், காட்சிகள் உலகம் முழுவதும் அரசின் நிறுவனங்களான நீதித்துறை, ராணுவம், காவல்துறை மற்றும் பத்திரிக்கைத் துறைகளால் எப்படி கண் காணிக்கப்படுகின்றன; எப்படி தணிக்கை செய்யப் படுகின்றன; பிறகு அதற்காகக் கிடைத்த தண்டனைகள்; இவை பற்றிய செய்திகளும் தகவல்களும் மக்களிடமிருந்து மறைக்கப்படும் அரசியல் அல்லது அவர்களுக்கு கொண்டு செல்லாமல் தடுக்கப்படும் அரசியல் குறித்து சமீபத்தில் டெல்லியில் மூன்று நாள் கருத்தரங்கு நடந்தது. சுதந்திரமான பேச்சு மற்றும் அச்சமற்ற கவனிப்பு; தென் ஆசிய நாடுகளில் தணிக்கையை எதிர்கொள்ளல் - என்ற கருத்தரங்கம் பிப்ரவரி 22லிருந்து 24 வரை தில்லி மாக்ஸ்முல்லர் பவனில் நடந்தது. தில்லி திரைப்பட ஆவணக் காப்பகம், விடுதலைக்கான திரைபடங்கள் என்ற இயக்கம், மாக்ஸ்முல்லர் பவன் மற்றும் சராய் ஆகிய அமைப்புகள் நடத்திய கருத்தரங்கில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களா தேஷ், நேபாளம், திபெத், பர்மா மற்றும் ஜெர்மனியிலிருந்து திரைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூகப்போராளிகள் கலந்துகொண்டனர். மனிதவுரிமை, எழுத்து, பேச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் மீது நிகழ்த்தப்படும் கண்காணிப்பு, தணிகை மற்றும் தண்டனைகளை குறித்தும் அதை எதிர்கொண்ட அனுபவங்களையும் தலைமறைவு வாழ்க்கையின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

அரசியல் திரைப்படங்களும், குறுபடங்களும், விவரணப்படங்களும் எடுக்க முயலும்போது நேரும் அரசியல் குறுக்கீடுகள், தடைகள், நீதித்துறையை அணுகும் போது நீதித்துறையும் அரசுக்கு சார்பாகவே எப்போதும் செயல்படும் போக்குகள் குறித்து திரைப்பட இயக்குநர்களும் கலைஞர்களுமான ஆந்ரே வெயில் (ஜெர்மனி), அனுராக் காசியப் (மும்பை), ஹசன் ஜைதி (பாகிஸ்தான்) பிரன்ஜாய் குகா (டெல்லி) பிரசன்னா விந்தனகெ (இலங்கை) தரூண் பார்த்தியா (மேகாலயா), தன்வீர் மெகம்மல் (பங்களாதேஷ்) விமுக்தி ஜெயசுந்தரா (இலங்கை), அமர் கன்வர், ராகுல் ராய், சபா திவான், ரஞ்சனி மஜூம்தார், சஞ்சய் கக், ஷோகினி கோஷ், ஷுத்தபிரதா சென்குப்தா (டெல்லி) தங்கள் அனுபவங்களை அமர்வில் பகிர்ந்துக்கொண்டனர். செல்வாக்குடைய தனி மனிதர்களும், முதலாளிகளும் சிறுபான்மையினருக்கு, தலித்துகளுக்கு, பழங்குடிகளுக்கு, பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்களில் முக்கியப் பங்காற்றுவதன் பட்டியலை வந்திருந்த பத்திரிக்கைத் துறை சார்ந்தவர்கள் அளித்தனர்.

