இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு பண்பாடுகளைக் கொண்ட மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் ஆட்சியாளர்கள் மாறிய பொழுதும் கூட, அவர்களிடையிலான உரையாடல்களும், பண்பாட்டுப் பரிமாற்றங்களும் தொடர்ந்தே வந்தன. சமூக, மத உறவுகள் மிகுந்த நெகிழ்வுடன் நடைபெற்ற பரிமாற்றங்கள் வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களை வழங்கின. இந்தியாவின் நிலப்பரப்பு, வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடமளித்தது. இந்த உரையாடல்கள் பல புதிய பொது சமயங்களுக்கு வித்திட்டன. ‘பக்தி', ‘சுபி' போன்ற பல மத மரபுகள் இங்கு உருவாயின. இந்த மரபுகளைப் பின்பற்றி வந்த புனிதர்கள் மதத்தை உரையாடல்கள் நிகழும் புள்ளிகளாகவே பார்த்தனர். இந்துக்கள் -தர்காக்களுக்கு சென்றனர்; முஸ்லிம்கள் பலர் இந்து மரபுகளைப் பின்பற்றினர்.

இந்தியப் பண்பாடு எது?

இந்தியப் பண்பாடு என்றால் என்ன? அது இந்து பண்பாடா? அது முஸ்லிம் பண்பாடா? அல்லது அது வேறு ஒன்றா? இந்தியாவில் தான் பல மதங்கள் எந்தப் பாகுபாடுமின்றி செழித்து வளர்ந்தன. இந்து, சமணம், பவுத்தம், கிறித்துவம், இஸ்லாமியம், சீக்கியம் என அனைத்து மதங்களையும் வழிபடுபவர்கள் இங்கு உள்ளனர். சில மதங்கள் இங்கேயே தோன்றின. சில வெளியிலிருந்து வந்தன. சாமியார்கள், சுபிகள், மிஷினரிகள் ஆகியோரின் பிரச்சாரங்கள் மூலம் அவை இங்கு வளர்ந்தன. இஸ்லாம், ‘சுபி'க்களின் கருத்துக்கள் வழியே செல்வாக்குப் பெற்றது. கிறித்துவம் மிஷினரிகளின் கல்வி, நல்வாழ்வு செயல்பாடுகள் வழி வளர்ந்தது. இங்குள்ள பல பண்பாடுகள், பல மதங்களின் கலவையாகவே திகழ்கின்றன.

நம் உணவுப் பழக்கங்கள், உடை, கட்டடக் கலை என அனைத்தும் உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டு மெருகேறிய பண்பாடாகவே திகழ்கிறது. பக்தியும், சுபியும் நம் பரிமாற்றங்களின் சந்திப்பு புள்ளிகளாகத் திகழ்ந்த போதும், இங்கு பல மதங்கள் மக்களின் வாழ்வு, நடைமுறை, சடங்குகள் என அனைத்திலும் ஆளுமை செலுத்துவதை உணர முடிகிறது. இளவரசர் முகம்மது தாரா ஷிகேக் எழுதிய ‘மஜ்மா உல் பகாரின்' என்கிற நூல், இந்த கலந்தாய்வுகள் குறித்து தெளிவுபட பேசுகிறது. அவர், இந்தியாவை இந்து -முஸ்லிம் மதங்களை இணைக்கும் பூமியாக கருதுகிறார். அதே போல உருது மொழியும் இந்தி, பெர்சிய மொழிகளுடன் உறவாடித்தான் வளர்ந்தது.

மன்னர்கள் மதப் பாகுபாடின்றி தங்கள் அரசவையில் அனைவருக்கும் இடமளித்தனர். அக்பரின் அரசவையில் தோடர்மால், சிவாஜியின் அரசவையில் மவுலானா அய்தர் அலி ஆகியோர் இதற்கு சில எடுத்துக்காட்டுகள். மேவாதீ முஸ்லிம்கள் தங்கள் வம்ச வழிமரபை இந்து புரோகிதர்கள் மூலமே செய்கிறார்கள். கேரளத்தில் உள்ள நவயத் முஸ்லிம்கள் தங்கள் திருமணங்களின் போது, ஏழு முறை சுற்றிவரும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் இந்த மண் சார்ந்து நிகழ்ந்த உறவுப் பரிமாற்றங்களே!

