‘தலித் முரசு' ஆகஸ்ட் '07 இதழில், ‘தலித் தலைவர்களுக்கு...' என்று தலைப்பிட்டு குண்டாயிருப்பிலிருந்து ஒரு மனம் திறந்த மடலை வெளியிட்டிருந்தோம். பட்டியல் சாதியைச் சார்ந்த ஒரு பிரிவினரை அதே பட்டியல் சாதியைச் சார்ந்தவர்களே வன்கொடுமைக்கு ஆளாக்கிய அந்தப் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து -தோழர்கள் மீனா மயிலும், மா. பொன்னுச்சாமியும் எழுதிய கட்டுரை அது. 2003 இல் இதே போன்றதொரு கொடுமை விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூரில் நடைபெற்று, அதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். இத்தகைய உட்சாதி வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெறக் கூடாது என்ற அடிப்படையில் ‘தலித் முரசு' அப்போது முதல் அம்பேத்கரை மேற்கோள் காட்டி, பல கட்டுரைகளை வெளியிட்டு வந்துள்ளது.

சாதியால் கடும் பாதிப்புகளை சந்திக்கும் தலித்துகள், தங்களுக்கிடையே சாதி பாகுபாடு பார்ப்பது பெரும் குற்றம். இக்குற்றத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்கிறோம். இதே ரீதியில் நடைபெற்று வரும் பல்வேறு கொடுமைகளை சுட்டிக்காட்டி, இத்தகைய அவலங்களைத் தடுத்து நிறுத்த தலித் தலைவர்கள் முன்வர வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் மேற்குறிப்பிட்ட மடலும் வெளியிடப்பட்டது.

நாம் முன்வைத்த நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல தலித் தலைவர்கள் முன்வரவில்லை. மாறாக, விடுதலைச் சிறுத்தைகளின் அதிகாரப்பூர்வ இதழான ‘நமது தமிழ் மண்' (செப்டம்பர் 07) "சாதி இந்துக்களின் எடுபிடிகளுக்கு...'' என்றொரு தலைப்பில், மூன்றாம் தர எழுத்தாளர்களை வைத்து ஆறு பக்கங்களில் ‘தலித் முரசு' மீது அவதூறுகளை சுமத்தியிருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு அவதூறுச் சொல்லும் விடுதலைச் சிறுத்தைகளின் நேர்மையின்மையையும், தரம் தாழ்ந்த போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உட்சாதிப் பாகுபாடுகளைக் களைவதற்கான தங்களின் செயல்திட்டம் என்ன? இத்தகைய வன்கொடுமைகளை எப்படி தடுக்கப் போகின்றீர்கள்? என்ற கேள்விகளுக்கு அவர்களிடம் விடை இல்லை. மாறாக, பிரச்சினையை முற்றாக திசை திருப்பி, தீர்வைக் கோரும் எம்மீதே குற்றப்பத்திரிகை வாசிப்பது -ஒரு மக்கள் இயக்கத்துக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

பட்டியல் சாதியினர் சொந்த சகோதரர்கள் மீதே வன்கொடுமைகளை இழைக்கிறார்கள் என்பதால்தான் அதைக் கண்டறிந்து, அதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நாம் பதிவு செய்கிறோம். ஆனால் பத்திரிகையில் பதிவு செய்வதால்தான் இத்தகைய வன்கொடுமைகள் தொடர்வதாகவும், வெளிச்சத்துக்கு வருவதாகவும் கூறுவது அறிவின்மையின் உச்சம்.

‘தாய் மண்' இதழ் பெரியார் மீது அவதூறுகளை வீசியபோது, நாம் அதை ஆதாரத்தோடு தவிடுபொடியாக்கினோம். அதன் விளைவாக இன்று, பெரியாரை தீவிரமாகப் பிரச்சாரம் செய்பவர்களாக விடுதலைச் சிறுத்தைகள் மாறியிருக்கின்றனர். பார்ப்பனியத்திற்கு எதிராக தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று நாம் தொடக்க காலம் முதல் வலியுறுத்துகிறோம்.

ஆனால், அப்போது நம்மை ‘Non - தலித் முரசு' என்று ஏளனம் பேசியவர்கள், இன்றைக்கு ‘தலித் அல்லாதோரை' தங்கள் இயக்கத்தில் இணையும்படி அறைகூவல் விடுக்கிறார்கள்! (அதையும் கடந்து அந்த சாதிகளின் எதிர்மறை அடையாளங்களைக்கூட தழுவிக் கொள்ளும் கொடுமையை மக்கள் வேதனையுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்).

எதற்காக இதைச் சொல்லுகிறோம் எனில், தலித் கருத்தியலை (சாதி ஒழிப்புக் கருத்தியல்) வளர்த்தெடுப்பதற்கு பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கைகளையே உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் ‘தலித் முரசு'- கடந்த 11 ஆண்டுகளில் கிஞ்சித்தும் தடம் புரண்டதில்லை. நாம் முன்வைக்கும் கொள்கைதான் எம் பலம். அவதூறுகள் எம்மை பலவீனமாக்கியதில்லை; ஏனெனில், அவைதான் எமக்கு எரு. கொள்கை சார்ந்த நம் விமர்சனங்கள் இன்றைக்கு கசப்பாக இருந்தாலும், தொலைநோக்கில் அது உங்களுக்கு நன்மைகளைத்தான் விளைவிக்கும்.

விடுதலைச் சிறுத்தைகள் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தோடு போட்டிப் போடுவது நமது நோக்கமல்ல. ஒரு மக்கள் இயக்கத்தின் களம் வேறு; ஒரு பத்திரிக்கையின் தளம் வேறு. எனினும், இருவரின் லட்சியமும் சமூக விடுதலையே! இதில் யாரொருவர் தடம் புரண்டாலும் பாதிப்புக் குள்ளாகப் போவது தலித் மக்கள் தான்.

விடுதலைச் சிறுத்தைகளின் சமூக வேர்களை அறுத்தெடுத்து, அதை ஒரு சராசரி அரசியல் கட்சியாக மாற்றும் தீவிர முயற்சியில் சுயநலம் கொண்ட அறிவுஜீவிக் கூட்டம் ஈடுபட்டுள்ளது. அந்த சராசரி அரசியலின் கவர்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகளும் மதிமயங்கிப் போயிருப்பதை சுட்டிக் காட்டுவதில், எமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இத்தகைய போக்குகளை விமர்சிப்பது அதன் எதிர்கால ஆபத்தை கணக்கில் கொண்டுதானே தவிர, அதற்கு எந்த உள் நோக்கமும் இல்லை.

ஒரு தலித் இதழ், ஜனநாயகத்தின் உண்மையான தூணாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில், நாம் நேர்மையான அணுகு முறையை கடைப்பிடிக்கிறோம். அது உங்களுக்கு கடுமையாகத் தெரிந்தால், தவறு எங்களுடையதல்ல. தலித் கருத்தியலுக்கு எதிராக இருப்பவர்கள் எந்த இயக்கத்தினராக இருந்தாலும் அவர்களை நாம் கண்டிக்கிறோம். தலித் இயக்கமாக இருப்பதால், நாம் கூடுதல் அக்கறையோடு சுட்டிக் காட்டுகிறோம். எங்களின் இந்த ஜனநாயகக் கடமையை யார் தடுக்க முடியும்?

- ஆசிரியர்
Pin It