மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17.5.2006 அன்று கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு குறித்து வெளியிட்ட அறிக்கையின் மீதான ஒரு விமர்சனப் பார்வை: i) சமூக நீதிக் கொள்கையின் அடிப்படை உண்மைகளில் கூட, சி.பி.எம். கட்சி எவ்வளவு அறியாமை உடையதாக இருக்கிறது என்பதை அவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது. “சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு'' என்று அந்த அறிக்கையின் முதல் வரியிலேயே ஒரு பெருந்தவறை இழைத்திருக்கிறது அக்கட்சி. அரசியலமைப்புச் சட்டத்தின் சட்ட விதியானது, உண்மையில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது. இத்தகைய அடிப்படை உண்மைகள் மீதான அறியாமை என்பது, உண்மையில் ஆபத்தானது. கல்வி ரீதியாக என்பதற்குப் பதிலாக, பொருளாதார ரீதியாக என்று மாற்றீடு செய்திருப்பது பொருளாதார வாதத்தினால் அக்கட்சி எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. ‘E' என்ற எழுத்தில் தொடங்கும் எல்லா சொற்களும் ‘எக்கனாமிகலி' என்றே வாசிக்கப்படுகிறது.

2005இல் நடைபெற்ற கட்சியின் 18ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், சமூக நீதிக் கொள்கையின் சில அடிப்படை உண்மைகள் மீதான அக்கட்சியின் அறியாமையை நாம் காண முடியும். அம்மாநாட்டுத் தீர்மானத்தின் இரண்டாவது பத்தியில் 3ஆவது வரியில், தலித் கிறித்துவர்களுக்கான இடஒதுக்கீடு ஆதரிக்கப்படுகிறது. தலித் முஸ்லிம்களும் இட ஒதுக்கீட்டைப் பெறுவதில்லை என்பதைக் கட்சி குறிப்பிடவில்லை. தலித் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இடஒதுக்கீட்டில் அவர்கள் நிலை குறித்து அக்கட்சி அப்பட்டமான அறியாமையில் இருக்கிறது.

ii) இதழ்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன: அ) கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களின் சேர்க்கையைப் பொறுத்தவரையில், கட்சி கிரீமிலேயர் கொள்கையை ஆதிரிக்கிறது. ஆ) முற்பட்ட சாதிகளிலுள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க அக்கட்சி வாதாடுகிறது. இ) ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்து, அதைப் பொது விவாதத்திற்கு முன் வைக்க வேண்டுமென மய்ய அரசை அக்கட்சி வலியுறுத்துகிறது. இதன்மூலம் அத்திட்டம் நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன் ஒரு விரிவான ஒப்புதல் ஏற்படும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது.

கிரீமிலேயர் (வள அடுக்குப் பிரிவினர்) கருதுகோளின் மீதான சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு தோன்ற காரணமாயிருக்கும் ஆதாரக் கருத்து, அவ்வறிக்கையின் மூன்றாவது பத்தியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. “பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து முரண்படும் வகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால், இந்த சாதிகளுள் உள்ள ஏழ்மையும் தேவையும் நிறைந்த குழுக்களுக்கு இடஒதுக்கீடு பயனளிக்கும் வகையில், உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஏற்கனவே வாய்ப்புடையவர்களாய் இருப்பவர்களையும் வசதியானவர்களையும் தவிர்க்கும் வகையில் சமூகப் பொருளாதார அலகை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்கிறது அப்பகுதி. அக்கட்சி மேலும் கூறுகையில், “மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ‘கிரீமிலேயரை' வெளியேற்றுவது என்று அறியப்படுவதாக இது இருக்கிறது'' என்கிறது.

கட்சியின் இப்பார்வை கடுமையான குறைபாடு உடையது. நடைமுறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடையில் இருப்பதை விடவும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினருக்கு இடையே மிக அதிகமான வகுப்பு வேறுபாடுகள் உள்ளன. கடந்த அறுபதாண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கடுமையான ஏழ்மையிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பலவீனப்படுத்தும் தன்மை கொண்ட சாதிய பாரபட்சங்களாலும், மிகச் சொற்பமான பிரிவினரே தலைமுறை தலைமுறையாக இடஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள். இடஒதுக்கீட்டின் விளைவாக பிற்படுத்தப்பட்ட சாதி அலுவலர்களை விட, மிக அதிகமான எண்ணிக்கையில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். மற்றும் கவுரவமான பிற மத்திய அரசு உயர் அலுவலர்களாக பட்டியல் சாதியினர் பதவி வகிக்கிறார்கள்.

