ஆனந்த் தெல்தும்தே / தமிழில் : பக்தவச்சல பாரதி

அண்மையில் கயர்லாஞ்சியில் தலித்துகளைக் கொன்றுக் குவித்த கொலை வெறியாட்டம் பற்றிய செய்திகள் செய்தித் தாள்களிலிருந்தும் தொலைக் காட்சிகளிலிருந்தும் அநேகமாக மறைந்துவிட்டன. ஆனால் அந்நிகழ்வின் தாக்கம் மறையவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை? இக்கொலை நிகழ்வு பொது மக்களிடத்திலும் தலித்துகளிடத்திலும் எத்தகைய எதிர்வினையை எழுப்பியுள்ளது? இந்நிகழ்வு சுட்டிக்காட்டும் பாடமென்ன? என்பன பற்றியெல்லாம் நாம் அறிந்துகொள்ள முடியும். கயர்லாஞ்சியில் நடந்த கொலையானது நமது சூழலில் முதன்முதலாக நடந்த ஒரு நிகழ்ச்சியல்ல.

ஒரேயொரு முறை நடந்ததுமல்ல; மேலும் இதுவரை நடந்த கொலைகளிலேயே இது மிகவும் தனித்துவமானதுமல்ல. இக்கொலை வெறியின் கொடூரமும் காட்டுமிராண்டித்தனமும் புதிதல்ல என்றாலும் இது உருவாக்கிய வெறுப்புணர்வு மிக அதிகமாகும். இதற்கு முந்தைய காலத்தில் நடந்தவை போலல்லாமல், அண்மைக் காலங்களில் தலித்துகளின் மேல் நடக்கும் கொடூரத் தாக்குதல்களில் ஒரு பொது அம்சம் இருப்பதை இந்நிகழ்வின் மூலம் அறியமுடிகிறது. அதே போல் இந்நிகழ்வின் மூலம் இன்றைய சாதிய அட்டூழியங்களின் ஒட்டுமொத்தப் பாங்கினை அறிவதற்கும் இக்காலத்திய சாதிய வெறியுணர்வு எத்தகையது என்பதை அறிவதற்கும் கயர்லாஞ்சி நிகழ்ச்சி உதவும். மேலும் உலகமயச் சூழலில் சாதியணர்வு மங்கிவருகிறது என்ற ஒரு கருத்தைத் தகர்த்தெறிவதோடு, சாதி அட்டூழியங்கள் நடைபெறும் போதெல்லாம் கண்டுகொள்வது - போன்று கண்டுகொள்ளாமல் நடக்கும் அரசின் வஞ்சகச் செயலை கயர்லாஞ்சி நிகழ்ச்சி மிக நன்றாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நிலையில் தலித் அரசியல் காலங்காலமாக திவாலாகிப் போயுள்ள சூழலையும், இந்தப் பின்னணியில் வருங்கால தலித் தலைமுறையினர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய புதிய அரசியல் வியூகத்திற்கானப் படிப்பினைகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்தியா உலகமயமாகும் சூழலில் சாதி

உலகமயமாதல் இந்தியாவுக்கு வளம் சேர்க்கும்மென்ற சுபிட்சமான மனோநிலையில் திளைக்கத் தொடங்கியுள்ள நிலையில் கயர்லாஞ்சி ஒரு வஞ்சகப் புகழ்ச்சிக்குறியதாகியுள்ளது. இன்றைய உலகமயச் சூழலில் அதிகபட்சமாக 9.2 அளவு வளர்ச்சி வீதம் ஏற்பட்டுள்ளது என்றும், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாகியுள்ளது என்றும் அந்நிய முதலீடு பெருகிவருகிறது என்றும், சென்செக்ஸ் குறியீடுகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதென்றும், இவ்வாறான பிற அளவுகோல்கள்படியும் இந்தியா வளர்ச்சி முகத்தில் உள்ளது என்ற மகிழ்ச்சிச் சூழலில் உள்ளது. இன்னும் சில பத்தாண்டுகளில் உலகில் ஒரு முக்கிய வல்லரசாக முடியும் என்ற மயக்கக் கனவையும் காணத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உலகமயத்தை ஆதரிப்பவர்களின் கூற்றின்படி முதலாளித்துவத்திற்கு முந்தைய வடிவமான சாதிமுறையானது உலகமயச் சூழலில் கட்டுடைந்து சிதையத் தொடங்கும் என்று கூறத்தலைப்பட்டனர். ஆனால் அத்தகு அறிகுறிகள் ஏதும் ஏற்படவேயில்லை. மாறாக, சமூகத்தில் சாதிய முரண்பாடுகள் இதற்கு முன்பைவிட மிக வேகமாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. சாதி அட்டூழியங்கள் சாதியுணர்வின் ஒன்றுபட்ட கொடூர வெளிப்பாடாகும். கடுமையான சாதி வெறியின் மாற்று வடிவமாகவே இவை வெளிப்படுகின்றன.

சாதிக் கொடுமைகள் பற்றிய பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட புள்ளிவிவரங்கள் உலகமயம் ஏற்படுவதற்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்டுள்ளன. இப்புள்ளி விவரங்கள் மூலம் எல்லா வகையான கொடுமைகளுமே மேலும் மேலும் பெருகியிருப்பதையே இவை காட்டுகின்றன; குறையவேயில்லை. அட்டவணைச் சாதிகள், பழங்குடிகள், மீதான கடந்த மூன்று பத்தாண்டுகளின் புள்ளி விவரங்கள் (1981 - 1990, 1991 - 2000, 2001 - 2005) தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வகையான குற்றங்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தீயிட்டுக் கொளுத்துதல் PCR சட்டத்தின்படி தண்டிக்கப்படும் குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் தொடர்ந்து பெருகி வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் எஸ்.சி/எஸ்.டி மீதான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பெரிதும் குறைந்திருப்பதை அறியமுடிகிறது. இத்தகு குற்றங்கள் ஆண்டு சராசரி 15182.8 ஆக இருந்தது. ஆனால் 1980-90களில் அவை பாதியாகக் குறைந்துவிட்டது எனினும் 2001 - 2005ல் அது சற்று அதிகரித்து 9863.8 ஆக உயர்ந்திருக்கிறது. இச்சட்டம் மிகக் கடுமையானது என்பதால் காவல்துறையினர் இதன்கீழ் குற்றத்தைப் பதிவு செய்வதில் தயக்கங்காட்டுகின்றனர். இல்லையென்றால் மேற்கூறிய புள்ளி விவரங்கள் இன்னும் கூடுதலாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்புள்ளி விவரங்களின் எண்ணிக்கைகள் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை முழுவதுமாக வெளிப்படுத்துவதில்லை. அண்மைக்காலக் கொடுமைகளைப் பார்க்கும் போது கடந்த காலங்களைவிட இப்போது அதன் தன்மையிலும் செய்யும் முறையிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. கடந்த காலத்தில் பெரிதும் தனிமனிதர்களே தலித்துகள் மீது அட்டூழியம் செய்தார்கள். ஆனால் இப்போதோ பலர் குழுவாகச் சேர்ந்து ஒரு விழா கொண்டாடுவது போல வன்கொடுமைகள் செய்கிறார்கள். ஹரியானாவில் ஜஜ்ஹார் என்னுமிடத்தில் தலித்துகள் ஐந்துபேர் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் சாதி இந்துக்கள் பட்டப்பகலில் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குரிய இடத்தில் வெட்டிக் கொன்றனர். காவல் துறையினர் இதனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கொலை யாளிகளை உடனடியாக தண்டிக்கக்கூடிய வகையில் இது பொது இடத்திலும் பகலிலும் நடந்துள்ளது. இன்னொரு நிகழ்ச்சி மகாராட்டிரத்தில் மரத்வாடா பகுதியில் உள்ள பூட்டேகோவன் என்னுமிடத்தில் 2003 மே மாதம் நடந்தது. இங்கு ஒரு கூட்டமாக வந்த சாதி இந்துக்கள் தலித் பையனை உயிருடன் தீயிட்டுக் கொளுத்திவிட்டனர்.

இதே காலகட்டத்தில் பீட் மாவட்டத்தில் சொன்ன கோட்டா ஊரில் ஒரு ஏழை தலித் பையனை சாதி இந்துக்கள் துரத்திச் சென்று கல்லால் அடித்தே கொன்றுவிட்டனர். இத்தகு நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது வன்கொடுமைகளின் போக்கும் தன்மையும் கொடூரமாக மாறியிருக்கிறது. இவை மனிதக் கற்பனைகளுக்கு அப்பால் உள்ளன. சாதி இந்துக்கள் ‘ஒன்று சேர்ந்து’ தாக்கும் முறை அதிகரித்து வருகிறது. கயர்லாஞ்சியில் போட்மேங்கசில் நடந்த கொடுமையானது மனிதர்களா இப்படி இழைத்தார்கள் என்று நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. ஒரு தாயும் அவர் மகளும் ஆடையின்றி அம்மணமாக ஊரின் நடுப்பகுதிக்கு இழுத்து வரப்பட்டனர்; இரு இளைஞர்களும் அவர்களுடைய தாயோடும் சகோதரிகளோடும் வன்புணர்ச்சி செய்யும்மாறு கொடுமைப்படுத்தப்பட்டனர்; அதற்கு அவர்கள் மறுக்கவே அவர்களின் ஆண்குறிகள் கல்லால் அடித்து நசுக்கப்பட்டன. தலித் பெண்கள் அக்கூட்டத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். இவ் உடல்கள் கால்வாய்களில் வீசி எறியப்பட்டன. இத்தகு கொடூரங்களை செய்தவர்கள் மனிதர்களா என்று நம்பமுடியாத அளவிற்கு நடந்தேறியுள்ளன.

