நண்பர்களே!

இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கும்படி மிகுந்த அன்போடு என்னைக் கேட்டுக் கொண்ட ‘ஜாத் பட்தோடக் மண்டலின்' உறுப்பினர்களுக்காக, உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது குறித்து அவர்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். லாகூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பம்பாயில் இருந்து ஒரு மனிதனை இறக்குமதி செய்தது ஏன் என்ற கேள்விக்கு, ‘மண்டல்' ஆளாக வேண்டி இருக்கும். இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்க என்னைவிடத் தகுதி வாய்ந்த எவரேனும் ஒருவரை, மண்டலால் மிக எளிதாகக் கண்டுபிடித்திருக்க முடியும் என நான் நம்புகிறேன்.

நான் இந்துக்களை விமர்சித்து இருக்கிறேன். இந்துக்களால் வணங்கப்படுகிற ‘மகாத்மா'வின் மேலாதிக்கத்தை நான் மறுத்திருக்கிறேன். இந்துக்கள் என்னை வெறுக்கிறார்கள்; அவர்களுடைய தோட்டத்தில் உள்ள நச்சுப் பாம்பாக என்னைப் பார்க்கிறார்கள். அப்படி இருக்க, கவுரவம்மிக்க இந்தப் பொறுப்பை ஏற்கும்படி என்னை அழைத்தது ஏன் என்று, அரசியல் அறிவுள்ள இந்துக்கள் கேட்கப் போகும் கேள்விக்கு, மண்டல்காரர்கள் விளக்கம் தந்தாக வேண்டி வரும்.

என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது மிகவும் துணிச்சலான ஒரு செயலே. இது, தங்களை அவமதித்தது போலாகும் என்று சில அரசியல் இந்துக்கள் நினைத்தால் கூட வியப்பில்லை. வெறும் மத அபிமானம் மட்டுமே உள்ள சாதாரண இந்துக்களுக்கும்கூட, இது உறுத்தலாகவே இருக்கும். தலை வன் ஒருவனைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சாஸ்திர விதிகளை மீறியது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் மண்டல் அளிக்க வேண்டி இருக்கும்.

ஓர் இந்து யாரைத் தலைவனாக ஏற்றுக் கொள்வான்?

சாஸ்திரங்களின்படி, மற்ற மூன்று வர்ணங்களுக்கும் பார்ப்பனரே ‘குரு' என்ற நிலையில் அமர்த்தப்பட்டுள்ளார். "வர்ணானாம் ப்ராஹ்மனோ குரு'' என்பது சாஸ்திர விதி. எனவே, ஓர் இந்து யாரிடம் கல்வி கற்க வேண்டும், யாரிடம் கல்வி கற்கக் கூடாது என்பதை மண்டலும் அறிந்தே உள்ளது. ஓர் இந்துவானவன், அவர் அதிக அறிவுடையவர் என்பதற்காக மட்டும் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரங்கள் விதித்துள்ளன.

இது, மகாராட்டிரத்தைச் சேர்ந்த துறவி ராமதாசர் என்பவரால் மிகத் தெளிவாக்கப்படுகிறது. அவர் சிவாஜியை இந்து ராஜ்யம் அமைக்குமாறு தூண்டியவர் என்று கூறப்படுகிறது. தன் ‘தச போதனை' யில் (மராத்தி மொழியில் உள்ள சமூக, அரசியல் மதக் கட்டளைகள் இவை) இந்துக்களை நோக்கி ராமதாசர், ‘அந்த்யாஜா' (தீண்டத்தகாதவர்) ஒருவேளை கல்வி அறிவு பெற்றிருக்கிறார் என்பதற்காக மட்டுமே அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வியை கேட்கிறார். அவ்வாறு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று விடையும் அளித்துள்ளார். இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னவிதமாக பதில்கொடுப்பது என்ற பிரச்சனையை மண்டலுக்கே விட்டுவிடுகிறேன். தலைமைப் பொறுப்புக்கு உரிய ஒருவரைத் தேடி பம்பாய்வரை வந்ததற்கும், இந்துக்களுக்கு அறவே பிடிக்காத ஒரு மனிதனை அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்ததற்கும் – ‘அந்த்யாஜா' (தீண்டத்தகாதவர்) ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரைப் பிற ‘சவர்ணர்'கள் (சாதி இந்துக்கள்) அடங்கிய கூட்டத்தினரிடையே பேச அனுமதிக்கும் ‘இழி செயலை' செய்யத் தூண்டியதற்கும் - என்ன காரணமோ, மண்டல்காரர்களுக்கே வெளிச்சம். என்னைப் பொறுத்தவரை, உங்களுடைய அழைப்பை என் சொந்த விருப்பத்தை மீறியே ஏற்றுக் கொண்டுள்ளேன்.

என்னைச் சார்ந்த என் சமூக தீண்டத்தகாதவர்களின் விருப்பத்துக்கு எதிராகத் தான் - உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதை முதற்கண் தெளிவாக்கிட விரும்புகிறேன்.

நான் இந்துக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்!

இந்துக்கள் என்னை வெறுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்களுக்கு விருப்பமான மனிதனாக இல்லை என்பதையும் அறிவேன். இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் அவர்களிடம் இருந்து விலகி இருக்கிறேன். அவர்களை வேதனைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய இடத்தில் இருந்த படியே என் எண்ணங்களை நான் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். அந்த செயலே போதுமான அளவுக்கு, அவர்களுக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தவிர, இந்துக்களுடைய மேடையிலேயே ஏறி அவர்களுடைய செவிக்கு எட்டும் தொலைவில் நான் செய்து கொண்டிருந்ததை, நேருக்கு நேராக செய்யும் குறிப்பான விருப்பமெல்லாம் எனக்கு இல்லை.

