திராவிடர் கழகத்தின் சட்டத்துறை செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் வீரசேகரன். ‘குடிஅரசு’ வழக்கில் கி.வீரமணி சார்பாக வழக்கை அதிகாரபூர்வமாக நடத்தும் வழக்கறிஞர் அவரே. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இரண்டு முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை தள்ளி வைக்கும் கோரிக்கைக்காக அவர் நீதிமன்றம் வந்தார். இப்போது தி.க.வின் சட்டத்துறை செயலாளரையே வழக்கிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் மருமகன் சண்முக சுந்தரத்தை வழக்கறிஞராக அமர்த்தி வீரமணி கையெழுத்திட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

நேர்மைக்கு இலக்கணம் வகுத்த தலைவர் தந்தை பெரியார், நீதிமன்றத்தில் தலைவிரித்தாடிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து சிங்கமென முழங்கிய மேதை! இளமைப் பருவத்திலேயே தமது தந்தையின் கையெழுத்தை தாமே போட்டதை நீதிமன்றத்திலே நேர்மையாக ஒப்புக் கொண்ட தலைவர். தான் கையெழுத்திடவில்லை என்று மறுக்குமாறு வழங்கிய ஆலோசனையை ஏற்க மறுத்தார்.

நீதிமன்றத்தில் எதிர் வழக்காட விரும்பாத தலைவர் பெரியார் நீதிமன்றம் தனக்கு எவ்வளவு அதிக தண்டனையை தர முடியுமோ அவ்வளவு அதிக தண்டனையை தரட்டும் என்று நீதிபதியிடமே விண்ணப்பித்தவர். ‘பார்ப்பான் நீதிபதியாய் உள்ள நாடு கடும் புலி வாழும் காடு’ என்று பார்ப்பன நீதிபதி முன்பாகவே சிங்கமாய் முழங்கிய நேர்மையாளர். ஒரு பவுன் ரூ.12 என்று இருந்த காலத்திலேயே தமக்கு கடனாக வரவேண்டிய ரூ.50,000 பணத்தை நீதிமன்றம் மூலம் மீளப் பெறும் வாய்ப்பு இருந்தும், அதை செய்ய மறுத்தவர். அப்போது காங்கிரசில் இருந்த பெரியார், நீதிமன்றப் புறக்கணிப்பை கொள்கையாக ஏற்றுக் கொண்டதால், அதற்கான விலையைத் தருவதற்கு தயாரானார்.

பெரியார் கண்ட பேரியக்கத்தின் பெருமதிப்பை தனது ‘பார்ப்பனியத்தால்’ மிகவும் இழிவுபடுத்திவிட்டார் வீரமணி.

நேர்மையும், வீரமும், சூழ்ச்சிகளற்ற வெள்ளிடை மலையான அணுகுமுறையையும் கொண்ட பெரியாரின் இயக்கத்துக்கு இப்படி ஒரு தலைகுனிவா?

வெட்கம்! மகா வெட்கம்!

Pin It