அறிவை தெளிவாக்குகின்ற, வளர்க்கின்ற ஆதார சக்தியான தத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர் சாக்ரட்டீஸ். இவர் தத்துவ அறிஞர்களின் தந்தை (Father of Philosophers) என அழைக்கப்படுகிறார். நாகரிகத்திலும்,கலை இலக்கியத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய நாடான கிரேக்கம் தான் சாக்ரட்டீசின் தாய் நாடு. கிரேக்க நாட்டின், ஏதென்ஸ் நகரில் பேநாரட்டி-சாப்ரோநிஸ்கஸ் ஆகியோருக்கு கி.மு.470ஆம்ஆண்டு சாக்ரட்டீஸ் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சிற்பி. அதனால் சாக்ரட்டீஸ் இளம் வயதிலேயே சிலைகளை வடிக்கக் கற்றார். இந்தப் பயிற்சி தான் பிற்காலத்தில் அவருக்கு அறிவை செதுக்க உதவியது. கேள்வி எனும் உளியால் தேவையற்ற பகுதிகளான மூட கருத்துக்களை செதுக்கி நீக்கினால், பகுத்தறிவு எனும் உண்மை யின் சிலை உருவாகிவிடும் என்பதை சாக்ரட்டீஸ் நடைமுறை பயிற்சியிலே தெரிந்து கொண்டார். சாக்ரட்டீசுக்கு கேள்விகளை கேட்பதில் மிகவும் ஆர்வம். ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பார். இந்த ஆர்வத்தில் அனாக்சா கோரஸ் என்ற ஆசிரியரிடம் ஒரு மாணவராக முதலில் போய் சேர்ந்தார். மைர்டோன், சான்தீப்பி என்ற இரு பெண்களை திருமணம் செய்து கொண்டார். அக்கால வழக்கப்படி அவர் தன் தாய் நாட்டுக்கு சேவை செய்ய போருக்கு செல்ல வேண்டியிருந்தது. ராணுவத்தில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தார். ஒரு சூழ்நிலையில் அவர் ராணுவப் பணியை விட்டு வெளியேற வேண்டி இருந்தது.
சாக்ரட்டீஸ் மிகவும் எளிமையானவர். ஒரே ஒரு ஆடையுடன், கால்களில் செருப்பின்றி பல இடங்களுக்கும் சுற்றித்திரிந்து அறிவை பரப்பினார். மக்கள் கூடும் இடங்களிலும், இளைஞர்கள் கூடும் இடங்களிலும் அவர் பேசினார். சாக்ரட்டீஸ் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவரின் கருத்துக்கள் நூலாக அவரால் எழுதப்படவில்லை. சாக்ரட்டீசின் மாணவர்களான பிளாட்டோவும், செலோபோனும் அவரின் கருத்துக்களை தங்களின் நூல்களிலே எழுதி வைத்தார்கள்.
சாக்ரட்டீஸ் பகுத்தறிவினை பயன்படுத்தச் சொன்னார். அறிவுக்கு முதன்மையான இடத்தை அளித்தார். மூட நம்பிக்கையை நீக்கச் சொன்னார். எதையும் ஏன், எதற்கு என கேள்விகளுக்கு உட்படுத்தி ஆராயாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றõர் சாக்ரட்டீஸ்.இவரிடம் கேள்வி கேட்கும் மக்களிடம், பல கிளை கேள்விகளைக் கேட்டு சிக்கலின் அடிப்படையை புரிந்து கொள்ளும்படி சாக்ரட்டீஸ் உதவி செய்வார்.
சாக்ரட்டீசின் பேச்சு வன்மையால் இளைஞர்களும், மக்களும் கவரப்பட்டனர். அதனால் அன்று இருந்த முடியாட்சியினர் அஞ்சினர். சாக்ரட்டீஸ் இளைஞர்களை தவறான கருத்துகளின் மூலம் கெடுக்கிறார்; ஜனநாயக கருத்துக்களை சொல்கிறார்; விழிப்புணர்வு ஊட்டுகிறார்; கடவுளர்களை பழிக்கிறார்; அவர் ஒரு நாத்திகர் என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டு களை சுமத்தினர். நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை அளித்தது.
கி.மு.3999ஆம் ஆண்டு அவரின் 71 ஆம் வயதில் ஹெம்லாக் என்ற பெயருடைய நஞ்சை, ஒரு குவளையில் ஊற்றி குடித்து சிறையிலேயே மரணமடைந்தார் சாக்ரட்டீஸ். விசாரணையின்போது அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அவரை நீதிபதிகள் விடுவித்து விட்டிருப்பார்கள். அவரோ உண்மையே பேசினார். அவரின் நண்பரான கிரிப்டோ சிறையிலிருந்து தப்பிச் செல்ல உதவுவதாக சொன்னார். ஆனால் அதையும் கூட அவர் மறுத்துவிட்டார்.
“நாம் எதை இழந்தாலும் தன்மானத்தை இழக்க இடம் தரக் கூடாது'' என்று பேசியவர் சாக்ரட்டீஸ். அதனால் அவர் போதித்த கருத்துக்கு உண்மையாக இருந்தார். எதை சொல்கிறோமோ அதன்படி நடக்க வேண்டும் என்பதற்கும், இறுதிவரை உண்மையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்கும் சாக்ரட்டீஸ் சான்றாகத் திகழ்ந்தார். அவர் உண்மைக்காக உறுதியுடன் நின்ற ஒரு கருத்துப் போராளி.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- 4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்?
- நாடார் மகாநாடு
- பிதாவே மன்னிக்காதீர்
- அக்கினி சாட்சியாக அங்கத்தினர்!
- மோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா?
- குற்றமும் தண்டணையும்
- பொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்
- வெங்காயம்!
- தீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை
- புலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா
- விவரங்கள்
- எழுத்தாளர்: கமலப்பிள்ளை
- பிரிவு: தலித் முரசு - நவம்பர் 2008
அறிவோம் அறிஞரை - சாக்ரட்டீஸ்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
RSS feed for comments to this post