கயர்லாஞ்சி நிகழ்வுகளில் உலகமயத்தின் தாக்கம் உள்ளது என்று வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட முடியாமல் போகலாம். ஆனால் அதன் கூறுகள் இதனுள் ஊடுருவியுள்ளன என்பதை அனுமானிக் காமல் இருக்க முடியாது. இந்திய கிராமப்புறங்களில் எதிர்பாராத விளைவுகளை உலகமயம் ஏற்படுத்தி வருகிறது. வெட்கப்படவேண்டிய அளவில் விவசாயிகளின் தற்கொலை நிகழ்கிறது. கயர்லாஞ்சி ஒரு வளமான பகுதியாகும். நீர்ப்பாசன வசதியுடன் விவசாயம் இங்கு நடைபெறுகிறது. இங்குள்ள 373 ஹெக்டேர் நிலங்களில் 70 சதவீத நிலம் கால்வாய்ப் பாசன வசதி பெற்றுள்ளது. ஆனால் நிலவுடைமையில் ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ளது. 25 ஏக்கர் வைத்திருப்பவரும் உண்டு, 3.5 ஏக்கர் வைத்திருப்ப வரும் உண்டு; இங்குள்ள 800 பேரில் 10-12 பேரே கூலி வேலை செய்பவர்கள். ஒரு ஏக்கரில் 15 குவிண்டால் ஏஙப நெல் விளைகிறது. இந்நெல் கிலோ ரூ. 15/- அளவுக்கு விலை போகிறது.

இத்தகு நிலையில் கயர்லாஞ்சியில் பொருளாதார, நெருக்கடி ஏதுமில்லை என்பது போல் தோன்றுகிறது. ஆனால் விவசாய இடுபொருள்களின் விலை ஏற்றம், விஷம்போல் ஏறியுள்ளது. நுகர் பொருள்களின் விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம், உலகமயமாதலால் ஏற்பட்டுள்ள நுகர்வுப் பண்பாட்டின் ஏகபோகத் தாக்கம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஓர் உளவியல் அழுத்தத்தை இறுக்கி வைத்துள்ளன. இது வாழ்வின் ஒவ்வொரு சூழலில் ஒருவித விளைவை ஏற்படுத்துவதாகச் செயல் படுகிறது. தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் முரண்பாட்டில் இந்த உளவியல் அழுத்தம் உள்ளே நுழைகிறது. உலகமயக் காலத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளில் உலகமயத்தின் கூறுகளும் ஊடுருவியே நிற்கின்றன என்ற கருதுகோளை முன்வைத்தோமானால், கயர்லாஞ்சியும் இதிலிருந்து தப்பிக்க முடியாது எனலாம்.

எனினும் கயர்லாஞ்சி நிகழ்ச்சி உலகமயத்தால் நிகழ்ந்தது என்று நேரடியாகச் சொல்ல முடியாது. இந்நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது போட்மாங்கே என்னும் ஊருக்குச் செல்லும் வழிக்குரிய ஒரு நிலத் தகராறு ஆகும். ஆனால் இத்தகராறிலும் வன்கொடுமைகளிலும் நினைத்துப் பார்க்க முடியாத பரிமாணங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த நிலத்தகராறு 17 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. பையாலால் போட்மேங்கே என்பவர் தன் மணவழி உறவினர் ஊருக்கு அருகில் 5 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்நிலத்தில் பயிரிடுவதற்காக தன் குடும்பத்தாருடன் அந்த ஊருக்கே குடியேறி விட்டார். இவர் வாங்கிய நிலமானது சிலகாலம் பயிரிடப்படாமல் இருந்ததால் அதனை ஊரார் நடந்து செல்லும் வழியாகப் பயன்படுத்தினர். இவர் பயிரிடத் தொடங்கியதால் ஊராருக்கு வழி அடைபட்டுப் போனது. இப்பிரச்சனை நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் பையலால் தன் மனைவி சுரேகாவின் நெருங்கிய உறவினர் சித்தார்த் கஜ்பியே காவல்துறையில் உயர்பதவியில் இருந்ததால் எவ்வித இழுக்குமின்றி இவ்வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டார். போட்மாங்கே தன் சாதிக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைவை; தைரியத்துடன் செயல்பட்டதால் மீண்டும் அதனை நிலைநிறுத்தினார். மேலும் இவரது பிள்ளைகள் நன்கு படிக்கத் தொடங்கியதாலும் கஜ்பியேயின் ஆதரவு இருந்ததாலும் நிலபுல வசதியாலும் தன்னை அசைக்க முடியாதவாறு வெளிப்படுத்திக் கொண்டார். கஜ்பியேவும் அவ்வப்போது கயர்லாஞ்சிக்கு வந்து சென்றார். இவர் சுரேகாவுடன் கள்ள உறவு கொண்டிருப்பதாலேயே இங்கு வந்து போகிறார் என்ற எண்ணமும் மக்களுக்கு ஏற்பட்டது.

இவையெல்லாம் ஊர் மக்களுக்கு சாம்பல் பூத்த நெருப்பாக அடிமனதில் எரிந்து கொண்டிருந்தன. இந்த ஆத்திரத்தில் ஊர் மக்கள் செப்டம்பர் அன்று அவரை அடித்துவிட்டனர். கஜ்பியே வழக்கு தொடர்ந்தார். இதில் சுரேகாவும் அவரது மகளும் சாட்சிகளாயினர். இவ்வழக்கில் கயர்லாஞ்சி மக்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த இவர்கள் சாதி இந்துக்களின் உதவியுடன் செப்டம்பர் 29 அன்று போட்மாங்கேயைத் தாக்கினர். இந்த வகையில் பார்க்கும் போது கயர்லாஞ்சி பிரச்சினை நிலத்தகராறில் தொடங்கியது எனலாம். சாதி இந்துக்களின் சாதிவெறியே அங்கு ஏற்பட்ட தகராறுக்கும் அதனையடுத்த கொடூர செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாகும்.

அரசே முக்கிய குற்றவாளி

சமூக அடிப்படைகளைக் கொண்டு பார்க்கும் போது சாதி அட்டூழியம் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. ஒன்று: தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு. இரண்டு: அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தலித்துகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள். இந்த ஏற்றத்தாழ்வுதான் அநீதிக்கு வழிவகுப்பதாக மாறியுள்ளது. முதல் விஷயமானது சாதி அமைப்பிற்குள் காலங்காலமாக இருந்துவரும் கருத்தாகும். இதில் சாதி இந்துக்களின் உயர்வுக்கு தலித்துகள் அடிபணிகிற மனப்பான்மை இருந்துவருகிறது. இரண்டாவது விஷயத்தில் கருத்தளவிலாவது தலித்துகள் சமத்துவம் அடைவது என்பது அறிவார்ந்த நிலையாகும். இவ்விரு பிரிவினருக்கும் நடைமுறை உறவில் இருந்து வருகிற சிக்கல் அசைவியக்கம் பெற்று வருகிறது எனலாம். தலித்துகளின் பலத்தை குறைக்க அரசின் நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுகிறது. முரண்பாடுகளை காண்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு அரசே முயலுகிறது. இது சாதிய ஏற்றத்தாழ்வினை அதிகரிக்க உதவுகிறது. சாதிகளுக்கிடையில் சமத்துவம் இல்லாததால் தலித்துகளுக்கு அரசியலமைப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு அரசு பல்வேறு அநீதிகளை கண்டிக்க முடியும். மேலும் கல்வி கருத்தியல் சார்ந்த நிலையில் சாதிக் கொடுமைகளை மாற்ற முடியும். சட்டத்திற்குப் புறம்பாக நிகழும் கொடுமைகளைத் தண்டிக்கவும் முடியும்.

தலித்துகள் மீது நடத்தப்படும் எண்ணற்ற வன்கொடுமைகள் யாவும் அரசு அரசியலமைப்பின் அடிப்படையில் அவை கடமையைச் செய்ய முடியவில்லை என்பதையே காட்டுகின்றன. கல்வியிலும் பிற கருத்தியல்களாலும் சாதியை2005 ஆம் ஆண்டு மைய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய குற்றங்கள் பதிவகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தண்டனை பெற்றவரின் அளவு கூறப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையில் 94.1% வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் 29.8% குற்றமிழைத்தவராக அறிவிக்கப்பட்டனர். 2005 ஆம் ஆண்டில் மட்டும் 57,804 பேர் தலித்துகள் மீது வன்கொடுமை செய்தவர்கள் என கைது செய்யப்பட்டனர். அதில் 46,936 பேர் (82.4%) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 12,691 பேர் மீது மட்டுமே விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