இந்திய குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்தாஸ் அத்வாலேயின் கேள்வி ஒன்றுக்கு, நவம்பர் 2005 இல் நாடாளுமன்ற அவையில் தொழிலாளர் துறை, பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின அலுவலர்களைக் குறித்து அளித்த விளக்கத்தில் உள்ள புள்ளி விவரம்:

பிரிவு எஸ்.சி. எஸ்.டி. ஓ.பி.சி.
அய்.ஏ.எஸ் 547 312 222
அய்.பி.எஸ் 311 158 142
அய்.எப்.எஸ் 302 197 85


சராசரியாக, சூத்திரர்கள் எனப்படுவோர் பொருளாதார ரீதியில் ஆதி சூத்திரர்கள் மற்றும் பழங்குடியினரை விட தாழ்வில்லை எனலாம். பிற்படுத்தப்பட்டவர்களுள் ஒவ்வொரு துணைவகுப்பிலும் உள்ள அதி உயர்ந்த மற்றும் அதி கீழான புள்ளிகளுக்கு இடையில் வருமானத்தில் உள்ள வேறுபாடு, தலித் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்குள் உள்ளதை விடவும் குறைவானது. அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் அதிகமாக இருந்துவரும் இடஒதுக்கீட்டின் விளைவாக தலித், பழங்குடியின பிரிவினருக்குள்ளும் ‘கிரீமிலேயர்' என்று சொல்லப்படுவது நிச்சயமாய்த் தோன்றியிருக்கிறது.

குறிப்பாக பட்டியல் சாதியினரில் உள்ள கிரீமிலேயர் ‘பாம்செப்' போன்ற அமைப்புகளில் திரண்டுள்ளனர். அதுவே பொருளாதார ரீதியாகவும் பிற வகைகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் முதன்மை பலமாக இருந்து வருகிறது. தலித் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிய கான்ஷிராம் அவர்களால், தலித் மக்களிடையே திரண்ட மேற்கண்ட கிரீமிலேயரின் துணையின்றி தமது முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது.

தலித் மற்றும் பழங்குடியினருக்கிடையிலான இந்த கிரீமிலேயர் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டால், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் நிரப்பப்பட மாட்டாது. அதோடு சலுகை பெற்ற இத்தகைய நமது சகோதரர்களிடமிருந்து தலித் வெகுமக்கள் திரள் பெறும் ஆதரவும் படிப்படியாகச் சுருங்கி விடும். உண்மையில், பிற்படுத்தப்பட்டவர்களிலுள்ள கிரீமிலேயரில் உள்ளவர்கள் எல்லா இடஒதுக்கீட்டுப் பயன்களையும் தனியாதிக்கம் செய்து விடுவதென்பது, தலித் மற்றும் பழங்குடியினர்களை விடவும் குறைந்த அளவுக்கே சாத்தியம். பிற்படுத்தப்பட்டவர்களின் திரளான மக்கள் தொகையும், அவர்களின் சராசரிப் பொருளாதார நிலையும் தலித்துகளை விடவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. அதனால் பிற்படுத்தப்பட்ட மக்களில் உள்ள கிரீமிலேயரில் இடஒதுக்கீட்டுப் பயன்கள் அனைத்தையும் தனியாதிக்கம் செய்வதென்பது கடினமான ஒன்றாகும்.

பிற்படுத்தப்பட்டவர்களிடையே உள்ள கூடுதல் ஏழ்மையும், தேவையும் நிறைந்த பிரிவினர் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்கிற நிலை, பிற்படுத்தப்பட்டவர்களை விடவும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எந்த விதத்திலும் பொருந்தாதது அல்ல. இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் அலகைக் கொண்டு வந்து பொருத்தி விட ஒரு சாக்காக இருந்துவிட முடியாது. ஏனெனில், தற்போது இருப்பவற்றுக்குள் கிரீமிலேயரை நீக்கிவிடுவது என்பது, அரசுப் பணிகளில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் பிரதிநிதித்துவம் என்பதே இல்லாத தன்மையை உருவாக்கிவிடும்.

தலித் மற்றும் பழங்குடியினருடன் ஒப்பிடும்போது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ஆதாரமாகக் கொண்டுதான் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் அலகுக்கான தனது ஆதரவை அக்கட்சி நிலை நிறுத்தி இருக்கிறது. கிரீமிலேயர் என்று சொல்லப்படுவது தலித் மற்றும் பழங்குடியினரிடம் துலக்கமாக இருப்பதாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் இருப்பதை விடவும் தலித்துகளிடையே உள்ள வகுப்பு வேற்றுமைகள் கூர்மையாக இருப்பதாலும், முன்னர் விளக்கியதைப் போல், அக்கட்சியின் ஆதரவு முரண்பாடு உடையதாகவும், நிறுவ முடியாததாகவும் மாறி விடுகிறது. கிரீமிலேயர் கருதுகோளுக்கு ஆதரவான தனது முதன்மை நியாயத்தை அக்கட்சி இழந்து விடுகிறது.

