டாக்டர் அம்பேத்கர், ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டது குறித்து 1947ஆம் ஆண்டு சூன் மாதம் ‘நேஷனல் ஸ்டாண்டர்டு’ ஏடு ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகப் பதவியேற்க டாக்டர் அம்பேத்கர் புது தில்லிக்குப் புறப்பட்டுவிட்டார் என்றும், அவருக்கு வெளியுறவுத் துறையோ, உள்துறையோ வழங்கப்படலாம் என்றும் அது குறிப்பிட்டிருந்தது. டாக்டர் அம்பேத்கர் தனக்கு திட்டத்துறை வழங்கும்படி கேட்டதாகவும், ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு திட்டத்துறை அவரிடம் ஒப்படைக்கப்படும் என்ற உறுதிமொழியோடு அவருக்கு சட்டத்துறை வழங்கப்பட்டதாகவும் அதே ஏடு பின்னர் செய்தி வெளியிட்டது. நேரு தான் அளித்த உறுதிமொழியை காப்பாற்றாததே பின்னர் 1951இல் அமைச்சரவையிலிருந்து அம்பேத்கர் விலகுவதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் சட்டத்தை வடிவமைத்த ஒருவருக்கு, திட்டத்துறை அத்தனை முக்கியமாக இருந்தது ஏன்? இன்று வரை திட்டக்குழுவின் தலைவர் பொறுப்பு ஏன் பிரதமர் வசமே இருக்கிறது? இந்தியாவில் அறிவில் சிறந்த மனிதர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ, திட்டக்குழுவிற்குள் ஏன் கொண்டு வரப்படுகிறார்கள்? திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் தற்போதைய தலைவருமான டாக்டர் மன்மோகன்சிங், இன்றும் அதன் தலைவராக நீடிக்கிறார். இருப்பினும், பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் ஏன் அலட்சியப்படுத்தப்பட்டும் விடுபட்டும் போகிறார்கள்?

இந்தியா அய்ந்தாண்டு வளர்ச்சித் திட்ட முன்மாதிரியை தேர்ந்தெடுத்தது. ஆனால் அதை வழி
நடத்தக்கூடிய கோட்பாடு என்பது 1950களில் இருந்த சோசலிச முன்மாதிரியிலிருந்து இன்று கவர்ச்சிகரமான, உலகமயமாக்கலை நோக்கிய முன்மாதிரிக்கு கடலளவு மாற்றம் கண்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டமே திட்டக்குழுவின் வரையறைகளை நிர்ணயிக்கிறது. அதில் அரசியல் சட்டம் சில அடிப்படை உரிமைகளுக்கு உறுதி அளித்திருப்பதையும், அரசின் கொள்கைகளை வடிவமைக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருப்பதையும் குறிப்பிடுகிறது.

குறிப்பாக “தன்னால் இயன்ற அளவிற்கு சிறப்பாக மக்களின் நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் அதனை மேம்படுத்த அரசு பாடுபடும். சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் நீதி நிலவக் கூடிய ஒரு சமூக நிலையை அது உறுதிப்படுத்தும்.” மற்றவற்றை விட குறிப்பாக,

(அ) குடிமக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் அடிப்படையான வாழ்வியல் தேவைகள் கிடைக்க வகை செய்யப்படும்;

(ஆ) பொது நலனைப் பேணும் வகையில் சமூகத்தின் பொருள் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும்;

(இ) நாட்டின் பொருளாதார அமைப்பின் செயல்பாடு என்பது, நாட்டின் உற்பத்தியையும் வளத்தையும் பொது நலனுக்கு எதிராக ஓரிடத்தில் குவிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

எட்டாவது அய்ந்தாண்டுக் குழு காலகட்டத்தில், பட்டியல் சாதியினரின் வளர்ச்சி குறித்த செயல்பாட்டுக் குழுவின் 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத அறிக்கை, 197980 வரையிலான 30 ஆண்டுகளில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை ரூபாய் 433.24 கோடி என்கிறது.

இது, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் ஒன்றும் பெறாத 0.476 சதவிகிதமே ஆகும். அதைப் போல, ஏழாவது திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான ரூபாய் 2,18,729 கோடியில் வெறும் 3,567 கோடி ரூபாயே பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனிற்காக செலவிடப்பட்டுள்ளது. இது, மொத்த செலவினத்தில் வெறும் 1.63 சதவிகிதம் மட்டுமே. எட்டு மற்றும் ஒன்பதாவது திட்டத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகையானது, முறையே ரூ.7,266 கோடி மற்றும் ரூ.16,999 கோடியாகும். நடைமுறையில் இது மிக மிகக் குறைந்த அளவானதே. நாடு விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரை, நாட்டின் திட்ட நடைமுறை என்பது, மொத்த திட்ட ஒதுக்கீட்டில், ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக 2 சதவிகிதத்திற்கு மேல் ஒதுக்கப்படவில்லை. டாக்டர் அம்பேத்கர் திட்டத் துறையை கேட்டதும், அது அவருக்கு கிடைக்காமல் போனதும் வியப்பிற்குரியது அல்ல.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 22.5 சதவிகித நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள், நிதி திட்டமிடுதலின் போது கேட்கப்படுவதேயில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சரிடம் நடையாய் நடப்பார்கள். அவர்கள் சொல்வதை அவர் அக்கறையின்றி கேட்பார். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான வள ஒதுக்கீடு என்பது, இயல்பாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ‘கெஞ்சும்’ நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கீட்டில் ஒரு பைசா கூட அதிகரிக்க வைக்க இயலாது.

