ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,

வணக்கம். நான் விசயகுமார், அமீரகத்திலிருந்து எழுதுகிறேன். வயது- 30.  பொருளாதாரக் காரணம் தமிழகத்தில் இருந்து அரபு நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கிறேன்.

பெரியார் திடலில் ஆற்றிய தங்களின் உரையின் காணொளியினை குமுதம் தளத்தில் கண்டேன். கீற்று தளத்தில் விஜயகுமார் என்பவர் எழுதிய கட்டுரைக்கு சில மளுப்பல்களை சொல்லி இருந்தீர்கள். என் பெயரும் விசயகுமார்தான். கட்டுரையையும் காணொளியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட வினாக்களை உங்களிடம் பகிர்கிறேன்.

நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 94 -95 காலகட்டம், ஈழம் என்றால் என்னவன்றே தெரியாத வயது. தினசரிகளில் தமிழ்த் திரைச்செய்திகள் வானொலிகளில் திரைப்பாடல்கள் மட்டுமே பார்க்கும் கேட்கும் இளைஞர்களில் நானும் ஒருவன். அன்று ஒருநாள் தவறி ஒரு அரசியல் செய்தியை பார்த்து விட்டேன்.

வைகோ-ஈழத்தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அப்பொழுது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது அது என்ன ஈழத்தமிழர்? பல பெரியவர்களிடம் வினவினேன் அதைப்பற்றி அவர்களுக்கு தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. பின்பு விடுப்பு முடிந்து பள்ளி சென்றபோது விடுதிக் காப்பாளரிடம் வினவியபோது, அந்த மெத்தப்படித்த மேதாவி, ராமேசுவரத்திற்கு தெற்கே கடலுக்குள் உள்ள இலங்கையை பிரபாகரனும் இங்கிருந்து சென்ற பிழைப்பு தமிழர்களும் துண்டாடுகிறார்கள் என்று ஒரு தவறான தகவலை சொன்னார்.

அப்படியே காலங்கள் சுழன்றது. சிற்றலையில் தமிழோசை, வெரித்தாஸ் வானொலிகள் அறிமுகமாக அவை தரும் செய்திகளால் தெளிவடைந்த நான், வெரித்தாசில் ஜெகத் கஸ்பார் உரை மற்றும் ஐபிசியில் தங்கள் உரையினையும் பதிவு செய்து கேட்டு தமிழுணர்வு பெற்றவன். ஆனால் இன்று தங்கள் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாய் இல்லை. காரணம் “நாங்கள் புறநானூற்றை பதிப்பித்தோம் புலிகள்தான் அதை புதுப்பித்தார்கள்” என்று புலிவழித் தமிழ்த்தேசியம் பேசிவிட்டு, இன்று கலைஞர்தான் தமிழ் தமிழனின் நல்லாட்சி என்று பேசுகிறீர்கள். தமிழினத்தை அழிவில் தள்ளிவிட்டு ஆட்சி செய்வதுதான் நல்லாட்சியா?

குஷ்பு, நமீதா, ரம்பா போன்ற தமிழ் தெரியாதவர்களை வைத்து கலைஞர் தொலைக்காட்சியில் நமக்கு தமிழ் கற்றுத் தருகிறாரே இதுதான் தமிழ் வளர்ச்சியா? ‘தமிழர்களே தமிழர்களே என்னைக்கடலில் வீசினாலும்’ என்று சொல்லிக்கொண்டு, ஆறு மாதங்களாக இந்தோனேசியக் கடலில் தவிக்கும் தமிழர்களுக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என்ன செய்தார்? தன்பிள்ளைகளுக்கு அந்தத் துறை இந்தத் துறை வேண்டும் என்று டெல்லிக்கு நேரில் செல்லும் கலைஞர் தமிழன் பிரச்சினைக்கு மட்டும் இணைய சேவை பெருகிவிட்ட இக்காலத்தில் கடிதம் மட்டுமே எழுதுவது ஏன்?

ஐந்து முறை முதல்வராக இருந்த தமிழன் ஈழப்பிரச்சினையில் முரணற்ற, பகிரங்கமான, தெளிவான ஒரு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளாரா?அதை விடுங்கள் அண்டை மாநிலங்களில் ஒன்றிலேனும் நமக்கான உரிமையைப் பெற தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தினாரா? அல்லது மீனவர் சுடப்படுவதை தடுக்க அழுத்தம் கொடுத்தாரா?

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது தமிழக அரசுக்கு தெரியாதென்றால் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் தமிழக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது எப்படி? கலைஞர் வைகோவையும், வைகோ கலைஞரையும் குற்றம் சுமத்துவது புதிதல்ல. அப்படியிருக்க நீங்கள் ஏன் பொங்குகிறீர்கள் கருணாவின் நாவாக இருந்தோம் என்று வரலாற்றில் இடம் பெறவா? '

முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள். அப்படியெனில், உங்களை புலம்பெயர் மக்கள் மதிக்கவில்லை, அழைப்புக்கொடுத்து மேடையேற்றி விருந்து கொடுத்து கை செலவுக்கு பணம் கொடுத்து வழியனுப்பவில்லை, உதவி என்றவுடன் வருகிறார்கள் என்கிற ஆதிக்கப்போக்கு அப்படித்தானே? அதனால்தான் அம்மாவை திருப்பி அனுப்பி உங்கள் பலத்தை காட்டுனீர்களோ? புலிகள் புகழின் உச்சியில் இருந்தபோது அவர்கள் புகழ் பாடி வயிறு வளர்த்தீர், புலிகள் வீழ்ந்து புலம் பெயர் மக்கள் புண்ணாகி போனதால் புகழ்பாடி வயிறு வளர்க்க வழியின்றி கலைஞருக்கு வடம் பிடிக்கிறீர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இறுதிக்கட்டப் போரின்போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக, புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் சரணடைந்தால் உயிருக்கு உறுதி வழங்கப்படும் என்று கூறினீர்கள், ஆனால் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்ஸ்பார் எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்கஸ்பார் எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களும்  டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்லவில்லை.