இந்தியாவில் உண்மையிலேயே இது போன்று ஏராளமான பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுவாக ஒரு மதத்தை சார்ந்த வசதிபெற்ற பழமைவாதிகள் மட்டுமே, தீவிரமான மதக் கொள்கைகளுடன் இருப்பார்கள். ஆனால் ஏழை எளியவர்கள் பிற மதங்களின் மரபுகளுடன் எந்தத் தயக்கங்களுமின்றி இணைந்து வாழ்வார்கள். எல்லா மதங்களையும் மதிக்கும் பண்புடையவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஹோலி, தசியா போன்ற பண்டிகைகளில் அனைவரும் இணைவதை வரலாற்றிலிருந்து மறைத்திட இயலாது.

மதங்களின் மனப்பான்மை

சுதந்திரப் போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் தான் முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபா உருவானது. இந்த அரசியல் இயக்கங்களின் தேவைகளை நிறைவு செய்ய, வேறு பல துணை மதவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த மதவாத அமைப்புகள் எல்லாம் மேட்டுக்குடியினரால் உருவாக்கப்பட்டவை. அச் சமூகத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் ஏழைகளை கண்காணிப்பதுதான் இவர்களின் வேலை. தலித்துகள் மற்றும் அஜ்லாபாக்கள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். விளிம்பு நிலை மக்களை வென்றெடுக்கவும் மதங்கள் முயன்றன. ஆரிய சமாஜத்தின் ‘சுத்தி', தலிகி ஜமாத்தின் ‘தன்சீம்' ஆகிய மத அமைப்புகளால் இப்பணி முன்னெடுக்கப்பட்டது. சுதந்திரத்திற்காகப் போராடிய இயக்கங்களை பல்வேறு மதங்கள் மற்றும் அந்தந்த சமூகங்களில் உள்ள மேட்டுக்குடி தலைவர்கள் வழிநடத்தினாலும் -அதில் எல்லா சமூகங்
களும் மதசார்பற்று, பன்மை விழுமியங்களுடன் மதிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் போன்ற முற்போக்கான சமூக சீர்திருத்தவாதிகளும் பண்பாட்டை இன்னும் பன்மை நிறைந்ததாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றினர்.

சுதந்திரப் போராட்டம் வேரூன்றிய காலத்தில் மதவாத இயக்கங்கள் மிகக் குறுகிய பண்பாட்டுப் பார்வை கொண்டிருந்தன. பல பண்பாடுகளை, மதங்களை சார்ந்தவர்களை ஒற்றை மேடையில் அணிதிரட்டியது சுதந்திரப் போர். மதவாத இயக்கங்கள் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையின் பயனாக தங்களை வளர்த்துக் கொண்டனர்

மத்திய காலமும் பன்முகத்தன்மையும்

இந்து கோயில்களை அழிப்பதற்காகவும், மக்களை முஸ்லிம்களாக மாற்றுவதற்காகவும் முஸ்லிம் மன்னர்கள் நடத்திய படையெடுப்புகள் மட்டும் தான் -மத்திய கால வரலாறு முழுவதும் நிரம்பியுள்ளதா? இந்த காலம் நம் சமூக வாழ்வின் இருண்ட காலமா? அப்படி இல்லவே இல்லை. இந்திய சமூகம் வேற்றுமைகளைத் தனது பலமாகக் கொண்டது. மன்னர்கள் தங்களுக்குள் போரிட்ட போது, இங்கிருந்த பார்ப்பனர்கள், உலமாக்கள் பிறருடைய வழிபாட்டு முறைகளை கீழாகவே நோக்கினர்.

இரு மதங்களையும் சேர்ந்த விவசாயிகள், விளிம்பு நிலை மக்கள் -மதங்களையும் தங்களுக்கிடையேயான பரிமாற்றங்களையும் கொண்டாட்டாமாகவே அணுகினார்கள். மன்னர்கள் தங்கள் பொருளியல் நலன்களுக்காக ஆட்சிப் பரப்பை விரிவாக்குவதில் ஈடுபட்டிருந்தபோது, மக்கள் தங்களின் பண்பாட்டை செழுமைப்படுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தனர். புலவர்கள், கட்டடக் கலை நிபுணர்கள், நிகழ் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், ஓவியர்கள் என இவர்களின் ஒரு பகுதி -மாற்று சமூகத்தினரை ஆத்திரமூட்டுவதிலும் ஈடுபட்டது.