பாகிஸ்தான் எல்லைப்புற கிராமங்களில் வாழும் அப்பாவி பழங்குடிமக்கள் அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்படுகிறார்கள். நிருபர்கள் காணாமல் போகிறார்கள். இதற்கு ராணுவமோ தலிபான் இயக்கமோ பொறுப்பேற்பதில்லை. அரசை விமர்சிக்கும் படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்படுகிறது. பல வெட்டுகளுக்குப் பிறகு தப்பித்த சிலபடங்கள் பிறகு திரையிட முடியாமல் தடுக்கப்படுகின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் ரேடியோ, தொலைக்காட்சி நிறுவனங்களை அரசு தடை செய்து விட்டதாக தனது உரையில் குறிப்பிடுகிறார் பாகிஸ்தான் இயக்குநர் ஹசன் ஜைதி. ஏறக்குறைய இதே போன்ற தகவல்களை பங்களாதேஷிலிருந்து வந்த சாரா ஹூசைனும், தன்வீர் மொகம்மலும் தெரிவித்தனர்.

“நேப்பாள அரசின் மனித உரிமை மீறல்களைக் குறித்து எழுதியதற்காக பத்துமாதம் சிறையில் இருந்தேன். இருபதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் சிறையில் உள்ளனர். மாவோயிஸ்டுகளை கொல்கிறேன் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களையும் கால் நடைகளையும் அரசு கொன்று குவிக்கிறது. 5000 பேர் இதுவரை காணாமல் போய் உள்ளனர்.” என்று இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ள ஜித்மன் பஸ்நட் சொல்கிறார்.

தர்மசாலாவில் தஞ்சமடைந்த குடும்பத்தில் பிறந்த கவிஞர் டென்சின் சுன்தே, சீனாவின் காலனி ஆதிக்கத்தின் கீழுள்ள திபெத்தின் காலாச்சாரம் சீனக் கலாச்சாரமாக மாறி சீன மயமாகி வருவதன் ஆபத்தை விளக்கினார். தாய்நாட்டை மிதித்து விடவேண்டும் என்ற உந்துதலில் கால்நடையாகவே எல்லையைக் கடந்து சென்றதற்காக சீன அரசால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் வைக்கப்பட்டாராம். சீன பிரதமர்கள் 2002ல் மும்பைக்கு வந்தபோதும் 2005ல் பெங்களூர் வந்தபோதும் அவர்கள் உரை நிகழ்த்தும் ஓட்டலின் உச்சியில் ஏறி “Free Tibet” பதாகை ஏந்தி நின்று போராடியதைக் குறிப்பிட்டார்.

பர்மாவிலிருந்து வந்திருந்த நெம் டேவிஸ் - பெண் எழுத்தாளர் மே நெயனின் நேர்காணலை திரையிட்டார். அவரின் பல நூல்கள் பர்மிய அரசால் தடை செய்யப் பட்டதால் அவர் இன்று பர்மாவைவிட்டு வெளியேறி பாங்காங்கில் அகதியாக குடியேறி குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார்.

சிங்கள இயக்குநர்கள் பிரசன்னா விந்தானகெவின் (ஒரு பௌர்ணமி நாளில் மரணம்) திரைப்படமும் விமுக்தி ஜெயசுந்தராவின் (கைவிடப்பட்ட நிலம்) திரைப்படமும் தனியே விரிவாக பேசப்பட வேண்டிய மிக முக்கியமான படங்கள். போரினால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் மீள முடியாதபடி, இழப்பை ஈடுகட்ட முடியாதபடி எப்படி பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதின் துயரத்தை காட்சிப் படுத்தியிருந்தனர். நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மனித மனதின் குரூரத்தையும் இயலாமையையும் கயமையையும் துரோகத்தையும் வன்முறையையும் காட்சிப் படுத்தியிருந்தனர். உரையாடல்கள் குறைக்கப்பட்டு காட்சிகளால் உயிரை உலுக்கும் படங்கள் இவை. ஈழ, தமிழ் நிலம் அதைவிட பலமடங்கு போரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றிப் பேச தமிழ்ப் படைப்பாளிகள் துணிந்து படமாக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