பதினோராவது திட்டக்குழுவின் துணைத் தலைவர் அண்மையில் அழைத்திருந்த கூட்டம் நடத்தப்பட்ட விதத்தில், நிதி அமைச்சகத்தின் பொதுவான பார்வை எப்படி இருக்கிறது என்பதை அறியலாம். திட்டம் குறித்த கருத்துகளை அறிய பட்டியல் சாதி மற்றும் பழங்குடியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை குழு அழைத்திருந்தது. ஆனால் துணைத் தலைவர், வந்தவர்களை ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், வேறொரு கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது என்பதாகும். பின் ஏன் அதே நேரத்தில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டும்? அவர்களை அவமானப்படுத்தவா?

இதே முறையில்தான் இத்தனை ஆண்டு காலமாக திட்ட நடைமுறையின்போது, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியைச் சேர்ந்த மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். ஏன் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்? ஏன் கட்சி அடிப்படையில் அழைக்கப்படவில்லை? பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் நலன் குறித்த அக்கறை, நாட்டின் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் உரித்தானது இல்லையா?

உண்மையில் மிகக் குறைந்த கால அளவே நீடித்த அய்க்கிய முன்னணி அரசுதான், பழங்குடியினர் அதிகம் வாழும் வடகிழக்கு மாநிலங்களுக்கு என ஒரு துணைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அங்கீகரித்தது.

1996 இல் வட கிழக்கு மாநிலங்களுக்கான துணைத் திட்டத்தை அது உருவாக்கியது. பின்னர் இதுவே வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கென்றே ஒரு தனி அமைச்சகம் உருவாகும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது. அத்தகைய மாற்றங்கள் திட்ட நடைமுறையில் தற்போது மிகவும் அரிதாகிவிட்டன. திட்ட நடைமுறையில், உலகமயமாக்கல் மற்றும் நவீன தாராளமயமாக்கல் சக்திகளின் தாக்கம் அதிகமாகவும் ஆழமாகவும் வேர் பிடிக்கும் சூழலில், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சித் தேவைகள் கவனம் பெறுவதில்லை. இந்நிலை தொடருமாயின், நாடு ஒரு மிகப்பெரிய சிக்கலில் சிக்கும் நாள் தொலைவில் இல்லை.

சமூக நீதி, அதிகாரப்பரவலாக்கல் மற்றும் பழங்குடியினர் நலன்கள், ஆகியவற்றிற்கு என தனித் துறைகள் உருவாக்கப்பட்டது என்பது, தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் எந்த வகையிலும் உதவவில்லை. சமூகம் எவ்வாறு அம்மக்களை நடத்துகிறதோ, அதே அளவிலேயே இத்துறைகளும் நடத்தப்படுகின்றன. மத்தியில் இந்தப் பிரிவுகளுக்கான திட்ட நடைமுறை மிகவும் பின்தங்கியிருப்பது என்பது வியப்பிற்குரியது. ஏனெனில் பல மாநிலங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்ட ஒதுக்கீடு அதிகமாக உள்ளது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான செயல்பாடுகளை உள்துறை அமைச்சகம் நேரடியாக கவனித்து வந்த போது, இதைவிட அதிக கவனம் பெற்றன.

பட்டியல் சாதியனருக்கான சிறப்புக் கூறு திட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் ஆகிய இரண்டுமே உள்துறை அமைச்சகம் முன்னெடுத்த புது அமைச்சகம் இதில் எதையும் சேர்த்துவிடவில்லை. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப மொத்த ஒதுக்கீட்டில் 22.56 சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்த போதும், தங்களின் நிதித்திட்டங்களைப் பிரிக்க இயலாது என்ற போலியான காரணங்களைக்கூறி, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்காக சிறப்புத் திட்டங்கள் உருவாக்குவதை, மத்திய அமைச்சகங்கள் எப்போதும் திசை திருப்பியே வந்திருக்கின்றன.

உண்மையில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இழந்து விட்டனர். சிறப்பு கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டம் இவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியவர் யாரோ, அவரேதான் இன்று பிரதமராகவும், திட்டக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார். ஆனால் தற்போதைய தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் செயல்திட்டங்களின் சூழலில், இந்த மக்களின் நலன்கள் மீது அவர் ஆர்வம் இழந்துவிட்டவராகவே காணப்படுகிறார்.

அப்படி அவர்கள் விடுபட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழி முறை, சமூக நீதி மற்றும் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் பழங்குடியினர் துறைகளை நேரடியாக பிரதமருக்கு கீழ் கொண்டு வருவதாகும். அணுசக்தி துறையை பிரதமரே கவனித்துக் கொள்கிறார். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் நலன்கள் அணுசக்திக்கு ஈடாக வெடித்துக் கிளம்பக் கூடிய ஒன்றாகும். அதனால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் தலைவருடைய நேரடி கவனத்தைப்பெற வேண்டிய ஒன்றாகும். திட்ட நடைமுறை ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை விட்டுவிட்டுச் செல்லும் அதே வேளையில், உலகமயமாக்கல் அடிப்படை வளங்கள் அனைத்தையும் மிச்சம் மீதியின்றி தின்று தீர்த்து விடும். இதை நாம் உணர வேண்டிய தருணம் வந்துவிட்டது.

கட்டுரையாளர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர். நன்றி: ‘தி இந்து’

தமிழில்: பூங்குழலி
Pin It