இடஒதுக்கீட்டுப் பிரச்சனை என்பது வெறும் சமூகப் பிரச்சனை மட்டுமன்று. அது அரசு குறித்த ஒரு பிரச்சனையுமாகும். ஏனெனில் இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்துவதென்பது, அரசின் அங்கங்களில் அனைத்துச் சாதிகளும் சமூகங்களும் இடம் பெறுவதற்கான தளத்தைத் தயார் செய்வதாக இருக்கிறது. இன்று நடைமுறையிலுள்ள அரசு வடிவம் கூட, திறந்த நிலை, சேர்த்துக் கொள்ளும் தன்மை, பங்கேற்கக் கூடிய நிலை ஆகியவை எந்த அளவுக்கு செம்மையுற்ற ஒரு வடிவத்தில் இருக்கிறதோ, அந்தளவுக்கு ஜனநாயக இயக்கங்களின், வழிமுறைகளின் வளர்ச்சிக்கு ஏற்புடையதாகவும், புறக்கணிப்பு அற்றதாகவும் இருக்கும்.

bhagathsing
வர்க்க நிலை குறித்தெல்லாம் கருதாமல், சமூக ரீதியில் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு அரசு எந்திரத்தில் கூடுதலான அளவுக்கு இருக்குமானால், கீழ்நிலையில் உள்ள சாதியைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான சாதிய பாரபட்சங்கள் அவர்களிடம் இருப்பதில்லை என்பதால், அரசை ஜனநாயகப்படுத்துவதற்கு ஏதுவானதாக அது அமையும். முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளும், சமூக ஏகாதிபத்திய குழுக்களும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் எந்த முயற்சியையும் தடை செய்வதில் கைகோத்துக் கொள்வதற்கு காரணமில்லாமல் இல்லை.

இடஒதுக்கீடு என்பது சாதிய அமைப்பின் விளைவாய் ஏற்பட்டது என்ற உண்மையை, அறிக்கையின் முதல் பத்தியில் சி.பி.எம். கட்சி ஏற்றுக் கொள்கிறது. எனவே சாதி அமைப்பு நீடிக்கும் வரையிலும் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடரவே செய்யும். சாதி அமைப்பை ஒழித்த பிறகே இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும். ராம்விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் யாதவ், மு. கருணாநிதி ஆகியோர் பொருளாதாரத்திலும், அரசியலிலும், கல்வியிலும் எவ்வளவு உயர்வை அடைந்தாலும், சாதிய அமைப்பில் அவர்களின் சாதிகள் மாறிவிடுவதில்லை. ஒரு தலித் பெரும் பணக்காரராக மாறினாலும் இது நடப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை அவர் ஒரு தலித்தாகவே இருப்பார்.

ஒருவேளை பார்ப்பனச் சமூகம் முழுமையும் ஒன்றாக அமர்ந்து, லாலு பிரசாத் யாதவ் வசதியானவராக மாறிவிட்டதாலும், இதற்கு மேலும் அவர் மாடு மேய்த்துக் கொண்டும், பால் பீய்ச்சிக் கொண்டும் இல்லை என்பதாலும், அவரது சாதியோடு தொடர்புடைய ‘வெறுக்கத்தக்க' விஷயங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார் என்பதாலும், இன்று முதல் அவர் பார்ப்பனச் சாதி வட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளப்படுகிறார் என ஒரு முடிவு எடுத்தால், அப்போதுதான் லாலு பிரசாத் யாதவின் குழந்தைகளோ அல்லது ராம்விலாஸ் பாஸ்வானின் குழந்தைகளோ - கிரீமிலேயர் சாக்கை முன்வைத்து இடஒதுக்கீட்டுக்கு வெளியே வைக்கப்படலாம்.