நான் தலைமை ஏற்றிருப்பது, நீங்கள் என்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்ததினால் தானே தவிர, என் விருப்பத்தினால் அல்ல. நீங்கள் சமூக சீர்திருத்தத்தை குறிக்கோளாகக் கொண்டவர்கள். உங்களுடைய குறிக்கோள் எப்போதும் எனக்கு ஏற்புடையதே. அந்தக் குறிக்கோளுக்கு உதவுகிற ஒரு வாய்ப்பு கிட்டுகிறபோது, அதுவும் குறிப்பாக அந்தக் குறிக்கோளுக்கு நான் உதவக் கூடும் என்று நீங்கள் எண்ணுகிறபோது, அந்த வாய்ப்பை மறுக்கக் கூடாது என்று நான் எண்ணினேன். நான் இன்றைக்குக் கூற இருப்பது, நீங்கள் தீர்வு காண முயற்சி செய்யும் பிரச்சனையைத் தீர்க்க - எந்த வழியிலாவது உதவக்கூடுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பிரச்சனையைப் பற்றி என் பார்வை என்ன என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

2

இந்தியாவில் சமுதாயச் சீர்திருத்தம் என்பது, சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையைப் போலவே கரடுமுரடானது, துன்பம் நிறைந்தது. எளிமையானது அல்ல.

இந்தியாவில் சமுதாயச் சீர்திருத்தத்துக்கு ஆதரவாளர்கள் சிலர். விமர்சகர்கள் பலர். விமர்சகர்கள் இரு வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அரசியல் சீர்திருத்தவாதிகளைக் கொண்டது ஒரு பிரிவு. ‘சோசலிஸ்டு'கள் (சமநிலை வாதி) மறு பிரிவு. ‘கேடுகெட்ட சமூகப் பழக்க வழக்கங்களால் கெட்டித் தட்டிப்போன இந்து சமுதாயமானது, மோபாடு காண்பதற்கான சூழலில் இல்லை. இந்தக் கேடுகெட்ட தன்மைகளை அழித் தொழிக்க, நீண்ட நெடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமுதாய மோபாடு இல்லாமல் பிற துறைகளில் நிரந்தரமான முன்னேற்றம் எதையும் சாதித்து விட முடியாது' என்பதை ஒரு காலகட்டத்தில் எல்லாரும் உணர்ந்தே இருந்தார்கள். இந்தக் காரணத்தை ஏற்றுக் கொண்டதால்தான் ‘தேசிய காங்கிரஸ்' தனியாகத் தோன்றாமல் ‘சோசியல் கான்பெரன்சோடு' (சமூக மாநாடு) சேர்ந்தே தோன்றியது.

சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா?

அரசியல் இயக்கங்களில் இருந்த குறைபாடுகளை வரையறுக்க காங்கிரஸ் முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், ‘சோசியல் கான்பெரன்ஸ்' இந்து சமூகத்தின் சமுதாய இயக்கங்களில் இருந்த குறைபாடுகளை நீக்குவதில் ஈடுபட்டிருந்தது. சிறிது காலத்துக்கு ‘காங்கிரசும்', ‘கான்பெரன்சும்' - பொது நடவடிக்கைக்கான இரண்டு அங்கங்களாக செயல்பட்டன. தங்கள் ஆண்டுக் கூட்டங்களைக் கூட, ஒரே பந்தலில் நடத்திக் கொண்டன. ஆனால், விரைவில் இந்த இரு பிரிவுகளும் இரு வேறு கட்சிகளாக உருவெடுத்தன. அரசியல் சீர்திருத்தக் கட்சி ஒன்று, சமூக சீர்திருத்தக் கட்சி மற்றொன்று.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றின. அரசியல் சீர்திருத்தப் பிரிவு, தேசிய காங்கிரசை ஆதரித்தது. சமுதாய சீர்திருத்தப் பிரிவு ‘சோசியல் கான்பெரன்சை' ஆதரித்தது. இவ்வாறாக, இந்த இரு பிரிவுகளும் இரு பகை முகாம்களாக மாறின. அவைகளுக்கு இடையே இருந்த பிரச்சனை - சமுதாய சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம் இவற்றில் எதற்குப் பிறகு எது நடக்க வேண்டும் என்பதுதான். பத்தாண்டுகள் வரை இந்த இரு வேறு சக்திகளும் சம நிலையில் இருந்தன. ஆகவே யாருக்கும் வெற்றி கிடைக்காமல் போர் நடந்து கொண்டே இருந்தது. எப்படி இருப்பினும், ‘சோசியல் கான்பெரன்'சின் எதிர்காலம் வெகு வேகமாக மங்கி வந்தது தெளிவாகத் தெரிந்தது.

‘சோசியல் கான்பெரன்சின்' கூட்டத் தொடர்களுக்குத் தலைமை தாங்கிய சான்றோர்கள், ‘படித்த இந்துக்களில் பெரும்பான்மையோர் - அரசியல் முன்னேற்றத்துக்கே ஆதரவாக இருக்கிறார்கள்; சமுதாய சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துவதில்லை' என்று குறைபட்டுக் கொண்டார்கள். காங்கிரசுக்கான ஆதரவு தொடர்ந்து பெருகி வருகிறது. ‘சோசியல் கான்பெரன்'சுக்கு மக்களின் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது என்றும் அவர்கள் பொருமினர். படித்த கூட்டத்தின் அக்கறையின்மையும் வெகுமக்களின் ஆதரவின்மையும் ‘சோசியல் கான்பெரன்'சாரை காங்கிரசுக்கு எதிரி முகாமாக உருவாக்கியது. அதற்கு முன்பெல்லாம் ‘சோசியல் கான்பெரன்'சின் கூட்டம் நடக்க, காங்கிரஸ் தன் பந்தலை பயன்படுத்த பெயரளவிலாவது அனுமதித்தது. காலஞ்சென்ற திலகரின் தலைமைக் காலத்திலிருந்து அதைக்கூட செய்யத் தயாராக இல்லை.