“ஈழ விடுதலைப்போரில் 60 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் தெரியும். மற்றும் அது சர்வதேச பிரச்சனையாகவும் உள்ளது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் ஐம்மு - காஷ்மீரில் 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை நம் அண்டை மாநிலங்களுக்குக் கூடத் தெரியாமல் அரசு மூடி மறைக்கிறது. ராணுவம், எல்லைப் பாதுகாப்புப்படை, ராணுவ உளவுப்படை, போலீஸ், போலீஸ் உளவுப் பிரிவு, போலீஸ் ஆயுதப்படை இப்படி 8விதமான இந்திய அரசின் அனைத்து பாதுக்காப்புப் படைகளும் மக்களை வாழவிடாமல் 24 மணிநேர கண்காணிப்புக்கு உட்படுத்துகின்றன. காஷ்மீரில் மக்கள் தொகையைவிட அரசு படையினர் அதிகம். தீவிரவாதிகளை கொல்கிறேன் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை இவர்கள் கொன்று குவிக்கிறார்கள்.” என அரசால் மறைக்கப்பட்ட உண்மைகளை அஜிஸ் ஹூசைனும் பி.ஜி. ரசூலும் அரங்கில் பகிர்ந்து கொண்டனர்.

இதன் மீதான விவாதத்தில் பேசிய அருந்ததி ராய் “சாகித்திய அகாடமி விருதை மறுத்ததற்காக 8 காரணங்களைக் கூறியிருந்தேன். அதில் 8வது காரணமாக அரசு காஷ்மீர் பிரச்சனையில் நடந்துகொள்ளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். எல்லா பத்திரிக்கைகளும் காரணங்களை வெளியிடவில்லை. ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் இதை மட்டும் எடிட் செய்து 7 காரணங்களை மட்டும் வெளியிட்டது. காஷ்மீர் என்ற வார்த்தையை இந்தியர்கள் யாரும் பேசவோ எழுதவோ கூடாது என்பதில் அரசும் பத்திரிக்கைத் துறையும் மிகக் கவனமாக இருக்கிறது.” எனக் குற்றம் சாட்டினார்.

ஒரிசாவிலிருந்து வந்திருந்த சுதிர் பட்நாயக், கேரளாவைச் சேர்ந்த வினோத் ஜோஸ் இருவரும் ஒரிசாவின் கலிங்காநகர் போராட்டம் மற்றும் கேரள மாநிலம் முத்தங்கா போராட்டங்களின் வரலாற்று, சமூக காரணங்களைப் பேசினார். மேகாலயாவை சேர்ந்த தரூண் பார்த்தியா, ராபின் ஸ்நகன்காம் ஆகியோர் தமது பகுதியைச் சேர்ந்த தலித்துகள் மற்றும் பழங்குடிகளின் மீது உள்ளூர் முதலாளிகளும் போலீஸ்காரர்களும் ஏவிவிடும் வன்முறையையும் மக்கள் தங்களின் உரிமைக்காக அமைதியாகப் போராடினால் கூட மிக வன்மையாகத் தாக்கப்பட்டு, கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் தள்ளுவதையும் மேலும் இவர்களை தீவிரவாதிகள் என்று கூறி துப்பாக்கி சூடு நடத்தி கொன்று குவிப்பதையும் ஆதாரங்களுடன் விளக்கினர். இதைப்பற்றி தொடர்ந்து எழுதிவருவதால் தாங்கள் கடுமையாக அச்சுருத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அருந்ததி ராய் “அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடி மக்களோ பத்திரிக்கையோ வெற்றி பெற முடியும். ஆனால் நம் நாட்டு அல்லது பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் அரசோ, நீதிதுறையோ, பத்திரிக்கைகளோ அனுமதிப்பதில்லை. குறிப்பாக “நர்மதா பச்சோ அந்தோலன்” இயக்கம் நடத்தும் நர்மதா பள்ளத்தாக்கை காக்கும் போராட்டத்தை நசுக்க அரசு பல வழிகளில் முயல்கிறது. அரசின் கொள்கைகளால் இந்திய கிராமங்கள் முற்றிலும் அழிந்தாலும் இவர்களுக்குக் கவலையில்லை. முதலாளிகள் வாழ வேண்டும். இதுதான் அரசின் கொள்கையாக உள்ளது.” என்றார். காஷ்மீர் பிரச்சனையிலிலும் அரசின் கொள்கைகளை விமர்சித்து பேசினார். “அதனால் மக்கள் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியாதவர்களாக அதிகாரத்துக்கு எதிரானவர்களாக மாற வேண்டும். சட்டத்தை மீறுவது, சட்டத்தை மறுப்பது, சட்டத்தை எதிர்ப்பது, மக்கள் விரோத சட்டங்களை மாற்றுவது போன்றவற்றை இன்றைக்கான போராட்ட வடிவமாக நாம் கையில் எடுக்க வேண்டும்” என்றார்.