அரசானது அதன் கடமையை முறையாக செய்யுமானால் சாதிக்கொடுமைகளின் அபாயம் பெருமளவு குறைந்திருக்கும். ஆனால் எதிர் பார்ப்புக்கும் மாறாக, ஆண்டுதோறும் கொடுமைகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. வெட்கப்பட வேண்டிய வகையில் இந்த வளர்ச்சி வீதம் தேசிய வளர்ச்சி வீதத்திற்கு மாறாக இருக்கிறது. வன்கொடுமைகளைக் காவல்துறையினர் பதிவு செய்வதற்கே பெரும் போராட்டம் தேவைப்படுகிறது. ஆதிக்கச் சாதியாரின் குறுக்கீடுகளால் இது பெரிதும் தடுக்கப்படுகிறது. தலித் பெண்கள் மீதான குற்றமாயின் இது மேலும் மோசமான நிலையில் சென்றுவிடுகிறது. இந்தத் தடைகளை எல்லாம் மீறியே ஒரு வழக்கானது பதிவுசெய்யப்படுகிறது. பெரும்பாலும் உள்ளூர் காவல் நிலையத்தில் தலித்துகளுக்கெதிரான வழக்குகளை தொடக்கத்திலேயே இல்லாமல் செய்துவரும் முயற்சியே நடைபெறுகிறது. அப்படி குற்றமானது பதிவு செய்யப்பட்டாலும் அது பற்றிய விசாரணையை காவல் துறையே மேற்கொள்கிறது. இக்காவல் துறையினரின் விசாரணை பல நேரங்களில் முழுமையாக நடைபெறுவதில்லை என்பதால் தண்டனை பெறுவோரின் அளவு குறைந்துவிடுகிறது. ஆகவே இப்போதுள்ள காவல்துறையின் நடைமுறை மேல்சாதிக்காரர்களுக்குச் சாதகமானதாக வடிவமைந்து நிற்பதால் தலித்துகளுக்கு இது பாதகமாகவே உள்ளது. இத்தகு காரணத்தால் ஆண்டு தோறும் தலித்துகள் மீதான கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கயர்லாஞ்சி நிகழ்ச்சியை பார்க்கும்போது காவல்துறை, ஒரு ஒப்புக்காக அவ்வழக்கினை எழுத்தில் பதிந்துகொண்டாலும் அதனைக் கூடியவரை அமுக்கிவைக்கவே விரும்பியது எனலாம். இவ்வளவு கொடூரமான நிகழ்ச்சிகள் புரிந்துகொள்ள முடியாத காவல்நிலையத்தின் சில கோப்புகளுக்குள் முடக்கப்படுவது என்பது நம்மை நிலைகுலையச் செய்கிறது. இத்தகு கொடூர நிகழ்ச்சிகளை விரிவாக வெளிப்படுத்திவிட்டோம் என எண்ணியோரின் எண்ணம் வீணாகப்போய்விடுகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு மாதம்வரையில் பொதுமக்களின் கிளர்ச்சி நடைபெற்றது. இக்காலகட்டத்திலேயே அது மறைக்கப்படுவதற்கான வேலைகளும் நடந்தன. பையலால் போட்மாங்கே கொடுத்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கயர்லாஞ்சியில் சில நபர்கள் கைது செய்யப்பட்டனர் (உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. அவர்மட்டும் நவம்பர் இரண்டாம் வாரம்வரை கத்திக் கொண்டிருந்தார்).

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றாலும் குற்றவாளிகளும் சாட்சிகளும் மறைக்கப்பட்டபின் அதனால் என்ன பலன் கிடைக்கும்? கயர்லாஞ்சியில் நடந்த விஷயங்கள் எல்லாமே ஞாபகத்திலிருந்து மறைக்கப்படுகின்றன. கயர்லாஞ்சி நிகழ்ச்சி இவ்வளவு தூரம் பிரபலமடைந்தாலும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது யாருக்கும் தெரியாது. மும்மையின் நடுப்பகுதியில் உள்ள ரமாபாய் நகரில் தலித்துகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் தலித்துகளை மனம்நோகச் செய்தது போலவே வெகுதொலைவில் நடந்த கயர்லாஞ்சி நிகழ்ச்சியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?

கயர்லாஞ்சியில் காவல்துறை மேற்கொண்ட நயவஞ்சகச் சூழ்ச்சிகள் மூலம் அவ்வழக்கு மூடிமறைக்கப்பட்டது. மற்ற இடங்களில் நடக்கும் சாதிக்கொடுமைகளை அணுகும் முறைக்கு இது ஓர் உதாரணம் எனலாம். அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான ஊர்களைப் போலவே கயர்லாஞ்சியும் ஓர் ஊராகும். 800 பேர் கொண்ட இக்கிராமத்தில் மூன்று குடும்பத்தார், புது பவுத்தர்கள் (தலித்துகள்), ஏழு குடும்பத்தார் கோண்டுகள்(பழங்குடிகள்), இக்கோண்டுகள் விதர்பா பகுதியில் தங்களைச் சாதி இந்துக்களோடு இணைத்து அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த பத்து குடும்பத்தார் தவிர ஏனையோர் குனாபி, கலர், தெளி, லோதி, திவார், வாதை ஆகிய மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் தலித்துகளைப் பொருத்தவரையில் உயர்சாதிக்காரர் களாகவே செயல்படுகின்றனர். இச்சூழ்நிலையில் கயர்லாஞ்சியில் தலித்துகள் சாதி இந்துக்களுடன் எப்போதும் தகராறு செய்வதற்கான வாய்ப்பே இல்லை எனலாம். கயர்லாஞ்சியில் ஏற்பட்ட நிலத்தகராறின் போது நிலத்தில் நடப்பதற்கு வழிவிட மறுத்த பையலால் போட்மாங்கே அடிக்கப்பட்டார்.

அச்சம்பவம் காவல் நிலையத்தில் பதியப்பட்டது. 2002ல் ஷிவ்சங்கர் அடில்கார் தன் பக்கத்து நிலத்துக்காரர் சுரேகா என்பவரின் நிலத்தில் நியாயமற்ற முறையில் அத்துமீறியதாலும் சாதிப்பெயர் கூறி திட்டியதாலும் சுரேகா காவல் நிலையத்தில் வழக்குத் தொடுத்தார். இன்னொரு வழக்கில் 2004ல் அமைதி திரும்புவதற்காக நிலம் அளக்கப்பட்டு சித்தார்த் கஜ்பியி என்பவரிடம் மத்யஸ்தம் மூலம் 15அடி வழியை போட்மாங்கே விட்டுக்கொடுத்தார். இருப்பினும் சாதிக்கொடுமை தீரவில்லை. சுரேகாவின் மகள் பிரியங்கா பள்ளிக்கு மிதிவண்டியில் செல்லும்போது வயதானவர்களும் இளைஞர்களும் கிண்டலும் கேலியும் பேசினர். சித்தார்த் கஜ்பீயிடம் இதுபற்றி புகார் சொன்னபோது அவர் வெகுண் டெழுந்தார். அதே நேரத்தில் போட்மாங்கே காவல் நிலையத்திற்குச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். சுரேகா சாதிப் பெண்களால் தாக்கப்பட்ட சம்பவம்கூட காவல் நிலையத்தில் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிற அட்டூழியங்கள் பற்றியும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டன. எனினும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

கஜ்பீயின் உதவியுடன் போட்மாங்கே பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டுவந்தார். இவருக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென கயர்லாஞ்சி கிராமத்தார் தீர்மானித்தனர். செப்டம்பர் 3ஆம் தேதி வேலையாட்களுக்குக் கூலி கொடுக்கும் தகராறு வந்தபோது அவரைப்பிடித்து நன்றாக அடித்து விட்டனர். சுயநினைவு இழக்கும் வரை இது சென்றுவிட்டது. மறுநாள் 4ம் தேதி அவருடைய சகோதரர் ராஜேந்திரா புகார் செய்ய அந்தல்கோவன் காவல் நியைலத்திற்குச் சென்றார். ஆனால் அங்கிருந்து கடுங்கோபத்துடன் திரும்பினார். இதற்கிடையில் சித்தார்த் கஜ்பீயி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவரிடமிருந்து பெற்ற புகாரைப் பதிவுசெய்துகொண்டு அதனை அதிகார எல்லைக் குட்பட்ட அந்தல்கோவன் காவல் நிலையத்திற்கு மாற்றிவிட்டனர். இக்காவல் நிலையத்தார் புகாரில் கூறப்பட்டிருந்த சுரேகா, பிரியங்காவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு வந்தபோது கயர்லாஞ்சியைச் சேர்ந்த கர்சஞ்ச், உப்கர்பஞ்ச் இருவரும் சுரேகா, பிரியங்காவை காவலர்கள் முன்னிலையிலேயே கொன்றுவிடுவதாக மிரட்டினர்.

இதுபோலவே செப்டம்பர் 21ந் தேதி காந்திரி கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரையும் மிரட்டினர். மறுநாள் வேறொரு பிரச்சனையில் தகராறு ஏற்பட்டபோது அது பற்றிய புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் கஜ்பீயி அடிக்கப்பட்ட விவகாரத்தில் 12பேர் கைது செய்யப்பட்டு பின்னர் செப்டம்பர் 29இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் சுரேகா தன் பழைய எதிரிகளையும் 12பேர் பட்டியலில் இணைத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த 12 பேரும் காவல் நிலையத்திலிருந்து திரும்பியபின் சாதி இந்துக்கள் ஒரு கூட்டம் போட்டனர். சித்தார்த் கஜ்பீயியுக்கும் போட்மாங்கே குடும்பத்திற்கும் பாடம் புகட்ட வேண்டும் என விரும்பினர். இதனைக் சுரேகா அறிந்தவுடன் சித்தார்த் கஜ்பீயியுக்கும் வார்ட்டி கிராமத்திலிருக்கும் உறவினர் ராஷ்ட்ரபால் நார்னவாரேக்கும் கைபேசி வழி தகவல் கொடுத்துவிட்டார்.

மேற்கூறிய ஒவ்வொரு புகாரும் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உரியதுதான். ஆனால் ஒன்றுகூட பதியப்படவில்லை. கயர் லாஞ்சியில் சித்தார்த் கஜ்பியே விவகாரமும்கூட உரிய முறையில் அணுகப்பட்டிருக்குமானால் கயர்லாஞ்சி நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். காவல் துறையினரின் அணுகுமுறை சாதி இந்துக்களுக்கு தைரியத்தைக் கொடுக்கக் கூடியதாகவே இருந்தது.