‘சோசியல் கான்பெரன்ஸ்' தனக்காக தன்னுடைய சொந்த பந்தலைப் போட முயன்றபோது, பந்தலை எரித்துவிடப் போவதாக எதிராளிகளிடம் இருந்து மிரட்டல் ஒன்று கிளம்பியது. அந்த அளவுக்குப் பகைமை உணர்வு உச்ச நிலையில் இருந்தது. இவ்வாறாக, காலப் போக்கில் அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவாக இருந்த கட்சி வென்றது. ‘சோசியல் கன்பெரன்ஸ்' மங்கி மறைந்தது; மறக்கப்பட்டது. 1892 இல் அலகாபாத்தில் காங்கிரசின் எட்டாவது கூட்டத்துக்குத் தலைவர் என்ற முறையில் திரு. பானர்ஜி என்பவர் ஆற்றிய உரை, ‘சோசியல் கான்பெரன்சி'ன் சாவுக்கு வாசிக்கப்பட்ட இரங்கல் அறிக்கை போல் இருந்தது. காங்கிரசின் மனோபாவத்தை வெளிப்படுத்துவதற்கு அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற முறையில், அவருடைய பேச்சின் ஒரு சிறு பகுதியைத் தருகிறேன் :

"நம்முடைய சமுதாய அமைப்பைச் சீர்திருத்தாதவரை, அரசியல் சீர்திருத்தத்துக்கு நாம் அருகதை அற்றவர்கள் என்று கூறுபவர்களை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சமுதாய சீர்திருத்தத்துக்கும் அரசியல் சீர்திருத்தத்துக்கும், எவ்விதத் தொடர்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய விதவைகள் மறுமணமே செய்து கொள்வதில்லை; மற்ற நாடுகளைவிட நம் நாட்டுப் பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடுகிறது; நாம் நம் நண்பர்களை காணச் செல்லும்போது, நம் மனைவியையும் பெண்மக்களையும் நம்முடன் அழைத்துச் செல்வதில்லை; ‘ஆக்ஸ்போர்டு'க்கோ ‘கேம்பிரிட்ஜ்'க்கோ நம் பெண்களை நாம் அனுப்புவதில்லை - இக்காரணங்களால் நாம் அரசியல் சீர்திருத்தத்துக்கு அருகதை அற்றவர்களாகி விடுவோமா என்ன?'' (கைதட்டல்)

அரசியல் சீர்திருத்தத்துக்கான வாதத்தை பானர்ஜி முன்வைத்த வகையில் நான் குறிப்பிட்டுள்ளேன். காங்கிரசுக்கு வெற்றி கிடைத்ததற்காக மகிழ் பவர்கள் பலர். ஆனால், சமுதாய சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துவோர், பானர்ஜியால் முன் வைக்கப்பட்டது போன்ற வாதம் முடிவானதுதானா என்று கேட்கக் கூடும். நியாயத்தின் பக்கம் நிற்கிறவர்களுக்குதான் வெற்றி கிடைத்தது என்பதை அந்த வாதம் நிரூபிக்கின்றதா? சமுதாய சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தத்தின் மீது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, அந்த வாதம் தீர்மானமாக நிரூபிக்கின்றதா? என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பக்கூடும். பிரச்சினையின் மறுபக்கத்தை நான் எடுத்துச் சொன்னால், பிரச்சனையை முழுவதுமாகப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நான் சொல்லப் போகும் உண்மைக்குச் சான்றாக, இன்று தீண்டத்தகாதோர் எப்படி எல்லாம் நடத்தப்படுகின்றனர் என்பதை உங்கள் பார் வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?

1. அன்றைய மராத்திய பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒரு தெருவில் எதிரில் வரும் இந்துவின் மீது தீண்டத்தகாதோரின் நிழல் பட்டால்கூட தீட்டாகிவிடும் என்ற காரணம் காட்டி - தீண்டத்தகாதவர்களை தெருவுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இந்துக்கள் தவறி தீண்டத்தகாதவர்களைத் தொட்டு அவர்கள் தீட்டாகி விடுவதைத் தடுக்க, தீண்டத்தகாதவர் தன் கழுத்திலோ மணிக்கட்டிலோ கறுப்புக் கயிறு ஒன்றை அடையாளமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

2. பேஷ்வாவின் தலைநகரான பூனாவில் தீண்டத்தகாதவர், தன்னுடைய இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, தான் போகும் பாதையில் - தன் காலடித் தடத்தின் புழுதியைப் பின்புறமாகக் கூட்டியபடி சென்றாக வேண்டும் என்ற ஆணை இருந்தது. இல்லாவிட்டால், அதே தெருவில் நடக்கும் இந்து தீட்டாகி விடுவானாம்.