கண்காணிப்பு, தணிக்கை, தண்டனை - தனிநபர்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு எழுதும் பெண்களை தாக்குவதின் அரசியலை எனது கட்டுரை (உடலையும் மனதையும் எழுதுதல்) பேசியது. தமிழ்நாட்டில் 1993 லிருந்து என் மீதும் சக பெண் படைபாளிகள் மீதும் தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்களை பட்டிய லிட்டிருந்தேன். குறிப்பாக ரவிக்குமார், அ. ராமசாமி மற்றும் அருணனால் புதுச்சேரியிலிருந்து நடத்தப்பட்ட “ஊடகம்” பத்திரிக்கை எனக்கு ஆபாச பிறந்தாள் வாழ்த்துக் கவிதை வெளியிட்டதையும் அதற்காக அதன் ஆசிரியர்களை விளக்கம் கேட்டு நடந்த சம்பவமும்; அதன் பிறகு சில வாரங்களுக்கு பின் நானும் ரமேஷும் தலித் கலைவிழாவுக்குச் சென்றிருந்த போது ரவிக்குமார், அ. ராமசாமி, அருணன் மற்றும் இவர்களின் மனைவிகள் என்னைச் சூழ்ந்து கொள்ள, கணவன்மார்கள் பின்னால் நிற்க, அவர்கள் “தேவடியாவை தேவடியான்னு எழுதுவதில் என்ன தப்பு.” என்று கேட்டதையும் மேலும், “எங்கள் கணவர்களை உன்னை ரேப் பண்ண அனுப்புவோம்” என முழங்கியதையும் குறிப்பிட்டேன். நான் இக்கட்டுரையை வாசிக்கும்போது ரவிக்குமாரும் அரங்கில் இருந்தார். இது அங்கு வந்திருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மறுநாள் தலித் மீதான ஒடுக்குமுறை அரசியல் பற்றி ரவிக்குமார் பேசும்போது இதுபற்றி கேள்வி எழுப்பும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

இந்தியாவில் எல்லா துறைகளிலும் தலித்துக்களின் பங்களிப்பு திட்டமிட்டு தவிர்க்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் விளக்கினார் ரவிக்குமார். இவரின் பேச்சு முடிந்தவுடன் நான் கேள்வி எழுப்பினேன். 1. முதல் தாக்குதல் உங்கள் பத்திரிக்கையிலிருந்தும் உங்கள் மனைவியிடமிருந்தும் என் மீது நிகழ்ந்தது. 2. தலித் அரசியல் என்பது தலித் ஆண்களின் நலன்களை மையப்படுத்திய அரசியலா? ஏனெனில் கவிஞர். சுகிர்தராணி மூன்று வருடங்களாக தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார். நீங்கள் அவருக்கு ஆதராவாகப் பேசாததும் எழுதாததும் ஏன்? 3. நீங்கள் விடுதலை சிறுத்தையுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குஷ்பூ பிரச்சனையில் எழுந்த சர்ச்சை குறித்து உங்களின் கருத்தை சொல்லாததும் எழுதாததும் ஏன்?