கயர்லாஞ்சியில் ஒரு பெருங்கூட்டம் தாக்க வந்தபோது சுரேகா தன் செல்போன் மூலம் ராஜேந்திர கஜ்பியேயைக் கூப்பிட்டு காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். ராஜேந்திரா காவல்துறையை உதவிக்கு அழைக்க அவர்கள் வரவில்லை. புரியாத புதிராக செல்போனில் இருந்த சிம் கார்டு காணாமல் போய்விட்டது. இந்தத் தாக்குதலை நேரில் கண்ட பையாலால் தன்னைக் காத்துக்கொள்ள ஓடி ஒளிந்துகொண்டார். சித்தார்த் காவலர்களின் உதவியை நாடினார். பூட்மாங்கேவினர் மீதான கொடூரத் தாக்குதல் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. அப்போது 8 கி.மீ. தூரத்திலிருந்த காவலர்கள் நினைத்திருந்தால் 20 நிமிடங்களில் அவ்விடத்திற்கு வந்து சேர்த்திருக்க முடியும். ஆனால் அவர்கள் மௌனம் காத்துவிட்டனர்.

பையலாலும் கஜ்பியேயும் அண்டல்கோவன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நடந்ததை முறையிட்டனர். ஆனால் அவர்கள் புகாரை பதிவு செய்யவில்லை. கயர்லாஞ்சியில் எல்லாம் நடந்து முடிந்தவுடன் ஒரு காவலரை மட்டும் அனுப்பி வைத்தனர். வந்த காவலர் கிராமத் தலைவரிடம் விசாரித்துவிட்டு அங்கு இயல்புநிலை ஏற்பட்டுவிட்டது எனக் கூறிவிட்டார். மறுநாள் பையலால், கஜ்பியே உறவினர் இருவருடன் காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை கொடுத்தனர். செப்டம்பர் 30 ஆம் நாள் காலையில் ராஷ்ட்ரபால் அடையாளம் காட்ட பிரியங்காவின் சடலம் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அதனை =அடையாளம் தெரியாத யாரும் கேட்பாரற்ற+ சடலம் எனப் பதிவு செய்து கொண்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் மேலும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றையும் மேற்கூறியவாறே முடித்துவிட்டனர். சான்றுகளை மிகச்சிறப்பாக அழித்துவிட்டனர்.

காவல்துறையினர் இவ்வழக்குக்கான விவரங் களைப் பத்திரிக்கைகளுக்குக் கொடுக்கும்போது செய்தியை மாற்றிவிட்டனர். முறையற்ற பாலுறவால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயின. நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி பாபாசாகேப் பவுத்தத்தை தழுவிய 50ஆம் ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்ட தீக்ஷா பூமியில் கூடிய கூட்டத்தில் மேற்கூறிய நிகழ்ச்சி பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் பிறகு அக்டோபர் 14ஆம் தேதி விழாவிற்குப் பெருங்கூட்டமாகக் கூடியபோதுகூட இதுபற்றி கவனம் செலுத்தவில்லை. இக்கொடூர நிகழ்ச்சியை உரிய முறையில் கையாண்டிருந்தால் சிலரையாவது கைது செய்திருக்க முடியும். புலன் விசாரணை மேற்கொள்ளப் பட்டிருக்கக்கூடும். பெரும்பாலான கொடூரங்களில் இத்தகைய நிலையே தொடர்கிறது. இந்நிகழ்ர்ர்ச்சி பலர் அறியும்படி செய்தபின்னரும் குற்றவாளிகளைத் தண்டிப்பது என்பது உத்திரவாதம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இவ்வாறே கோகனாவிலும் ஜஜ்ஜாரிலும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

காவல்துறையின் ஒட்டுமொத்தச் செயல்பாடு களுக்கும் அப்பால் இந்த நிகழ்ச்சியை கூட்டிக்குறைத்து சொல்லப்பட்டதன் மூலம் இதனை மறைப்பதில் டாக்டர்களும் தம் பங்கைச் செய்தனர். அரசு வழக்குறைஞருங்கூட அட்டுழியங்களைத் தடுக்கும் சட்டத்தின் வழி செயல்படுவதை ஆதரிக்க வில்லை. சுருக்கமாகச் கூற வேண்டுமானால் அரசுத் தரப்பைச் சேர்ந்த எல்லா பிரிவினரும் கயர்லாஞ்சி நிகழ்ச்சியை மூடி மறைப்பதில் பங்காற்றினர் எனலாம்.

அரசைத் தீங்கிழைக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல்

கயர்லாஞ்சி நிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை இன்னும் மோசமானது எனலாம். கயர்லாஞ்சியில் வெறிக் கொலைத் தாக்குதல் பிற இடங்களுக்கு தெரியத் தொடங்கியவுடன் அது தலித் மக்களில் சில பிரிவினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. இது பற்றிய முதல் எதிர்ப்பை ராஷ்ட்ரிய சம்புத்தா மகிலா சங்தனா என்னும் பெண் அமைப்பே காட்டியது. நம்பர் 1ஆம் தேதியன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு பேரணியை பந்தரா நடத்தினார். பிற நகரங்களில் இத்தகைய பேரணிகளை நடத்துவதற்கு இது முன்மாதிரியாக இருந்தது. இதனால் விதர்பா முழுவதும் கயர்லாஞ்சிக்கெதிரான எதிர்ப்பலைகள் பரவின. பெண்களின் எதிர்ப்புகள் குறிப்பிடும்படி இருந்தன. மேலும் இளைஞர்களின் பங்கேற்பும் கணிசமாக இருந்தது. இந்த எதிர்ப்புகள் பெரிய அரசியல் கட்சி சார்பானதாக இல்லை என்பதால் இது உணர்வுபூர்வமாகவும் உண்மையானதாகவும் இருந்தது.

பங்கு கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள், வேலையில் இருப்பவர்கள். இவர்கள் அனைவருமே கயர்லாஞ்சி அக்கிராமத்திற்கெதிரான காவல்துறையின் மௌனத் திற்கெதிரான அறம்சார்ந்த உறுத்துதலை வெளிப்படுத்த விரும்பியவர்கள். இவர்களின் எதிர்ப்பினை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்றது. பல இடங்களில் காவல்துறை யினரின் அடக்குமுறைக்கு இவர்கள் ஆளானார்கள். அமராவதியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். நாக்பூர், காம்படி, அமராவதி, அகோலா, யவத்மால் போன்ற இடங்களில் காவல்துறையினர் நடத்திய அட்டூழியங் களை விசாரித்த அனைத்திந்திய உண்மையறியும் குழு காவல்துறையின் அணுகுமுறை நம்பிக்கைக்குரியதாக இல்லை என்றும், தலித்துகளுக்கு எதிரானதாக இருந்தது என்றும் கூறியது.

இதுவரை நடத்திய தொடர் பேரணிகளில் முதலில் நடந்தது நாக்பூரில் ஆகும். இப்பேரணியில் மக்களின் கோபத்தை உணர முடிந்தது. சாலைகளில் போக்குவரத்தை தடுத்தும் அரசுக்கெதிரான கோஷமிட்டும் எதிர்ப்பைக் காட்டினர். கயர் லாஞ்சியில் நடந்தவற்றை நோக்கும்போது இதுஒன்றும் இயல்பு மீறிய ஒன்றல்ல. ஆனால் மகாராட்டிரா மாநில உள்துறை அமைச்சர் பேரணி நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் நக்சலைட்டுகள் உள்ளதாகப் பேட்டி கொடுத்தார். இப்பேட்டி தலித்துகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தவே அக்கருத்தைக் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் நாக்பூரில் காவல்துறையினர் தலித்துகள் மேல் அடக்கு முறையைக் கட்டவிழ்த்தனர். பல இடங்களில் ‘லத்தி சார்ஜ்’ செய்தனர் பலர் கைது செய்யப்பட்டனர். சாதி குறிப்பிட்டு இழிவுப்படுத்தினர். பழங்காலத்தில் பேசியதைப் போல =பைத்தியக்கார நாய்கள்+ என்றெல்லாம் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர். இந்நிகழ்ச்சிகள் முழுவதிலும் சாதிய ஒடுக்குமுறை உள்ளோட்டமாக இருந்துகொண்டே இருந்தது.

நவம்பர் 14ஆம் தேதி அமராவதியில் கயர்லாஞ்சி நிஷ்த க்ருதி சமிதி ஏற்பாடு செய்த மிகப் பிரமாண்ட பேரணிக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டனர். ஆனால் இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் ஆர். எஸ். கவாய் நடத்திய பேரணிக்கு வெறும் இரண்டாயிரம் பேரே கலந்து கொண்டனர். பேரணியின் இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக்கொடுத்தனர். அத்தோடு பேரணி முடிவு பெற்றது என அறிவித்துவிட்டனர். மக்கள் திரும்பும் வழியில் காவல்துறையினர் ‘லத்தி சார்ஜ்’ செய்தனர். குழந்தைகள், பெண்கள் எவரையும் விட்டுவைக்கவில்லை. ஒரு பெண் உயிருக்குப் போராடும் வகையில் அடிபட்டார். மக்கள் கல்வீசியதால் =லத்தி சார்ஜ்+ செய்யப்பட்டனர் எனக் காவல்துறை கூறத் தொடங்கியது. காவல்துறையினரின் முரட்டுத்தனத்தால் கோபமுற்றவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில மோட்டார் சைக்கிள்களுக்கும் தண்ணீர் லாரிக்கும் தீ வைத்தனர். இதனால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசத் தொடங்கினர். பின்னர் துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொண்டனர். இதனால் தினேஷ் வங்கடே என்னும் இளைஞர் மண்டையில் காயம்பட்டு பின்னர் இறந்து போனார். மேலும் மூன்று இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட இளைஞர்கள் மீது தடியடி நடந்ததை கேமராவின் பதிவுகளிலிருந்து காணமுடிகிறது. ஆனால் போலீஸ் கமிஷனர் துப்பாக்கிச் சூட்டினை நியாயப்படுத்தினார். சிவசேனாவினர் தயாராக இருந்ததால் அங்குச் சமூகக் கலவரமாக மாறும் என்பதாலேயே துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு இடப்பட்டது என்றார்.