3. பூனாவில் தீண்டத்தகாதவர் எங்கு போனாலும் தன் கழுத்தில் மண்கலயம் ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையும் இருந்தது. அவன் தன் எச்சிலை அந்தக் கலயத்தில் துப்பிக் கொள்ள வேண்டும். ஏன் அப்படி என்றால், தீண்டத்தகாதவரின் எச்சில் தரையில் விழுந்தால் - அதைத் தெரியாமல் மிதித்து விடும் இந்து தீட்டாகி விடுவானாம்!

மிக சமீப காலத்து நிகழ்ச்சிகளைக் கூட பார்ப்போமே:

மத்திய இந்தியாவைச் சேர்ந்த ‘பலாய்' என்கிற தீண்டத்தகாத சமூகத்துக்கு, இந்துக்கள் இழைத்த கொடுமைகள் என் கருத்துக்குச் சான்றாகும். 1928 சனவரி 24 அன்று, ‘டைம்ஸ் ஆப் இந்தியா'வில் இதுபற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள கனாரியா, பிச்சோலி - ஹப்சி, பிச்சோலி மர்தானா முதலிய 15 கிராமங்களில் இருந்த கலோதர்கள், ராஜபுத்திரர்கள், பார்ப்பனர்கள் முதலிய மேல்சாதி இந்துக்கள் - பட்டேல்கள், பட்வாரி உள்ளிட்டோர் - தத்தம் கிராமத்தைச் சேர்ந்த ‘பலாய்' இனத்தாரிடம், ‘பலாய்'கள் அந்த கிராமங்களில் வாழ வேண்டும் என்றால், மேல்சாதி இந்துக்கள் இட்ட சில விதிமுறைகளை ஏற்று நடக்க வேண்டும் என்று அறிவித்தனர். அந்த விதிமுறைகள் என்ன? நீங்கள் எங்களிடையே வாழ விரும்பினால்

1. தங்க சரிகைக் கரை போட்ட உடைகள் அணியக் கூடாது.
2. புதுமையான / வண்ணக் கரைபோட்ட உடைகளை அணியக் கூடாது. இந்து ஒருவன் இறந்து போனால், இறந்து போன இந்துவின் சொந்தக்காரர்களுக்கு - அவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் - இழவுச் செய்தியைப் போய் சொல்ல வேண்டும்.
3. எல்லா இந்து திருமணங்களிலும் ஊர்வலத்தின் போதும் திருமணம் நடக்கும் போதும், பலாய்கள் மேள தாளங்களை இசைக்க வேண்டும்.
4. பலாய்ப் பெண்கள் தங்க, வெள்ளி நகைகளை அணியக் கூடாது. நவீன ஆடைகளையோ, ரவிக்கைகளையோ அணியக் கூடாது.
5. இந்து பெண்களுக்கு பலாய்ப் பெண்கள்தான் பிரசவம் பார்க்க வேண்டும்.
6. எந்தவித கூலியும் கேட்காமல், பலாய் மக்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். ஓர் இந்து மனமுவந்து தருவதை, பேசாமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.
7. இந்த விதிமுறைகளை ஏற்று நடக்க பலாய்கள் சம்மதிக்கா விட்டால், அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்படுவர்.

‘பலாய்'கள் இந்தச் சட்டங்கøள ஏற்க மறுத்தார்கள். உடனே இந்துக்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிராமத்துக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க ‘பலாய்'கள் அனுமதிக்கப்படவில்லை. தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல அனுமதிக்கவில்லை. ஓர் இந்துவினுடைய நிலத்தைக் கடந்து செல்ல ஒரு பலாய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஒரு பலாயினுடைய நிலம், இந்துக்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு நடுவில் இருந்தால், அந்த நிலங்களின் வழியே தன்னுடைய நிலத்துக்கே அவர் செல்ல முடியாது. ‘பலாய்'களின் வயல்களில் உள்ள பயிர்களை, இந்துக்கள் தங்கள் கால்நடைகளை விட்டு அழிக்க விட்டனர். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக, ‘பலாய்'கள் அரசவைக்கு மனுக்கள் அனுப்பினர்.

ஆனால், உரிய நேரத்தில் தக்க நிவாரணம் ஏதும் ‘பலாய்'களுக்குக் கிடைக்கவில்லை. அடக்குமுறைகள் தொடர்ந்ததால் சொந்த மண்ணை விட்டு - வீடு வாசலை விட்டு தங்கள் பெண்டு பிள்ளைகளோடு பிழைப்பு தேடி - தார், தேவாஸ், பக்ளி, போபால், குவாலியர் போன்ற அண்டைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டி வந்தது. புதிய இடங்களில் அவர்களுக்கு என்ன ஆயிற்று என்பது வேறு கதை.

தீண்டத்தகாத பெண்கள் மீது தாக்குதல்

குஜராத்தில் உள்ள கவிதா என்ற இடத்தில், சென்ற ஆண்டு ஒரு நிகழ்ச்சி நடந்தது. ‘அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வந்த ஒரு கிராமப் பொதுப் பள்ளிக்கு, தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது' என்று அந்த கிராமத்து இந்துக்கள், தீண்டத்தகாதவர்களுக்கு ஆணையிட்டனர். இந்துக்களின் விருப்பங்களுக்கு எதிராகத் தங்களின் குடி உரிமையைப் பயன்படுத்த துணிவுகொண்ட ஒரே காரணத்துக்காக, அந்த கிராமத்தின் தீண்டத்தகாத மக்கள் - எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள்! இது எல்லோரும் அறிந்த ஒன்று என்பதால், இதை விளக்கிக் கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் என்ற மாவட்டத்தில், ஜானு என்ற கிராமத்தில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி யையும் சொல்கிறேன். 1935 நவம்பரில் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த சில தீண்டத்தகாத பெண்கள், உலோகக் குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்றனர். தீண்டத்தகாதவர்கள் உலோகக் குடங்களைப் பயன்படுத்துவது, தங்கள் கவுரவத்தையே இழிவுபடுத்தும் செயல் என்று இந்துக்கள் எண்ணி, அந்தப் பெண்களை அவர்களின் ‘அகம்பாவத்துக்காக' முரட்டுத்தனமாகத் தாக்கினார்கள்.