ரவிக்குமாரின் பதில் - கவிஞர். சுகிர்தராணி ஒரு சுயேச்சையான கவிஞர். அவருக்கு அவரை பாதுகாத்துக் கொள்ள தெரியும். நாங்கள் ஆதரவுதர வேண்டிய அவசியம் இல்லை. 2. விடுதலை சிறுத்தை அமைப்புடன் எவ்விதத் தொடர்பும் எனக்கு இல்லை. குஷ்பூ பிரச்சனையில் அமைப்பினரை கண்டித்து இந்தியாடுடே மற்றும் வேறு சில பத்திரிக்கையில் கருத்து கூறியிருக்கிறேன் என்றார்.

ரவிக்குமாரின் பதிலில் அதிருப்தி அடைந்த டில்லி இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழக பேராசிரியரும் தலித் எழுத்தாளர் அமைப்பின் தலைவியுமான விமல் தோரட், தலித் பெண்கள் தொடர்ந்து தலித் ஆண்களால் ஒதுக்கப்படுவதாகவும் ஒடுக்கப் படுவதாகவும் குற்றம் சாட்டினார். தலித் அரசியலில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுவதில்லை என்பதையும் பிற அரசியல் அமைப்பு போலவே தலித் அரசியலும் தலித் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை. இந்தியா முழுவதிலுமுள்ள தலித் அமைப்புகளில் இந்த குறை உள்ளதாகவும் அதற்காக தலித் பெண்கள் தங்களுக்கான அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொண்டு செயல்படுவது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஷுத்த பிரதா சென்குப்தா ரவிக்குமாரின் பொறுப்பற்ற பதிலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

மாற்றுக் கலாச்சாரம் குறித்த கடைசி அமர்வு அதிக விவாதத்தை உண்டாக்கியது. மக்கள் விரோத அரசுக்கு எதிரான போராட்ட வழிமுறைகள் எப்படி மாற்றுக் கலாச்சார வடிவங்களை பெற முடிகிறது. போராட்டம் என அறிவிக்காமலே போராடுவதன் உத்திகளையும் வழிமுறைகளையும் மாணவர்களும் நாமும் புதிது புதிதாக கண்டடைய வேண்டும் என்பதை தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் முகுல் மன்காலிக் விளக்கினார்.

கலந்துரையாடலில் தன் கருத்துக்களை முன்வைத்த பிரேம், தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில எழுத்துக்களின் மீதும் பேச்சுக்களின் மீதும் தொடரும் தணிக்கைகளையும் எழுதப்படுவதால் நிகழும் புறக்கணிப்பையும் விளக்கினார். இந்திய சென்சார் போர்டு தாராளமாக ஆபாசத்தையும் வன்முறையையும் பெண்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து காட்சிகளையும் அனுமதிக்கிறது. ஆனால் அரசியல் படங்களை மட்டும் சென்சார் போர்டு எப்போதும் அனுமதிப்பதில்லை.

தணிக்கையும் மரண தண்டனையும் அறத்தை பாதுக்கக்க இங்கு ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக அரசின் மீதான அதிருப்தியையும் எதிர்ப்பையும் அழித்தொழிக்க பயன்படுத்தபடும் ஆயுதமாக இருக்கிறது. இது பற்றி தமிழ்ச் சூழலில் சிறு அளவில் விவாதங்கள் நடந்து வந்தாலும் ஒரு பெரிய அளவிலான போராட்டமாக மாறவில்லை. தேசிய அளவில் நிகழும் இது போன்ற கருத்தரங்குகள் தமிழ் அரசியல் போக்கையும் மாற்ற உதவும் என்றார். மேலும் மக்கள் விரோத சட்டத்துக்குப் புறம்பாக கலைஞர்கள் செயல்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அண்டைநாடுகளின் மக்கள் விரோத அரசியலுடன் நம் நாட்டின் மக்கள் விரோத அரசியலை உள்வாங்கிக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது இந்தக் கருத்தரங்கம். மேலும் பிற நாட்டு, பிற மாநில படைப் பாளிகளின் செயல்பாடுகளுடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டபோது குற்றவுணர்வுக்குள்ளாக நேர்ந்தது.

Pin It