இதோடு காவல்துறையினரின் வேலைகள் முடிந்துவிடவில்லை. அங்கிருந்த மக்களைச் சுற்றி வளைத்து அவர்கள் மீது சூறையாடுதல், கலவரம் தூண்டுதல் போன்ற பல குற்றச்சாட்டுகளைக் கூறி வழக்குப் பதிவு செய்தனர். இத்தகு குற்றச்சாட்டுகள் ஊரகப் பகுதிகளில் நடக்கும்போது ஜாமீனில் வெளியே வருவது கடினமாகும். இந்நிகழ்ச்சியில் அங்கு நவோதயா வித்யாலயாவில் கணக்கு ஆசிரியராக இருந்தவரைக் கைது செய்தனர். காரணம் இவர் வீட்டில் கயர்லாஞ்சி பற்றி சுவரொட்டிகள் அறிக்கைகள் வைத்திருந்தாராம். இவர் எய்ட்ஸ்க்கு எதிரான சேவையில் ஈடுபட்டு பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்றவர். இவரது வீட்டில் கிடைத்த அறிக்கையானது நாக்பூரை சேர்ந்த சமதா சைனிக் தால் என்பவரின் உண்மையறியும் குழுவின் அச்சாக்கம் பெற்ற அறிக்கையாகும். சுவெரொட்டிகள் யாவும் இணைய தளத்தில் கிடைப்பவைதாம். பல நகரங்களில் ஒட்டப்பட்டவைதாம். அறிவுஜீவிகள் இத்தகு நிகழ்வுக்குக் கொடுக்கும் மனரீதியான ஆதரவை ஒடுக்கவே இத்தகு ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூரிலிருந்து வெளியாகும் மட்டாடர் பத்திரிக்கையின் ஆசிரியர் திலிப் எடட்கர் சொல்வது போல கைது செய்யப் பட்டவர்களைப் பற்றியோ, கொடூரம் இழைப்பவர்கள் பற்றியோ எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பதற்காகவே இத்தகு அடக்குமுறையை காவல்துறை மேற்கொள்கிறது.

யவட்மால் என்னும் ஊரில் தலித் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஒரு முக்கியமான இயக்க வாதியாகிய பிரமோதினி ராம்தெக்கே நடத்திய ஒரு சிறிய பேரணியும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. பேரணியின் போது ஏற்பட்ட கல்லெறி சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் முகமாக குறுகிய காலத்தில் அரசியல்வாதியாக மாறிய வணிகர் சுபாஷ்ராய் தன் கூலிப்படையின் மூலம் செயல்பட்டார். அங்குள்ள பட்டிபுரா தலித் காலனியில் அம்பேத்கர் சிலைமீது கற்களையும் செருப்புகளையும் வீசத் தூண்டியுள்ளார். காவல்துறை கண்டும் காணாமல் இருந்துவிட்டது. அன்று இரவு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கதவுகளை உடைத்து தலித் இளைஞர்களை அவர்களுடைய பெற்றோர் முன்னிலையில் அடித்து இழுத்துக் கொண்டு போய் போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் பட்டிபுராவையே சூரையாடினர். கைது செய்யப்பட்ட பலரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்தனர். சாதி இழிவுச் சொற்களால் திட்டும் காவல் துறையினரின் போக்கை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரமோதினி ராம்தெக்கேவும் கூட கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் அடிக்கப்பட்டும் பாலியல் துன்புறுத் தலுக்கும் ஆளானார். காவல் நியைத்தில் நடந்த கொடுமைகளை அவர் எடுத்து சொல்லும்போது ஆற்றொணாத் துயரத்துடன் உண்மையில் அழுதுவிட்டார். அமராவதியில் நடந்த நிகழ்ச்சியில் சர்காட்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலவே இவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தலித் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக பிற மக்களை வீதிகளில் வந்து கலாட்டா செய்யத் தூண்டும் நிகழ்வுகள் நடந்தேறின. லக்காண்டூரில் ஒரு தலித் பையன் அங்கிதா லஞ்சேலர் என்னும் பெண்ணைக் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற விஷயத்தில் பஜ்ரங்தல், சிவசேனை, பிஜேபி, போன்றவை வீதிக்கு வந்துவிட்டன. காவல்துறை சமூகக் கலவரம் ஏற்படக்கூடாது என்னும் கோஷத்தை முன்வைத்து தன் அடக்குமுறையை அரங்கேற்றியது. அமராவதியில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் நடந்த அடக்குமுறையும் இந்த வகையில்தான் நடந்தது. ஷோலாப்பூரில் நடந்த பிரச்சனையில் பஜ்ரங்தல், சிவசேனை இரண்டும் தலித்துகளுடன் மோதின. ஆனால் காவல்துறையினர் ஓரவஞ் சனையுடன் தலித்துகளை மட்டுமே வஞ்சித்தனர். பெண்கள், சிறுவர்கள் என்றுகூட பார்க்காமல் அடித்து நொறுக்கினர். அம்பேத்கர், புத்தர் படங்களை நொறுக்கினர். சாதி இழிவுச் சொற்களால் வசை பாடினர். எதிரணியினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தலித்துகள் நடத்திய பேராட்டங்களை சாதகமாக்கிக்கொண்ட காவல்துறையானது சைத்திய பூமியில் 50வது நினைவேந்தலில் தலித்துகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதைத் தடுத்துவிட்டது. சைத்திய பூமியில் ஒவ்வோராண்டும் டிசம்பர் 6ஆம் தேதி கூடும் பல லட்சம் மக்கள் அந்நாளை புனித நாளாகக் கருதுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இந்நிகழ்ச்சியின் போது எவ்வித அசாம்பாவிதமும் நடைபெற்றவில்லை. காவல்துறை கூட இங்கு வருவதில்லை. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சமதா சைனிக் தல் கவனித்துக் கொள்ளும். ஆனால் அரசுத் துறையானது ஊடகங்கள் வழி வேண்டுமென்றே ஏற்படுத்திய பய உணர்வால் பல லட்சம் மக்கள் இங்கு வருவதைத் தவிர்த்தனர். லட்சக்கணக்கான தலித்துகள் ஒரு சேர அணிதிரளுவதையும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள தலித் ஒருமைப்பாடு திட்டமிட்டு சைத்திய பூமி, சிவாஜி மைதானம் முழுவதும் காவல்துறையினர் நிரம்பி வழிந்தனர். இதனால் தீக்ஷா பூமி, சைத்திய பூமி விழாக்கள் பழைய முறையில் நடப்பது என்பது கேள்வியாகிவிட்டது. அரசு தன் அசுர பலத்தால் தலித்துகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றது.

காவல் துறையினர் மாநிலம் முழுவதும் 2000க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தது. இதனால் தலித் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். கைதாகுதல் என்பது வாழ்வில் ஒரு பெரும் நெருக்கடியை உண்டாக்குகிறது. கைதைத் தொடர்ந்து நடக்கும் காவல்துறையின் அடிதடி உள்ளிட்ட மன ரீதியான கொடுமைகளிலிருந்து மீள்வதற்கு 3-6 ஆண்டுகள் ஆகும். ஜாமினில் வெளியே வருவதற்கு வழக்குரைஞருக்குப் பணம் கட்டியாக வேண்டும். ஜாமின் தொகை கட்டி வெளியே கொண்டு வருவதற்கு நிலபுலம் உள்ளவரை நாட வேண்டி யுள்ளது. தலித்துகளைப் பொறுத்தவரை இது ஒரு வகையில் திவாலாகும் செயலாகும். பொதுவாக சாதிக் கொடுமைகளால் உடல் ரீதியாக பாதுகாப்பு ஏற்படும். ஆனால் இவ்வாறான கொடுமைகள் அநீதிக்கு எதிராக போராடும் உத்வேகத்தையே அழித்துவிடுவதாக உள்ளது. அரசின் பிரிதிநிதியாக இருக்கும் காவல்துறையானது சாதாரண தலித்துகளுக்கு சாதகமாக இல்லாமல் மற்ற சாதிக் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது என்றே கூற வேண்டியுள்ளது.