நெய் - இந்துக்களின் கவுரவப் பிரச்சினை!

ஜெய்ப்பூர் சமஸ்தானத்தில் சக்வாராவில் மிக அண்øமயில் நடந்த ஒரு நிகழ்வு பத்திரிகைகளில் வெளிவந்தது. தீர்த்த யாத்திரை சென்று வந்த தீண்டத்தகாதவர் ஒருவர், தன்னைப் போன்ற பிற தீண்டத்தகாதவர்களுக்கு ஒரு மதக் கடமையாக சிறப்பான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். விருந்தில் பரிமாறப்பட்ட பலவித உணவுகளில் நெய்யும் ஒன்று. என்ன நடந்தது தெரியுமா?

அங்கு திரண்டிருந்த தீண்டத்தகாதோர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, நூற்றுக்கணக்கான இந்துக்கள் தடிகளோடு அந்த இடத்துக்கு விரைந்தனர். உணவைக் கொட்டிக் கவிழ்த்தனர். சாப்பிடுவதை விட்டு விட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியவர்களை அடித்து உதைத்தனர். ஆதரவற்ற தீண்டத்தகாதவர்கள் மீது இதுபோன்ற கொலைபாதகச் செயல் நடந்தது ஏன்? அதற்குக் கூறப்பட்ட காரணம் என்னவென்றால், விருந்தளித்தவர் விருந்திலே நெய் சேர்க்கும் அளவுக்குத் ‘திமிர்' பிடித்தவராக இருந்தாராம்! விருந்தாளிகளும் துணிந்து நெய் சாப்பிடும் அளவுக்கு முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்! நெய் பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பரப் பொருள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அது ஒருவரின் சமூக நிலையை உயர்த்திக் காட்டும் பொருள் என்று யாராவது நினைப்பார்களா? சக்வாரா இந்துக்கள் அப்படித்தான் நினைத்தார்கள்.

அதாவது, தீண்டத்தகாதவர்கள் தங்களுக்குரிய உணவாக நெய்யை நினைத்த தன் மூலம் தம்மை அவமதித்துவிட்ட தாகவே சாதி இந்துக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதற்காகவே தீண்டத்தகாதோரை இப்படிப் பழி வாங்கினார்கள். நெய் என்பது இந்துக்களின் கவுரவப் பிரச்சனை. தீண்டத்தகாதவர்கள், நெய் வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்களாக இருந்தாலும் கூட அதைப் பயன்படுத்தக் கூடாது. நெய் அவர்களுக்கு உரியது அல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இது ‘திமிர் பிடித்த' செயலாக இருந்ததனால் இந்துக்களை தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக நிறுத்தியது. இது, 1936 ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்தது.

இந்துக்களுக்கு அருகதை உண்டா?

இதுவரை நடந்த சம்பவங்களைக் கூறினேன். இப்போது சமுதாய சீர்திருத்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த வரை பானர்ஜியைப் போல, அரசியல் மனப்பான்மை கொண்ட இந்துக்களைக் கேட்கிறேன். உங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த தீண்டத் தகாதோர் போன்ற பெரும்பான்மை வகுப்பினரை, பொதுப் பள்ளிக் கூடங்களில் அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்துக்கு அருகதை உடையவர்கள் தானா? அவர்களைப் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூட அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்துக்கு அரு கதை படைத்தவர்கள்தானா? அவர்களை பொதுத் தெருக்களில் சுதந்திரமாக நடமாட விடாத நீங்கள், அரசியல் அதிகாரத்துக்கு அருகதை உடையவர்களா? அவர்கள் விரும்புகின்ற ஆடை அணிகளை அணியக்கூட அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்துக்கு அருகதை படைத்தவர்களா? அவர்கள் விரும்புகிற எந்த உணøவயும் உண்ணக்கூட அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்துக்கு அருகதை உடையவர்கள்தானா? இதுபோன்ற கேள்விக் கணைகளை, என்னால் வரிசையாகத் தொடுக்க முடியும். ஆனால், இது போதுமென நினைக்கிறேன்.

பானர்ஜி அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். சொரணை உள்ள யாருக்கும் இந்தக் கேள்விகளுக்கு ‘ஆம்' என்று பதில் சொல்லத் துணிவுண்டா? எந்த ஒரு நாட்டுக்கும் பிற நாடுகளை ஆதிக்கம் செய்ய உரிமை இல்லை என்ற மில் அவர்களின் கோட்பாட்டை, திரும்பத் திரும்பக் கூறுகிற ஒவ்வொரு காங்கிரஸ் காரரும் - எந்த ஒரு சாதிக்கும் பிற சாதிகளை ஆதிக்கம் செய்ய உரிமை இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

சமுதாய சீர்திருத்தக் கட்சி, பிறகு எப்படித்தான் தோற்றது? இதை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயச் சீர்திருத்தக்காரர்கள் எந்த விதமான சமுதாயச் சீர்திருத்தத்துக்காக கிளர்ச்சி செய்தனர் என்று பார்க்க வேண்டும். சமூக சீர்திருத்தம் என்றால், இந்துக் குடும்பத்தை சீர்திருத்துவதா அல்லது இந்து சமுதாயத்தை மாற்றி அமைப்பதா? இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாகக் கூறப்பட்ட சமுதாயச் சீர்திருத்தம் விதவை மறுமணம், குழந்தை மணம் ஆகியவற்றோடு தொடர்புடையது. இரண்டாவதாகக் கூறப்பட்ட சமுதாயச் சீர்திருத்தம், சாதி அமைப்பை ஒழிப்பது தொடர்பானது.