மதம்

இந்த காலத்தில் உருவான முக்கிய போக்குகளாக பக்தி மற்றும் ‘சுபி' மரபுகள் கருதப்படுகின்றன. கபீர், நானக், துளசிதாஸ் ஆகியோரின் படைப்புகளில் மதம், வாழ்வு குறித்த பன்மை விழுமியங்கள் பரவியிருந்தன. பார்ப்பனியத்தின் மொழியான சமஸ்கிருதத்தை தவிர்த்து விட்டு, எளிய இந்திய மொழியில் மக்களுடன் உரையாடினார் கபீர். இரு சமூகங்கள் மத்தியில் உறவுப் பாலங்கள் ஏற்படுத்துவதை அவர் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். அவரது ஒரு ‘சப்தத்'தில் இப்படி கூறுகிறார். தங்கத்திலிருந்து செய்யப்பட்ட வெவ்வேறு ஆபரணங்களைப் போல தான் -அல்லா, ராம், ரகீம், ஹரி என அனைத்தும் ஒரே கடவுளின் வேறுபட்ட பெயர்கள்.

கடவுளை வணங்குவதற்கான வித்தியாசமான முறைகள் தான் நமாசும், பூசையும் என்றார் கபீர். மக்களை பிளவுபடுத்தும் மத மரபுகளையும், நிறுவன மயமான மதத்தையும் கபீர் கடுமையாக சாடினார். பண்டிகைகள் மற்றும் முல்லாக்களை கபீர் விமர்சித்தார். சமூகத்தை மதத்தின் பெயரால் பீடித்துள்ள சாதிமுறை, தீண்டாமை ஆகியவற்றையும் அவர் விமர்சித்தார். அந்த காலகட்டத்தில் பல மதங்களை சார்ந்த ஏராளமான மக்களிடம் அவரது படிப்பினைகள் சென்றடைந்தன. துளசிதாசும் அவரது எழுத்துக்களில் அவர் காலத்தில் நிலவிய மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் குறித்து பதிவு செய்துள்ளார்.

“ராமனே உனது அடிமைதான் இந்த துளசி
அவர்கள் எது வேண்டுமானாலும்
சொல்லிவிட்டுப் போகட்டும்
பிச்சை யெடுத்தே நான் வாழ்கிறேன்,
மசூதி தான் நான் தஞ்சமடைந்த இடம்
உலகத்துடனான என் பரிமாற்றங்கள்
முடிந்து விட்டன''
-துளசிதாஸ், கவிதாவல்லி

அவரது காலத்தின் மிகப்பெரும் ராம பக்தராகத் திகழ்ந்த இவர், ஒரு மசூதியில் தான் வாழ்ந்தார். அங்கிருந்தபடி தான் ராமன் மீதான அவரது பாடல்கள் எழுதப்பட்டன. கபீரின் படைப்புகளில் பெரும் தாக்கம் பெற்ற குருநானக், உலகில் அமைதியை கோரி நின்றார். மத இணக்கத்தில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். இருந்தும் இரு மதங்களின் நம்பிக்கைகளை வைத்து அவர் இந்து -முஸ்லிம் இணத்தை ஏற்படுத்த முயன்றார். இஸ்லாத்திலிருந்த உருவ வழிபாட்டை தவிர்க்கும் அம்சத்தை அவர் எடுத்துக் கொண்டார். இந்து மதத்திலிருந்து மறுபிறவி மற்றும் கர்மாவை அவர் எடுத்துக் கொண்டார். அவர்களது ஆதி கிராந்தத்தில் கபீர், சுபிக்கள், பாபா பாரிக் ஆகியோரின் பல பத்திகள் அப்படியே மேற்கோள்களாக உள்ளன. பொற்கோயிலின் அடிக்கல்லை நாட்டியது, மிர் மியான் என்கிற பிரபல சுபி தான்.

‘சுபி'களின் பழமை அல்லாத நடைமுறைகள், எளிய வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பார்த்து தான் -ஏராளமான தலித்துகள் மற்றும் பின்தங்கியவர்கள் இஸ்லாத்தை தழுவினர். சுபிக்களின் வழிபாட்டுத் தலங்கள் அனைத்து மதத்தினரையும் அனுமதித்தது. இஸ்லாத்தின் பழமைவாத, இறுக்கமான வழிமுறைகளுக்கு எதிர் நீரோட்டமாகத் தான் சுபிக்கள் தோன்றினார்கள். சாதி, சமய கோட்பாடுகளைத் தகர்க்கவே சுபிக்கள் முனைந்தனர். உண்மை என்பது ஒன்றே, நாம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே என்கிற அவர்களது கருத்தாக்கங்கள், பல சமயத்தாரிடம் வரவேற்பைப் பெற்றன.
Pin It