சிலைகளும் மக்களும்: நேர்மையுணர்வுப் பற்றிய கேள்வி

கயர்லாஞ்சி நிகழ்வுகளின் தீப்புண் மனதிலிருந்து ஆறுவதற்கு முன்பாக, கான்பூரில் சிலை இழிவுப் படுத்தப்பட்ட செய்தி பரவி மகாராஷ்டிரா முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரே நேரத்தில் தீவிரமாயின. நாசிக்கில் ரங்கநாத் தாலே கொல்லப் பட்டார். உஸ்மனாபாத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ரவி ஷிங்கடே, தீபக் மானே ஆகிய இருவரும் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். நண்டேட் என்னுமிடத்திலும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார். உல்லாஸ் நகரில் டெக்கான் அரசி விரைவு ரயிலும் ஒரு உள்ளூர் ரயிலும் தீ வைக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளில் எப்போதும் போல் காவல் துறையின் அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பற்றி உண்மையறியும் குழு கண்டறிந்த முடிவின்படி, கிளர்ச்சியாளர்கள் ரயிலின் முன்பக்கம் மறியல் செய்தனர். உள்ளூர் மக்களில் ஒரு அரசியல்வாதி வளர்த்துவரும் கும்பல்தான் வண்டியின் பின்புறம் தீயிட்டனர். இத்தகைய உண்மைகளை விடுத்து, தலித்துக்களைக் கைது செய்தனர். இவர்கள் ரயிலுக்குத் தீ வைத்ததாகவும் காவல் நிலையத்தைத் தாக்கியதாகவும், இன்னும் சில குற்றங்கள் செய்ததாகவும் இவர்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டன.

சிலை இழிவுபடுத்தப்பட்டபோது ஏற்பட்ட தன்னிச்சையான எதிர்ப்புகள் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. ஏனெனில் இழிவுபடுத்தப் பட்ட சிலை ஒரு மாநிலத்தில் இருக்க, தூரத்து மாநிலமாகிய மகாராஷ்டிரத்தில் இந்த எதிர்ப்புகள் கிளம்பின. இவ்வாறே கயர்லாஞ்சி நிகழ்ச்சியிலும் எதிர்ப்பு நடைபெற்றதால் மகாராட்டிய தலித்துகளும் அம்பேத்கர் விசுவாசிகளும் தலித் உணர்வு கொண்டவர்களாக உள்ளதைக் காட்டுகின்றன. கயர்லாஞ்சியில் இறந்த நான்கு பேரும் சாதிவெறியால் கொல்லப்பட்டவர்கள். இச்செய்தி பரவி ஒரு மாதத்திற்குப் பின்புதான் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் சிலை இழிவுபடுத்தப் பட்டவுடனேயே செய்தி பரவி போராட்டம் வெடித்தது. ஆனால் ஹரியானாவில் 70 தலித் வீடுகள் எரிக்கப்பட்ட போதும், ஜஜ்ஹாரில் கொடுமையான முறையில் தலித்துகள் கொல்லப்பட்ட போதும் (இன்னும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன) அதன் தாக்கம் மகாராஷ்டிராவில் போராட்டமாக வெளிப்பட வில்லை. மேலும் மரத்வாடாவில் பீட் மாவட்டத்தில் நவம்பரில் ஒரு தலித் கூலித் தொழிலாளி மிகவும் கொடூரமாகத் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொல்லப்பட்டான். அடுத்து, அக்டோபரில் மாதாங் சாதியைச் சேர்ந்த உமர்கா நாரங்வாடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனும் கொல்லப்பட்டான். இவையெல்லாம் தலித்துகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அம்பேத்கர் சிலை மானபங்கப்படுத்தபட்டபோது குறிப்பாக ரமாபாய் நகரில் நடந்த போராட்டத்தில் 10 உயிர்கள் துப்பாக்கிச் சூட்டில் மாய்க்கப்பட்டன. தலித் கவிஞர் விலாஸ் கோக்ரே என்பவரின் தற்கொலையுங்கூட இதனால் நிகழ்ந்ததேயாகும்.

மேற்கூறிய நிகழ்வுகளைப் பார்க்கும்போது தலித்துகள் உடல்ரீதியான கொடுமைகளை முக்கியமாகக் கருதுவதில்லை. தங்கள் சமூக அடையாளத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஏற்படும் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அண்ணல் அம்பேத்கர் சிலை அவர்களின் போராட்டத்திற்கான உந்து சக்தி. இதுவே பல தலைமுறைகள் கடந்தும் இம்மக்களை வழிநடத்தப் போகிறது. பண்டைய நாளில் இருந்த விதோபா அல்லது மகசோபா போன்றவை இவர்களை அடிமைக் கூண்டுக்குள் கொண்டுவரக்கூடும். தலித்துகளின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது இது ஏற்பட்டாலும் வியப்பில்லை. இதனை ஆளும் வர்க்கம் நன்குணர்ந்துள்ளனர். இதனை வளர்த்தெடுக்கவே இவர்கள் விரும்புகிறார்கள. அம்பேத்கர் சிலைகள் பெருகப் பெருக அம்பேத்கரின் கொள்கைகள் முற்றிலும் ஒழிந்து போகக்கூடும். அம்பேத்கர் சிலைக்குரிய கண்ணியமும் கவுரவமும் பேணப்பட வேண்டிய நிலையில் இன்று வாழும் தலித்துகளின் நிலைமை மோசமாக இருந்து வருகிறது. கயர்லாஞ்சி நிகழ்வுகள் இவை பற்றி யோசிப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. இன்றைய இயங்கியல் தத்துவம் சார்ந்த இயக்கங்களைப் பார்க்கும்போது தலித்துகளின் இயக்கங்கள் வரலாற்று ரீதியாக அந்நியப்பட்டே வந்துள்ளன. ஆகவே தலித்துகளின் ஒட்டுமொத்த நலனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நமது நோக்கினை மறுபரிசீலனை செய்ய இது ஒரு நல்ல தருணமாகும்.

பொருத்தமற்ற தலித் அரசியல்வாதிகள்

தலித்துகள் தங்கள் அடையாள ஓர்மையை ஒரு வர்க்கமாக முன்னிறுத்த முடியுமென்றால் அது ஒரு அரசியல் அணியாக உருவாகலாம். ஆனால் அது தலித்துகளுக்கு எந்த ஒன்றையும் வழங்கும் நிலையில் இல்லை. வெற்று சின்னங்களையும் பயனற்ற கூக்குரல்களையுமே வெளிப்படுத்துகின்றனர். தலித் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை ஒருங்கிணைந்து நோக்கவோ அவற்றை எதிர் கொள்ளவோ உள்ளார்ந்த முயற்சிகள் இல்லை. ஆளும் வர்ர்க்க அரசியல் கட்சிகள் தலித் அரசியலில் தொடர்ந்து வெற்றிடத்தை முன்னிருத்தி வந்துள்ளன. தலித்துகளின் தலைவிதி 1932 பூனா ஒப்பந்தத்தில் சீல் வைக்கப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தத்தால் தலித்துகள் அவர்களின் சமூக அடையாளத்தை முன்னிருத்தி தனிப் பிரதிநிதித்துவம் பெறுவதிலிருந்து முடங்கிப் போயினர். தலித் இயக்கத்தின் வழி ஒரு தர்க்க ரீதியான வர்க்கக் கட்டமைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தியிருக்க முடியு மென்றாலும் அத்தகைய முயற்சியை வர்க்க அரசியலை தனதாக்கிக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யவில்லை. தலித்துகள் அந்நியப்பட்டே நின்றனர். இருப்பினும், வர்க்க அரசியலென்பது அடையாள அரசியல்போல் அவ்வளவு எளிதானதன்று. ஆகவே தலித் அரசியல் என்பது தவிர்க்க முடியாதவாறு ஆளும் வர்க்கத்தினரின் கட்சிகளுக்கு பாலம் அமைப்பது போன்ற சின்னங்களையும் அடையாளங்களையும் கொண்டதாகவே கருதப்பட்டது.

ஆதலால் கயர்லாஞ்சியானது தலித் அரசியலும் அரசியல்வாதிகளும் திவாலாகிவிட்டதையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தலித் அரசியல்வாதிகள் கயர்லாஞ்சியில் மட்டும் காணாமல் போகவில்லை. இதற்கு முன்னர் நிகழ்ந்த கொடுமைகளின் போதும் இதே கதிதான். தலித் அரசியல் என்பது தலித்துகளின் நலன்களைப் பேணிக்காப்பது என்பதாக உள்ளது. இந்த நலனும்கூட சாதிக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுவதாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் தலித் அரசியல்வாதிகள் தங்களின் ஆளும் வர்க்க அரசியல் புரவலர்களோடு கைகோர்த்து நிற்க முடியாத நிலையால் ஆகும். ஒரு தலித் அரசியல்வாதி அச்செய்தி நாளிதழில் வெளிவராமல் தடுத்துள்ளார். இதனால் தர்மசக்கர பிரவர்த்தன் தின் 50வது ஆண்டுக் கொண்டாட்டம் மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. சில அரசியல்வாதிகள் நீர்க்குமிழி போன்று நிலையற்ற சாதி சார்ந்த பகுஜன் கொள்கையை முன்வைக்கின்றனர். குன்பிகளும் காலர்களும் தலித்துகளின்பால் காட்டும் பரிவைக் கொண்டு எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்றும் தெரியாமல் உள்ளனர். பிராமணிய எதிர்ப்பு முறையிலேயே வளர்ந்துவிட்ட இவர்களுக்கு என்றுமே பிற்படுத்தப்பட்டவர்களால் தாக்குதல் ஏற்படுகிறது என்பதை அறியாமல் உள்ளனர்.