எது சீர்திருத்தம்?

‘சோசியல் கான்பெரன்ஸ்' - உயர் சாதி இந்துக் குடும்பத்தை சீர்திருத்துவதையே முக்கியமான சீர்திருத்தமாக எண்ணிக் கொண்டு அதில் ஈடுபட்டது. அந்த அணியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு பெற்ற உயர் சாதி இந்துக்களாகவே இருந்தனர். அவர்கள் சாதியை ஒழிக்கப் போராடுவதற்கான அவசியத்தை உணர்ந்திருக்கவில்லை; அல்லது அதற்காகப் போராடுவதற்கான துணிச்சல் பெற்றவர்களாகவும் இல்லை. ஒவ்வொரு மேல்சாதி இந்துக் குடும்பத்திலும் கட்டாய விதவைக் கோலமும், குழந்தையிலேயே திருமணம் செய்யும் கொடுமையும் இருந்தது. தனிப்பட்ட முறையில் அவர்கள் உணர்ந்த இந்தத் தீமைகளை ஒழிப்பது, சாதி ஒழிப்பைவிட முக்கியமானது என அவர்கள் உணர்ந்தது இயல்பே. இந்தச் சமுதாயத்தை சீர்திருத்துவதற்கு ஆதரவாக அவர்கள் இல்லை. அவர்களது போராட்டம் முக்கியமாக குடும்பச் சீர்திருத்தத்தை மய்யமாகக் கொண்டது. சாதி அமைப்பைத் தகர்த்தெறிவது என்ற அர்த்தத்திலான சமுதாய சீர்திருத்தத்துடன் தொடர்பு கொண்டதாக அது இல்லை. சீர்திருத்தவாதிகளுக்கு சாதி ஒழிப்பு என்பது, ஒரு பிரச்சனையாகவே இல்லை. சமுதாய சீர்திருத்தக் கட்சி, தோல்வியைத் தழுவியதற்கு இதுவே காரணம்.

இந்த வாதத்தை முன்வைக்கும் போது - அரசியல் சீர்திருத்தமானது, சமுதாய சீர்திருத்தத்தைவிட முக்கியத்துவம் பெற்று இருக்கிறது என்கிற உண்மையை நான் தெரிந்தே இருக்கிறேன். ஆனால், சமுதாய சீர்திருத்தவாதிகள் ஏன் தோல்வி அடைந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இது உதவுகிறது.

அரசியல் சீர்திருத்தம் முன்னோடி அல்ல

மேலும், அரசியல் சீர்திருத்தக் கட்சி சமுதாய சீர்திருத்தக் கட்சியின் மேல் கொண்ட வெற்றி முழுமை பெறாத ஒன்றாகும். அடுத்து, குடும்ப சீர்திருத்தமே சமுதாய சீர்திருத்தம் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் மட்டுமே, சமுதாய சீர்திருத்தம் அரசியல் சீர்திருத்தத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாகும். அரசியல் சீர்திருத்தம் சமூக சீர்திருத்தத்துக்கு முன்னோடியாக இருக்க முடியாது. சமுதாயத்தை மாற்றி அமைத்தல் என்ற அர்த்தத்தில் இருந்து பார்க்கும்போது, இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இதை யாரும் மறுக்க முடியுமா?

அரசியல் சாசனத்தை இயற்றுபவர்கள், சமூக சக்திகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த உண்மையை காரல் மார்க்சின் நண்பரும் தோழருமான பெர்டினன்ட் லசால் என்பவ÷ ஒப்புக் கொண்டுள்ளார். 1862 இல் பிருசிய மக்கள் மத்தியில் லசால் பேசினார்:

"அரசியல் சாசனம் பற்றிய பிரச்சினை, முதலாவதாக உரிமை பற்றிய பிரச்சனை அல்ல. மாறாக வலிமை பற்றிய பிரச்சினையே ஆகும். ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் நிலைத்த தன்மை அந்த நாட்டில் இருக்கின்ற சமூக சக்திகளின் இருப்பைச் சார்ந்தே நிற்கும். எனவே, சமூகத்தில் நிலவுகிற சக்திகளின் நிலைமையை உள்ளவாறு பிரதிபலிக்கிற அரசியல் சாசனமே மதிப்புடையதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க முடியும்.''

ஆனால், இதைத் தெரிந்து கொள்ள பிருசியாவுக்குப் போக வேண்டியதே இல்லை. நம் நாட்டிலேயே அதற்கான சாட்சியம் உள்ளது. பல்வேறு வகுப்புகளுக்கும் இனங்களுக்கும் அரசியல் அதிகாரத்தில் ஒதுக்கப்பட்ட விகிதாச்சாரத்தைப் பொறுத்து, வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் என்ன? என்னுடைய கருத்தின்படி அரசியல் சாசனமானது, சமூக அமைப்பை கணக்கில் கொள்ள வேண்டும் என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது. சமுதாயப் பிரச்சனை, அரசியல் பிரச்சனையை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்று கூறி மறுத்த அரசியல் வாதிகள், அரசியல் சாசனத்தை வடிவமைக்கும்போது சமுதாயப் பிரச்சனையைக் கணக்கில் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள்.