இடஒதுக்கீடு என்பது, பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு சில பணியிடங்களையும் கல்வியிடங்களையும் அளிப்பதை மட்டுமே குறிப்பதாக இருந்தால், அதற்கு எதிராக இவ்வளவு கூப்பாடு இருந்திருக்காது. பல நூற்றாண்டுகளாக ‘உயர்சாதி'யினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனுபவித்து வரும் தனியாதிக்கத்தையும் தனியுரிமையையும் இடஒதுக்கீடு நீர்த்துப் போகச் செய்து விடும் என்னும் உண்மைதான், அவர்களின் உச்சக்கட்ட எதிர்வினைக்குக் காரணமாக இருந்தது. பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் அனைவரும் அவர்கள் பாட்டாளிகளாக அல்லது அரைப்பாட்டாளிகளாக, சிறு விவசாயிகளாக அல்லது நடுத்தர விவசாயிகளாக, கீழ் நடுத்தர வர்க்கத்தினராக அல்லது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், 1990 இல் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு ஒருமித்த குரலில் ஆதரவாக நின்றார்கள். வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதென்பது சில பணியிடங்களை பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கு வழங்குவது என்பதாக இருந்தால், அதுவும் சிறு நகரங்களிலும், பெரு நகரங்களிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் மிகமிகச் சிறுபான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களே பயன்பெறுவர் என்பதாக இருந்தால், மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகப் பெருந்திரளாக வீதிகளில் இறங்கியிருக்க மாட்டார்கள்.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ‘உயர்சாதி'யினரின் அரண் செய்யப்பட்ட பாரம்பரிய உரிமைகளை உடைப்பதற்கான ஒரு தருணமாகவே கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் கண்டனர். தங்களுக்கு எப்போதும் அவமானங்களையே தந்து இந்த அரண் செய்யப்பட்ட பாரம்பரிய உரிமைகளுக்கு எதிரான பன்னெடுங்காலப் பழமையுடைய வெறுப்புக்கும் போராட்டத்திற்கும் ஒரு வடிவம் கொடுப்பதாகவே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அமைந்தது.

பொருளாதாரத்தில் முன்னேறும் சீனா, ஏகாதிபத்தியத்தால் கூடுதலாக வெறுக்கப்படுவதைப் போலவே, பொருளாதாரத்தில் முன்னேறும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனி நபர், ஆதிக்க சாதியினரின் பாரம்பரிய உரிமைகளால் அதிகமாக அவமதிக்கப்படுகிறார். கிராமப் புறத்தைச் சேர்ந்த பலவீனமான, அடக்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரின் பாரம்பரிய உரிமைகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருப்பதில்லை. கல்வி கற்றவரும், பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவருமான பிற பிற்படுத்தப்பட்டவரே மரபுரிமையாக வரும் சாதிய நலன்களுக்குச் சவால் விடுபவராக இருக்க முடியும். எனவே தான் ராம்விலாஸ் பாஸ்வான் அல்லது லாலுபிரசாத் யாதவ் போன்றவர்களின் குழந்தைகள் ஏன் இடஒதுக்கீட்டை அனுபவிக்க வேண்டும் என ஆதிக்க சாதியினர் எப்போதும் கூப்பாடு போடுகிறார்கள்.

தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட கல்வியிடங்களில், 10 சதவிகித அளவுக்கு மட்டுமே அய்.அய்.டி. மற்றும் அய். அய். எம். ஆகிய நிறுவனங்களில் நிரப்பப்படுகின்றன என அறிக்கைகள் கூறுகின்றன. இவர்கள் குறிப்பிடுகிற கிரீமிலேயரைச் சேர்ந்தவர்கள் தலித் மற்றும் பழங்குடியினரிலிருந்து விலக்கப்பட்டால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து கல்வியிடங்களுமே காலியாக இருக்கும். பிற பிற்படுத்தப்பட்டோர் விஷயத்திற்கும் இது பொருந்தும். கல்வி, திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்துக்கான தேசிய நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின் முடிவினைக் குறிப்பிடுகிற ஒரு செய்தி அறிக்கை, 18.5.2006 வெளியான ‘இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டில் வெளிவந்தது.

பள்ளியில் சேர்க்கப்படுகிற பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 29 சதவிகிதம் என்று குறிப்பிடப்படுகிறது. இச்செய்தி அறிக்கையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர் ஒருவர், “பிற பிற்படுத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவுகளில் இருந்து வருவதால் பள்ளியிலிருந்து நின்று விடுபவர்களின் விகிதம், ஏறத்தாழ தலித் மற்றும் பழங்குடியினருடைய விகிதத்துக்குச் சம மானதாக இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார். அதே செய்தி அறிக்கையில், “தேசிய அளவில் பள்ளியிலிருந்து நின்று விடுபவர்களின் விகிதத்தை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால், பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கை 15 சதவிகிதத்திற்கு மிகாது அனுமதிக்கலாம்'' எனக் குறிப்பிடும் ஒரு கல்வியாளரின் கூற்றும் இடம் பெறுகிறது. இவ்வாறு, இடஒதுக்கீட்டு வரம்பிலிருந்து கிரீமிலேயரை விலக்கி வைப்பதன் மூலம், இடஒதுக்கீட்டுக்கென ஒதுக்கிய இடங்களை நிரப்பாமல் நிறுத்தி வைக்கும் அதே கதை, பிற பிற்படுத்தப்பட்டவர்களின் விஷயத்திலும் திரும்ப நிகழ்த்தப்படும்.