ஆனால் விடுதலைக்குப் பின்னர் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் பிராமணியத்தை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள்.
இதனால் கயர்லாஞ்சி நிகழ்ச்சியை எதிர்த்தவர்கள் எல்லோருமே மிகவும் வெறுப்புணர்வுடன் அரசியல் வர்க்கத்தினரிடமிருந்து ஒதுங்கியே இருந்தனர். மேலும் எதிர்ப்புப் பேரணி நடத்திய அமைப்பாளர்கள் ஒலி பெருக்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை செய்தனர். அத்தகு கருவிகளைப் பயன்படுத்தினால் அமைப்பாளர்களும்கூட அரசியல்வாதிகள் போல் ஆகிவிடுவார்கள் என அஞ்சினர். மேலும் தலித்துகளுக்குக் கொடுஞ்செயல் புரிந்தவர்கள் ஒருபக்கமிருக்க, அரசும் தலித் அரசியல்வாதிகளும் செயல்படுகின்ற முறை மறுபுறம் ஆத்திரமூட்டுவதாக உள்ளதை உணர்ந்தனர். இவ்வளவு கொடுமைகள் நடப்பதற்கு இவர்களே காரணம் என்பதையும் உணருகின்றனர். தலித் வெகுசனம் வெகுண்டெழுந்து கிளர்ச்சியில் ஈடுபடும்போது இந்த தலித் அரசியல்வாதிகள் திடுமென உள்ளே நுழைந்து பெயர் வாங்க முயன்றனர்.

இத்தகையோர் முழுமையாக விலக்கப்பட்டனர். ஆர்.எஸர். கவாய் அரசு நிர்வாகத்தின் ஆதரவுடன் நவம்பர் 14ல் நடத்திய பேரணியில் இது வெட்ட வெளிச்சமானது. அம்பேத்கர் சிலை இழிவுப் படுத்தப்பட்டபோது ஏற்பட்ட எதிர்பலைகளிலும் இது தலைதூக்கியது. தலித் அரசியல் என்பது மிச்சசொச்ச பயன்பாட்டிற்கே உதவுகிறது எனலாம். கைது செய்யப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் ஆதரவு தருவதற்கும் இது பயன்படுகிறது. அதுகூட சில வேளைகளில் தென்படுவதில்லை எனலாம். எந்தவித ஆதரவும் இல்லாதவர்கள் காவல்துறையின் கொடுமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாய் உள்ளனர். அரசியல்வாதிகளின் உதவிகளை நாடுவதில்லை. கயர்லாஞ்சி நிகழ்ச்சியானது வெகுசனத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே யான தூரத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக்கிவிட்டது.

தொன்மங்களும் தொன்மவியலும்

கயர்லாஞ்சி நிகழ்வுகள் சாதியின் எதார்த்தத்தைத் தொடாந்து மூடிவைப்பதுடன், அதற்குரிய புற மெய்மைசார்ந்த தீர்வினை மழுங்கச் செய்கிறது. இது தொடர்பான பல தொன்மங்களும் இந்நிகழ்வு வழி உண்டாயின. சில வெளிப்படையான தொன்மங்களை நோக்குவோம். பொருளாதார வளர்ச்சியினால் சாதிகள் மறைந்துவிடும் என்பதாகும். மகாராஷ்ரா வளர்ச்சிபெற்று வரும் ஒரு மாநிலமாகும். இங்கு முன்னேற்றப் பாதையில் இருக்கிற தலித் அல்லாதவர்கள் சாதி முறையை விரும்பாதவர்கள். அடுத்து, அரசு அதிகார அமைப்பில் இருக்கிற தலித்துகள் தலித்தியத்தை கால் ஊன்றச் செய்வர் என்றும், தலித்துகளுக்கு உதவுகிறார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது. மேலும் காலம் சென்ற கன்ஷிராம் அவரது ஆதரவாளர்கள் வளர்த்து வந்துள்ள பகுஜன வாதம் பல்வேறு வடிவங்களில் செயல்படுகிறது என்ற கருத்தும் உள்ளது.

பொருளாதார வளர்ச்சியோடும் நுண்ணியல் நிலையில் சாதி அட்டூழியங்கள் நடப்பதற்கும் தொடர்புபடுத்துவது வஞ்சப்புகழ்ச்சி சார்ந்ததாகும். இன்னுங்கூட பல அறிவுஜீவிகள் பொருளாதார வளர்ச்சி ஏற்படுமாயின் சாதிகள் அழிந்துவிடும் என்னும் கருத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் பொருளாதார வளர்ச்சியோடு ஏற்படக்கூடிய கல்வி, பண்பாட்டு வளர்ச்சியினால் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சாதிமுறை தானாக ஒழிந்துவிடும் என்று கருது கின்றனர். இவ்வகையான எல்லா கருத்துகளையும் கயர்லாஞ்சி நிகழ்வுகள் மறுத்துவிட்டன. மகாராஷ்ரா விலுள்ள சராசரி கிராமத்தைவிட இக்கிராமம் பொருளாதாரத்தில் மேம்பட்ட ஒன்றாக உள்ளது.

பிரச்சனைக்குள்ளான போட்மாங்கே சராசரி தலித்தைவிட வசதியானவர். 5 ஏக்கர் நன்செய் நிலம் இவருக்குள்ளது. கல்வி நிலையிலும்கூட இம்மாநிலத்து கிராமங்களைவிட சற்று மேம்பட்டதாகவே உள்ளது. இத்தகு நிலையிலும் இக்கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக சாதிவெறி வேரூன்றி உள்ளது. சாதி என்பது ஒரு சமூக வகையினமாகும். இது சமூகத்தின் அதிகாரத்திற்குரிய ஒன்றாக உள்ளது. அதிகார அமைப்பிற்குப் பொருளாதார வளர்ச்சி ஒரு முக்கியக் கூறாக இருக்கிறது. ஆனால் இதுவே எல்லாவற்றுக்கும் உரியதாக இல்லை. இவ்வுண்மையானது பஞ்சாப்பில் தலித்துகளுக்கும் ஜாட்டுகளுக்கும் நடந்த சாதிப் போராட்டத்தில் வெளிப்பட்டது. இங்கு இரண்டு சாதிகளுமே வசதிபடைத்தவையாக உள்ளன. ஆனால் மக்கள் தொகையில் தலித்துகள் அதிகமானவர்களாக உள்ளனர்.

மகாராஷ்ரா பற்றிய தொன்மம், அது வளர்ச்சி பெற்ற மாநிலம் என்பதாகும். பொருளாதர வளர்ச்சியை மையமிட்டே இத்தொன்மம் எற்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை-பூனா பகுதிகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்த புள்ளி விவரங்கள் இதனை ஒரு வளர்ந்த மாநிலம் எனக் காட்டுகின்றன. இத்தொன்மத்தோடு இன்னொன்றும் சேருகின்றது. ஜோத்திபா பூலே, பாபா சாகேப் அம்பேத்கர் இருவரும் முறையே பிராமணர் அல்லாதார், தலித் இயக்கங்களை இம்மாநிலத்தில் தோற்றுவித்தார்கள். இத்தகு முயற்சிகளால் மற்ற மாநிலங்களைப் போலவே மகாராஷ்ரா சாதிவுணர்வுள்ளதாக உள்ளது. தலித்துகள் மீது நடந்த வன்கொடுமைகள் இம்மாநிலத்தில் ஒரு நீண்ட வரலாறு கொண்டவை. 2005 ஆம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. குற்றங்கள் பற்றிய புள்ளி விவரப்படி நாட்டின் 30 மாநிலங்களில் மகாராஷ்ரா 10 ஆம் இடத்தில் உள்ளது.

இது மனநிறைவை தருகிற ஒரு விஷயமல்ல. இதற்கு இத்தகு தொன்மங்கள் எவ்வகையில் பங்காற்றுகின்றன, என்று பார்த்தால், இவை அரசு, குடிமைச் சமூகம் இரண்டிலும் சாதிய உணர்விலிருந்தும் சாதியின் எதார்த்தத்தைப் பார்ப்பதிலிருந்தும் தடை செய்கின்றன. சாதிய வன்கொடுமைகளிலேயே மிகவும் காட்டுமிராண்டித்தனமான கயர்லாஞ்சி நிகழ்வு இத்தகு தொன்மங்களை அம்பலப்படுத்துகின்றது. சில இந்துத்துவா அமைப்புகள் வெளிப்படையாகவே கயர்லாஞ்சி பேரணிகளுக்குப் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்தன. சில பத்திரிகையாளர்களும் கூட அவர்களின் விஷமத்தனமான கருத்துகள் வழி வெகுசன எதிர்ப்புகளை ஒன்றுமில்லாதது போல் திரித்தனர். பூலே, அம்பேத்கர் ஆகிய மகான்களின் பெருமையைப் பேச மகாராஷ்ரம் எந்த ஒரு உரிமையையும் கோர முடியாது.

சாதியத்திற்கு எதிரான கருத்துகளை தலித் அல்லாத ஒரு முன்னேறிய பிரிவினர் சமூகத்தில் வளர்த்து வருகின்றனர் என்பது கூட ஒரு தொன்மம் தான். சமூகத்தில் சீர்த்திருத்தக் கருத்துகள் கொண்ட பிரிவினர் பரவலாக உள்ளனர். இவர்கள் சமூகப் பிரிவினைவாதம், பால் சார்புடைய வெறுப்புணர்வு, உழவர்களையும், கூலிகளையும் சுரண்டுதல் போன்ற பல சமூகப் பிரச்சனைகளில் புரட்சிகர கருத்துகள் கொண்டுள்ளனர். ஆனால் சாதி என்று வரும்போது தலித்துகளை தனியே வைத்துவிடுகின்றனர். கயர்லாஞ்சி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பலைகள் எழுந்தபோது இவர்கள் எல்லாம் தலித்துகளுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்க வேண்டும். இப்பேரணிகள் எல்லாம் அரசியல் சாராமல் வெகுசனங்கள் நடத்தியவை. இத்தகு சீர்திருத்தக் கருத்தாளர்கள் இப்பேரணிகளில் ஏன் இடம்பெறவில்லை? முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்குக் குரல்கொடுக்கும் இவர்கள் ஏன் சாதி அடக்குமுறைக்குக் குரல் கொடுப்பதில்லை. அப்சல் குருவுக்குக் கருணை காட்ட வேண்டுமென்று உண்மையாக உழைக்கும் இயக்கவாதிகள் ஏன் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளில் கவனம் செலுத்துவதில்லை?