இணையத்தில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால் நிழல் யுத்தம் நடத்துகிறார்கள் என்று கலைஞர் சகோதர யுத்தம் என்று சொன்னதுபோல் பேசுகிறீர்கள். நெடுமாறனுக்கும், வைகோவுக்கும் நேரம் ஒதுக்கிய மேடையில் எங்கள் கேள்விகளுக்கு மட்டும் பதில் இல்லையே ஏன்? உண்மையை மறைக்கும் உங்களைப் போன்றவர்களை தமிழின வரலாறு மன்னிக்காது. தமிழின உணர்வாளர்களை கூறுபோடும் முயற்சிகள் கருத்துக்கள் இணையத்தளங்களில் இடம் பெறுகிறது என்பதற்காக உங்களின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.

யாரும் எழுத முடியாது பேச முடியாது என்ற நிலை இருந்ததால்தான் உங்களைப் போன்றோர் தமிழ் பற்றாளர்களாகவும் தலைவர்களாகவும் ஆனீர்கள் நாங்கள் உங்களை மெச்சினோம். இணையத்தை விட்டு வெளியில் வாருங்கள் என்கிறீர்கள். ஏன் கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி செய்திகளைக் கேட்டு நாங்கள் சிந்தனையற்று மண்ணாய்ப் போகவேண்டும், நீங்கள் குதிரை ஏற வேண்டுமா? அது இனி நடக்காது.

வெளிநாட்டில் இருந்துகொண்டு எதையாவது எழுதாதீர்கள். இங்கு வாருங்கள் சேர்ந்து போராடுவோம் என்கிறீர்கள். தாயகத்தில்  போராடுபவனுக்கெல்லாம் தமிழினத் தலைவர்தான் வைத்தாரே ஆப்பு அது போதாதா. இதுதான் உங்கள் மக்களாட்சித்தத்துவம். தமிழினப் பிரச்சினைக்கு ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டில் வந்து போராட வேண்டும் என்றால் உங்களுக்கு எதற்கு ஆட்சிபீடம் நீங்களும் வீதிக்கு வந்து விட வேண்டியதுதானே.

நல்லாட்சி என்றால் ஏன் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கமுடியாத வறியநிலை? ஏன் நாங்கள் வெளிநாடுகளில் வந்து காய வேண்டும்? எல்லாம் உங்கள் திராவிட சுரண்டல் அரசியல். பெரியார் திடலில் வைகோவுக்கும், நெடுமாறனுக்கும்தான் கூட்டம் கூட்டப்பட்டது என்றால் உங்களின் ஈழத்தமிழ் குரல்கொடுப்பு நின்று போனதா? தமிழ்நாட்டு அரசியல் வேறு, ஈழத்தமிழ் அரசியல் வேறு என்கிறீர்கள். சரி அதற்காக ஈழத்தமிழனைக் கொல்ல, 2500 கோடி கொடுப்பதை வேடிக்கை பார்ப்ப்பீர்களா?  நம் எதிரியான சிங்களன் நம் பலவீனத்தை நன்கே உணர்ந்ததால்தான் இன அழிப்பை தைரியமாக செய்தான். அதனால்தான் தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளுக்கு இந்தியா செவி சாய்க்காது என்றான் பொன்சேகா.

கலைஞர், ஜெயலலிதா, வைகோ, பழ.நெடு, ராமதாசு, திருமா, சுப.வீ, ஜெகத் கஸ்பார் போன்ற பதவிக்கும் பணத்துக்கும் நக்கீரனில் சுய விளம்பரத்திற்கும் விலை போகும் வெங்காயவாதிகளை எதிரி சரியாகவே எடைபோட்டு வைத்திருக்கிறான். இனி விளம்பரப் பெருமைக்காக எந்த தமிழ்நாட்டுத் தலைவனும் ஈழத்தின் குரல் நாங்கள்தான் என்று முழங்குவதை நிறுத்துங்கள். பேசாமல் செயலில் ஏதாவது அந்த மக்களுக்கு உதவி செய்யுங்க இல்லன்னா ஆளாளுக்கு வசை பாடுவதை நிறுத்திட்டு அமுக்கிட்டு இருங்க. விதி என்று அம்மக்கள் நொந்து கொள்ளட்டும்.

நடுநிலைக்கு நீங்கள் சொன்ன உதாரணத்தோடு நிறைவு செய்கிறேன். ஒருவன் அடிக்கிறான் இன்னொருவன் அடிபடுகிறான், இதில் அடிப்பவன் பக்கம் அல்லது அடிபடுபவன் பக்கம் இதுதான் நடுநிலை. இருவர் பக்கமும் இல்லை என்பவன் அடிப்பவனுக்கு ஆதரவு தருகிறான்..

கொக்கின் வாயில் மீன், பாவம் மீன் என்றும் பிறகு பாவம் கொக்கு அதற்கும் வாய் வலிக்குமே என்பவன் நீதியின்பால் நிற்பவனும் இல்லை. ஐபிசி-வானொலியில் எனக்கு நீங்கள் சொன்ன இந்த கதையுடன் நிறைவு செய்வோம். அடுத்த மடலில் சந்திப்போம்!

நன்றியுடன்

கூ.விசயகுமார்,அமீரகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.