சமுதாய சீர்திருத்தத்தை அலட்சியப் படுத்தியதன் விளைவே, வகுப்புவாரி இட ஒதுக்கீடு எனலாம். சமுதாய சீர்திருத்தக் கட்சி தோற்கடிக்கப்பட்ட போதும்கூட, சமுதாய சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது என்கிற வகையில் - வகுப்புவாரி இட ஒதுக்கீடானது, சமுதாய சீர்திருத்தக் கட்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்த முடிவை பலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். வகுப்புவாரி இட ஒதுக்கீடு இயற்கையான ஒன்று அல்ல. சிறுபான்மையினருக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத் தொடர்பின் விளைவே அது என்ற கருத்தே இப்போது பரவலாக உள்ளது. அதையே அவர்கள் நம்பவும் விரும்புகிறார்கள். என் வாதத்தை விளக்க, வகுப்புவாரி இட ஒதுக்கீடு நல்ல ஆதாரம் அல்ல என்று சொல்லப்படுமானால், என் வாதத்துக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரே ஆதரவாக நான் பிடித்துக் கொண்டிருக்க அவசியம் இல்லை என்றே கூறுவேன்.

ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம்

அயர்லாந்தின் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். அயர்லாந்து ‘ஹோம்ரூல்' (தன்னாட்சி) இயக்கத்தின் வரலாறு காட்டுவது என்ன? அல்ஸ்டர் என்ற பகுதியின் பிரதிநிதிகளும் தெற்கு அயர்லாந்தின் பிரதிநிதிகளும், ஓர் உடன்பாடு காண பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தெற்கு அயர்லாந்தின் பிரதிநிதியாகிய ரெட்மாண்ட் என்பவர், அல்ஸ்டர் உட்பட அயர்லாந்து முழுமையும் ஒரே தன்னாட்சி அரசியல் சாசனத்தின் கீழ்க்கொண்டு வருவதை ஆதரித்தார். அல்ஸ்டர் அப்படி உட்படும் பட்சத்தில், அவர்கள் விரும்பும் எல்லாவித அரசியல் பாதுகாப்பும் பெறலாம் என்று அல்ஸ்டர் பிரதிநிதிகளிடம் அவர் கூறினார். அதற்கு அல்ஸ்டர் பிரதிநிதிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? "உங்களின் (அரசியல்) பாதுகாப்பு நாசமாய்ப் போகட்டும்! எவ்வித நிபந்தனையின் பேரிலும் நீங்கள் எங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்'' என்றார்கள்.

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரைக் குற்றம் சாட்டுபவர்கள், அல்ஸ்டர் பிரதிநிதிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்தியச் சிறுபான்மையினர் மேற்கொண்டிருந்தால், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையினரின் அரசியல் நலன்கள் என்ன கதிக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அயர் லாந்தின் தன்னாட்சியைப் பொறுத்து அல்ஸ்டர் பிரதிநிதிகள் காட்டிய மனப்பாங்கை சீர்தூக்கிப் பார்ப்போம்.

அல்ஸ்டர் மக்களுக்கு சில பாதுகாப்புகள் ஏற்படுத்தித் தரும் வகையில் அயர்லாந்து பிரதிநிதிகள் ராஜதந்திர முறையில் நடந்து கொண்டு - பெரும் பான்மையினரால் தாம் ஆளப்படுவதை சிறுபான்மையினரும் ஏற்றுக் கொண்டிருந்தால், என்ன கெட்டுவிடும்? அப்படி நடந்திருந்தாலும் அது தற்செயலானதாகவே இருந்திருக்கும். அல்ஸ்டர் பிரதிநிதிகள் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டது ஏன் என்பதுதான் மய்யமான பிரச்சனை. நான் தரக்கூடிய ஒரே பதில், அல்ஸ்டர் மக்களுக்கும் தெற்கு அயர்லாந்து மக்களுக்கும் இடையே ஒரு சமுதாயப் பிரச்சனை இருந்தது. அதாவது, கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டுகளுக்கும் இடையேயான பிரச்சனை, சாராம்சத்தில் சாதிப் பிரச்சனையாகும்.

அயர்லாந்தில் ‘ஹோம் ரூல்' (தன் னாட்சி) என்பது "ரோம் ரூல்' (ரோமின் ஆட்சி) ஆக இருந்துவிடுமோ என்ற பார்வையில் இருந்தே அல்ஸ்டர்காரர்கள் தங்கள் நிலைப்பாட்டை முன்வைத்தனர். இதையே வேறுவிதமாகச் சொன்னால், ‘கத்தோலிக்க சாதி'க்கும் ‘புராட்டஸ்டண்டு சாதி'க்கும் இடையிலான சமுதாயப் பிரச்சனையானது, அரசியல் பிரச்சனையைத் தீர்ப்பதைத் தடைசெய்கிறது என்று சொல்லலாம்.

இந்த எடுத்துக்காட்டும் மறுக்கப்படலாம். ஏகாதிபத்தியம் இங்கும் தங்களுடைய வேலையைக் காட்டி விட்டது என்று அடித்துக் கூறப்படலாம். ஆனால், என்னிடத்தில் உள்ள ஆதாரங்கள் முடிந்து போய் விடவில்லை. ரோமின் வரலாற்றில் இருந்துகூட என்னால் எடுத்துக்காட்டு தர முடியும். ரோமைப் பொறுத்தவரை, எந்த கெட்ட தேவதையும் மோசம் செய்ததாகக் கூற முடியாது இல்லையா? ரோமின் வரலாற்றை அறிந்த எவருமே ரோம் குடியரசின் அரசியல் சாசனம், பெருமளவுக்கு இந்த வகுப்புவாரி இடஒதுக்கீட்டை ஒத்திருந்தது என்பதை அறிவர்.