வகுப்புக் கலவரத்திற்கு எதிரான செயல்பாடுகளும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான செயல்பாடுகளும் முன்னேற்றக் கொள்கை என்பதாகக் கருதப்படுவதில்லை. சாதி பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகக் கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட பேருக்குச் செயல்படுவதாகவே உள்ளது. கயர்லாஞ்சியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட் தொண்டர்களை ஏன் அணிதிரளச் செய்யவில்லை? ஆகவே முன்னேற்ற வாதம் என்பது இந்தியாவில் சாதி உணர்வை நீக்குவதென்பதாக இல்லை. இதனால் பாசாங்குக்கார ஊடக அன்பர்கள் முன்னேற்றவாதம் என்பதிலும் போலியாகவே கடைபிடிக்கிறார்கள். இவர்கள் எழுத்துக்களில் தலித்துகளில் யாரைக் குறிப்பிட்டாலும், குறிப்பாக எழுத்தாளர்கள், டாக்டர்கள், என்ஜினியர்கள், மேலாளர்கள் போன்றோரைக் குறிப்பிடும் போது ‘தலித்’ என்ற முன்னொட்டைப் போட்டுவிடுவார்கள். ஆனால் வர்ஷா காலே இன்னும் சிலரை விதிவிலக்காகக் கொள்ளலாம்.

கயர்லாஞ்சி நிகழ்வானது இன்னுமொரு தொன்மத்தையும் உடைத்தெறிந்துள்ளது. அதாவது அரசு அதிகார அமைப்பிற்குள் செயல்படும் தலித்துகள் சக தலித்துகளுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் என்பதே அக்கருத்தாகும். இக்கருத்தினை கயர்லாஞ்சி நிகழ்வு மாற்றியிருக்கிறது. இப்பகுதியின் போலீஸ் சூப்பிரன்டென்ட் பண்டாரா என்பவரும், துணை போலீஸ் சூப்பிரன்டெண்ட், அன்தல்கோவன் காவல் நிலைய அதிகாரி, அவருக்குக் கீழுள்ள ஒரு காவலர், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர், மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவர், (இவரே பெண் டாக்டர் இல்லாமல் பிரேத அறுவை சோதனை செய்ய அனுமதித்தவர்), அரசு வழக்குறைஞர் (இவரே குற்றத் தடுப்புச் சட்டத்தின் படி பதிவு செய்ய வேண்டாம் என பரிந்துரைத்தவர்) போன்ற அனைவரும் தலித்துகளே. போட்மாங்கேவினரின் உட்பிரிவைச் சேர்ந்த இவர்கள் யாருமே மேல்சாதிக் காரர்கள் தலித்களுக்கெதிராக சாதி உணர்வுடன் செயல்படுவதை கண்டுகெள்ளவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அதிகாரிகளின் வலையமைப்பு தவறுகள் ஏற்படவே வழிவகுத்தது. இந்த அதிகார அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த தலித் தனிநபர்கள் குரல் எடுபடவில்லை.

கயர்லாஞ்சி நிகழ்வானது மேலுமொரு முக்கியமான தொன்மத்தையும் உடைத்தெரிந்துவிட்டது. காலம் சென்ற கன்ஷிராம் வளர்த்து நடைமுறைப்படுத்தி பெருமளவு வெற்றிபெற்ற ‘பகுஜனாயிருத்தல்’ என்பதே அத் தொன்மமாகும். இன்று பிரகாஷ் அம்பேத்கர், உதித்ராஜ் இன்னும் பலரும் கன்ஷிராமின் பங்குபணிகளை நன்றி பாராட்டி குறிப்பிடாமல் தங்களுடைய தலித் அரசியலை நடத்துகிறார்கள். தேர்தல் களத்தில் அடித்தளச் சாதிகள் தங்களின் பெருமானத்தைக் காட்டுகிற ஒரு வியூகமே வாக்குரிமையாகும். முலாயம் சிங்கோ, சரத் யாதவோ, இடைத்தட்டு சாதிகளைக் கொண்டு வெற்றிகரமாகக் கட்டமைத்துள்ள முறையிலிருந்து மாறுபட்ட ஒன்றல்ல.
சமூகத்திலுள்ள எல்லா சூத்திர சாதிகளும் தலித்துகளும் இணைந்து ஒரு வலுவான அணியை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் எனத் தோன்றுகிறது. பொருளாதார நிலையைப் பார்க்கும்போது இச்சாதிகள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதால் இவையாவும் ஒரு அணியில் திரள வேண்டும்.

பகுஜன் என்னும் நிலையில் பார்த்தால் இது சாதி அடையாளங்களை முன்னிறுத்தி அவர்களை ஒன்றிணைக்க முயலுகிறது. ஆனால் ஒரு நிலையில் அது தவறுகிறது. இம்மக்களை ஓரணியில் திரட்ட எண்ணும்போது ஒரு முட்டுக்கட்டை ஏற்படுவதுபோல் அவர்களில் பலர் சாதியாகவும், சிலர் சாதி அடையாளத்திற்குள் வராமலும், சிலர் வருணங்களாகவும், சிலர் சவர்ணங்களாகவும் அடையாளங்களில் வேறுபடுகின்றனர். மராத்தா அல்லது வேறு சில சாதி அடையாளங்கள் போல் இவர்கள் அடையாளம் பெறுவதில்லை. வேறு ஒரு மாற்று அணுகுமுறையுடன் நோக்கினால் இத்தகைய முட்டுக்கட்டையை அல்லது பிரிவினையை எதிர்கொள்ள முடியும். இச்சாதிகளுக்கிடையில் உள்ள வர்க்க ஒற்றுமையை முன்னிறுத்தி இவர்களை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. கயர்லாஞ்சி உட்பட ஒவ்வொரு சாதிக்கொடுமையும் பகுஜன்களைக் குழப்பி வருகிறது. ஏனெனில் இக்கொடுமைகள் யாவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளால் இழைக்கப் படுகின்றன.

முடிவாகச் சில

கயர்லாஞ்சியில் நடந்த இந்த பயங்கர நிகழ்ச்சியானது எவ்வாறு சாதிவெறி உயிர்பெறுகிறது, வளருகிறது, வன்முறையாக வெடிக்கிறது என்பவற்றை அறிய உதவும் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஊடகங்களில் போலி மதச்சார்பற்ற பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் இத்தகு வன்கொடுமைகளில் புதைந்துள்ள சாதிவெறியை அம்பலப்படுத்துவதற்கு மாறாக, நிலத்தகராறு என்னும் வடிவத்தில் இதன் வன்மத்தைக் குறைக்க முயன்றுள்ளனர். இந்திய அறிவுஜீவிகளிடம் சாதியம் குறித்த தெளிவின்மை இன்னும் தொடர்வதாக எண்ணி இதனைப் புறக்கணிக்கலாம்.

மேலும் தலித்துகள், மற்ற சாதிகளின் பொருளாதார வளர்ச்சியினால் சாதிவெறி தணிந்துவிடும் என்ற எண்ணத்தைக் கயர்லாஞ்சி நிகழ்ச்சி தகர்த்துள்ளது. மாறாக, உலகமயம் என்னும் போக்கு மேல்தட்டு மக்களின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடாக இருப்பதால் இது ஊரக மக்களிடம் ஒரு நெருக்கடியை எற்படுத்தியுள்ளது. சமூகப் பிரிவினர்களிடம் ஏற்றத் தாழ்வினை வசப்படுத்தி வருகிறது. சாதிகள் இதற்கு ஆட்படுகின்றன. கயர்லாஞ்சி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது தலித் அரசியல் என்பதும் தலித் அரசியல்வாதிகள் என்போரும் பயனற்றதாகவே காட்சி தருகின்றன. இவ்விரண்டையும் தலித் வெகுசனங்கள் நிராகரித்துள்ளனர், என்றே தோன்றுகிறது. கயர்லாஞ்சி வன்கொடுமையால் தலித் பெண்கள் காட்டியுள்ள வியக்க வைக்கும் எதிர்ப்புகளை, போராட்டங்களை தலித் மக்கள் உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை. இத்தகு நிலை கயர்லாஞ்சி நிகழ்வின் கவலைதரும் ஒரு அம்சமாகும். எனினும் இத்தகைய போராட்டங்களை நடத்தியோர் ஒரு புதிய தலைமுறையினராக மகாராஷ்ரத்தில் தலையெடுத்திருப்பதை காண முடிகிறது. இது ஒரு புதிய தலைமையை உருவாக்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இப்போதுள்ள கருத்தியல் முறையை மறுசிந்தனை செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கான நோக்கங்கள் குறிக்கோள்கள் என்னென்ன என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது. இதனடிப்படையில் வியூகமும் புதிய தலைமைக்கான ஒரு மாதிரியையும் உருவாக்க வேண்டியுள்ளது. இப்போதைக்கு அத்தகைய அறிகுறிகள் இல்லையென்பது கவலைக்குரிய அம்சமாக உள்ளது.

Anand Teltumbde - தலித் போராளி. இஸ்லாமியர் பற்றி அம்பேத்கர் என்ற நூலின் ஆசிரியர். அம்பேத்கர் பேத்தியின் கணவர்.

Pin It