அறிக்கையின் முதல் பத்தியில் இது போன்ற இடஒதுக்கீட்டை, “தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கல்வியையும், வேலைவாய்ப்புகளையும் அடைவதற்கான வாய்ப்புகளை வழங்கும் ஒரு வரம்புடைய நடவடிக்கை எனவும், அடிப்படை நிலச்சீர்திருத்தங்களோடு, சமத்துவமின்மையையும், சுரண்டலையும் உற்பத்தி செய்கிற சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றங்களையும் செய்யும் எந்த விடுதலையும் இருக்க முடியாது'' என சி.பி.எம். கட்சி விளக்குகிறது.

சமத்துவமின்மையையும் சுரண்டலையும் உற்பத்தி செய்யும் சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றங்களையும், அடிப்படை நிலச் சீர்த்திருத்தங்களையும் செய்யாமல் எந்த விடுதலையும் இருக்க முடியாது என்றே பிற்படுத்தப்பட்டவர்களாகிய நாங்களும் நம்புகிறோம். பிற்படுத்தப்பட்டவர்களைப் பிடித்துள்ள அனைத்து நோய்களையும் தீர்க்கின்ற சர்வரோக நிவாரணியாக இடஒதுக்கீட்டை நம்புகிற ஒன்றுமறியாதவர்களின் உலகத்தில் நாங்களில்லை. இடஒதுக்கீட்டை வறுமை ஒழிப்புத் திட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. மண்டல் குழு தலைவரான பி.பி. மண்டல், தனது மண்டல் குழு பரிந்துரைகளில் நிலச்சீர்திருத்தத்தையும் ஒன்றாகச் சேர்க்க மறக்கவில்லை. எனவே சி.பி.எம். வலியுறுத்துவதை ஏற்கனவே நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் அசைவை எளிதாக்கும் ஒரு மசகு எண்ணெய்யாகவும், பார்ப்பனிய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பில் சூத்திரனின் உரிமைகளையும், சமத்துவத்தையும் பகிரங்கமாக அறிவிக்கிற ஒரு சட்டமாகவும், நியாயமான ஜனநாயகத்தை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை எளிதாக்குகிற ஒரு கருவியாகவும், அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும், முக்கியமான பொறுப்புகளிலும் சில குறிப்பிட்ட சாதிக் குழுக்களின் தனியாதிக்கத்தை உடைத்து, சமூகம் முன்னேறுவதை எளிதானதாக ஆக்குகிற ஒரு நடவடிக்கையாகவும்; அவமரியாதைகளின், கேவலப்படுத்துதலின், அநியாயங்களின், அபகரிப்பின் நூற்றாண்டுகளுக்காகப் பழிவாங்கும் எங்கள் தாகத்தை தணிக்க நாங்கள் தேடுகிற ஒரு ‘ஆல்கஹால்' அல்லாத பானமாகவும்தான் நாங்கள் இடஒதுக்கீட்டைப் பார்க்கிறோம்.

சமூகத்தை மாற்றும் ஒரு புரட்சிகர நடவடிக்கையின் மாற்றாக நாங்கள் இடஒதுக்கீட்டைப் பார்க்கவில்லை. ஆனால் அதற்கான வழியைச் சமைப்பதில் உதவும் ஒரு முறையாக இடஒதுக்கீட்டை நாங்கள் நிச்சயமாகப் பார்க்கிறோம். முதலாளித்துவ உற்பத்தி உறவு மற்றும் பொருளாதார அமைப்பின் பார்ப்பனிய மேல் கட்டுமானத்துக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கருவியாகவும் நாங்கள் இடஒதுக்கீட்டைக் காண்கிறோம். இடஒதுக்கீடு தற்போதைய நிலையை வலுவாகத் தொந்தரவு செய்கிறது. அதனால் மூர்க்கமாகவும் எதிர்க்கப்படுகிறது.

சமூக நீதி சக்திகளின் வேலைத் திட்டத்தில் நிலச்சீர்திருத்தம் குறித்த கேள்வி பெருமளவுக்கு இல்லை என்பது உண்மைதான். பொருளாதார நீதிக்கான சக்திகள் இதுவரை சாதியையும், பிற முக்கிய சமூகப் பிரச்சனைகளையும் புறக்கணிப்பதைப் போலவே சமூக நீதி சக்திகளும் இதுவரை நிலச்சீர்திருத்தங்களையும், பிற பொருளாதாரப் பிரச்சனைகளையும் புறக்கணித்து விட்டன. தொழிலாளர் - சமூகப் பிரச்சனைகளை சமூகநீதி சக்திகளும்; பொருளாதாரப் பிரச்சனைகளைப் பொருளாதார நீதி சக்திகளும் தனித்தனியே கவனம் செலுத்துகிற பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஒன்றாகவே இந்திய அரசியல் இருந்து வந்திருக்கிறது. மனித சமூகத்தின் முன்னேற்றம் என்பது, உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான வேறுபாட்டுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்தது என்பதைப் போல, இந்திய அரசியல் முன்னேற்றம் என்பது மேற்கண்ட பிரிவினருக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்ததாகும்.

தமிழில் : ம. மதிவண்ணன்
அடுத்த இதழிலும்
Pin It