கிரீமிலேயர் கொள்கை என்பது, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ‘உயர் ஜாதி'யினர் என்று சொல்லிக் கொள்பவர்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தந்திரமே அன்றி வேறில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற சக்திகள் கிரீமிலேயர் கொள்கையை ஆதரிப்பதென்பது காரணமின்றி இல்லை. இந்த ஆவணம் அச்சுக்குப் போகின்ற தருணத்தில் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆன திக் விஜய் சிங், கிரீமிலேயர் கொள்கை, தலித் பழங்குடியினர் இடஒதுக்கீட்டிற்கும் நீட்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியதாகக் குறிப்பிடுகிற செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. மண்டலின் முதலாவது பருவத்தில் தங்கள் முழு ஆற்றலுடனும் இடஒதுக்கீட்டை முதலில் எதிர்த்தார்கள். வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதைக் கண்ட போது, கிரீமிலேயர் கொள்கையை அறிமுகப்படுத்தியதோடு நிறைவடைந்தார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல, கிரீமிலேயர் கொள்கைக்கு ஆதரவாக ராம்விலாஸ் பாஸ்வான் அல்லது லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் குழந்தைகள் ஏன் இடஒதுக்கீட்டை அனுபவிக்க வேண்டும் எனக் கேட்பது, பீகாரிலுள்ள ஆதிக்கசாதியினரிடையே பொதுவான பல்லவியாக இருந்து கொண்டிருக்கிறது.

சி.பி.எம். கட்சி 1990இலும் கிரீமிலேயர் கொள்கையை ஆதரித்தது; 2006இலும் அதையே திரும்ப செய்கிறது. கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத், கட்சியின் கொள்கை அறிக்கையை செப்டம்பர் - 9, 1990 "பீப்பிள்ஸ் டெமாக்ரசி' இதழில், வி.பி.சிங் அரசு மய்ய அரசின் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை முன்னிட்டு விவாதமும், சர்ச்சையும், தகராறும் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்த சூழலில் முன் வைத்தார். எனது இக்கட்டுரை விமர்ச்சிக்கிற அறிக்கையே அந்தக் கொள்கை அறிக்கையிலிருந்து பெறப்பட்டது தான்.

அவர் இவ்வாறு எழுதுகிறார் “நிலமற்றவர்கள் வளமான நிலபுலன்கள் உடையவர்களுடனும், ஏழைகள் வசதி பெற்றவர்களுடனும் ஒப்புநோக்கி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை முன்னேறியவர்களின் தர வரிசையிலிருந்து வேறுபடுத்திக் காணும் நோக்கத்தில், அதாவது இச்சமூகங்களில் உள்ள ஏழைகளும் வஞ்சிக்கப்பட்டவர்களுமான பெரும்பான்மையினர் இடஒதுக்கீட்டின் மூலம் பயனடையும் வகையில், ஒரு பொருளாதார அளவுகோல் வேண்டுமென சி.பி.எம். கட்சி கேட்கிறது. இந்த அளவுகோல் வெறுமனே வருமான வரம்பாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை. வருமான வரி கணக்குகள், சொந்தமாயுள்ள நிலத்தின் அளவு, பெற்றோர்களது தொழில் அந்தஸ்து போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு முறையாகவும் இருக்கலாம்'' (பிரகாஷ் காரத்தின் அறிக்கையை http://cpim.orgஎன்ற முகவரியில் காணலாம்).

பொருளாதார அளவுகோலுக்காக வாதாடும் போது பிரகாஷ் காரத் பிரச்சனையின் ஆழத்துக்குப் போகவில்லை. இடஒதுக்கீடு என்பது வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கையோ, சமூக ரீதியில் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அல்லது கல்வியைப் பரப்பும் நடவடிக்கையோ அன்று. அந்தஸ்து, அதிகாரம், சிறப்புச் சலுகைகள், வசதிகள் ஆகியவற்றின் உற்பத்தி நிலையங்களான அதிகார வர்க்கம், கல்வி, நிறுவனம், நீதித்துறை, வணிகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில குறிப்பிட்ட சாதிக் குழுக்களின் மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்தி, அதன்மூலம் சூத்திரர், ஆதிசூத்திரர், பழங்குடியினர் ஆகியோரின் சமூக விடுதலைக்கான தளத்தைத் தயார் செய்யும் நடவடிக்கையே இடஒதுக்கீடு. சி.பி.எம். கட்சி முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என நம்புகிறது. ஆனால் குறிப்பிட்ட சில சாதி குழுக்களின் சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடத் தவறி விடுகிறது. கட்சி, மேற்கு நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதில் நம்பிக்கை உடையதாய் இருக்கிறது; ஆனால் சொந்த நாட்டில் சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய வரலாறு அதற்குக் கிடையாது.
தமிழில்: ம.மதிவண்ணன்
அடுத்த இதழிலும்
Pin It