சமூகப் பிரச்சனையை அலட்சியப்படுத்த முடியாது

ரோமில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டபோது, மன்னருக்குரிய அதிகாரங்கள் அல்லது ‘இம்பீரியம்' - ‘கான்சல்' களுக்கும் "போன்டிபிக்ஸ் மேக்சிமஸ்' களுக்கும் இடையில் பிரித்துத் தரப்பட்டது. மன்னனிடம் இருந்த மதம் தொடர்பான அதிகாரங்கள் ‘போன்டிபிக்ஸ் மேக்சிமசு'க்கு வழங்கப்பட்டன. பிற அதிகாரங்கள் கான்சலிடம் தரப்பட்டன. இந்தக் குடியரசு சாசனப்படி, இரு கான்சல்களில் ஒருவர் ‘பாட்ரிசியன்' மற்றவர் ‘பிளபியன்' ஆக இருத்தல் வேண்டும். ‘போன்டிபிக்ஸ் மாக்சிமசி'ல் உள்ள மத குருக்களில் ஒருபாதி ‘பாட்ரிசியன்'களாகவும், மறுபாதி ‘பிளபியன்' களாகவும் இருக்க வேண்டும்.

இந்திய வகுப்புவாரி இட ஒதுக்கீடு முறைøய பெரிதும் ஒத்திருக்கக் கூடிய ரோமின் குடியரசு சாசனத்தில், இந்த ஏற்பாட்டினை செய்வதற்கான அவசியம் என்ன? இரண்டு வேறுபட்ட சாதிகளாக இருக்கக்கூடிய ‘பாட்ரிசியன்' சாதிக்கும் ‘பிளபியன்' சாதிக்கும் இடையில் சமூக வேறுபாடு இருந்ததை, ரோம் குடியரசு சாசனம் கணக்கில் கொள்ள வேண்டி இருந்தது என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே விடை.

இதுவரை கூறிய வாதங்களைத் தொகுத்துச் சொன்னால், அரசியல் சீர்திருத்தவாதிகள் அவர்கள் விரும்புகிற எந்த வழியில் சென்றாலும் சரி, அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குகிற போது, தம் நாட்டில் நிலவுகிற சமுதாய அமைப்பில் இருந்து எழுகிற பிரச் சனையை அசட்டை செய்துவிட்டு - ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்கிவிட முடியாது.

அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது?

சமுதாயப் பிரச்சனைகளும், மதப் பிரச்சனைகளும் அரசியல் சாசனத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை என்னும் கூற்றுக்கு ஆதரவாக நான் எடுத்துக்கொண்ட எடுத்துக்காட்டுகள், மிகவும் குறிப்பானதாகத் தோன்றலாம். அது உண்மையாகவே இருக்கலாம். ஆனால், இந்த இரண்டு (சமுதாய, அரசியல்) பிரச்சனைகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர தாக்கம், வரையறைக்கு உட்பட்டது என்று எண்ணிவிடக் கூடாது. அதற்கு பதிலாக பொதுவாகச் சொன்னால், அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடியாக சமூக, ஆன்மீகப் புரட்சிகள் நடந்திருக்கின்றன என்னும் உண்மையை வரலாறு காட்டுகிறது.

லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்திருத்த இயக்கமே, அய்ரோப்பிய மக்களின் அரசியல் விடுதலைக்கு முன்னோடியாக இருந்தது. இங்கிலாந்தில் அரசியல் விடுதலை ஏற்படுவதற்கான வழியை வகுத்துத் தந்தது ‘பியுரிட்டானிசமே' (கிறித்துவ மத சீர்திருத்த இயக்கம்). அது ஒரு புதிய உலகத்தை உருவாக்கியது. அமெரிக்க சுதந்திரப் போரை வென்றெடுத்தது அந்த இயக்கமே. ‘பியுரிட்டானிசம்' என்பது, ஒரு மத இயக்கம்தான். இதே உண்மை, முஸ்லிம் சாம்ராஜ்யத்திற்கும் பொருந்தும். அரேபியர்கள் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கு முன்னால், நபிகள் நாயகம் என்னும் தீர்க்கதரிசியால் தொடங்கப்பட்ட மதப்புரட்சிக்கு, அரேபியர்கள் முழுமையாக ஆட்பட்டனர்.

இந்திய வரலாறும்கூட, இந்த முடிவுக்குதான் இட்டுச் செல்கிறது. சந்திரகுப்த மவுரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்கு, புத்தரின் மதப் புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது. மகாராட்டிர துறவிகளால் ஏற்பட்ட மதச் சீர்திருத்தமும், சமுதாய சீர்திருத்தமுமே - சிவாஜியால் ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக அமைந்தது. குருநானக்கால் வழிநடத்தப்பட்ட மதப் புரட்சியும் சமுதாயப் புரட்சியுமே, சீக்கியப் புரட்சிக்கு முன்னோடியாக அமைந்தது. இதற்கு மேலும் சான்றுகள் தேவை இல்லை. மக்களின் அரசியல் விரிவாக்கத்திற்குத் தேவையான தொடக்க ஏற்பாடு, மன விடுதலையும் ஆன்ம விடுதலையுமே ஆகும் என்பதைக் காட்ட, மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் போதுமானவை.
Pin It