ஆதீனகர்த்தர்களின் பார்வைக்கும் .. பதிலுக்கும்...

தில்லி உயர் நீதிமன்றத்தில் IIT ல் பணிபுரியும் ராஜீவ் குமார் எனும் பேராசிரியர் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE)களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வல்லுநர் குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரிய பொது நல வழக்கில், அந்த வழக்கினை அனுமதித்த உயர் நீதிமன்றம் மத்திய மனித வள அமைச்சகத்திற்கும், அய் அய் டி குழுமத்திற்கும் அதன் தேர்வாணையத்திற்கும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளது.

அது குறித்துப் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த நான்கு கூட்டு நுழைவுத் (JEE) தேர்வுகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் திடுக்கிட வைக்கும் முறைகேடுகளை வெளிக் கொணர்ந்ததாகக் கூறுகின்றார். எடுத்துக் காட்டாக பொதுப் பிரிவில் 279 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் நிராகரிக்கப்பட்டதும், 154 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றார். இதுதான் அவர்களின் தரம் தகுதி திறமை. இத்தனை காலமாக இவர்கள் இப்படித்தான் தங்கள் சமூகத்திற்குப் பணி செய்கிறார்கள். அதுவும் மக்களின் வரிப் பணத்தில்தான் நடக்கின்றது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடமளித்தால் வரிப்பணம் பாழாகின்றது என்று வாய்கிழியப் பேசுபவர்கள் இவர்கள்தான்.

தகுதி மற்றும் திறமை ஆகிய அளவு கோல்களால் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்று இட ஒதுக்கீட்டுக்கெதிராக முழக்கமிடும் வாதிடும் இந்த அறிவுத் திருக்கோயில்களின் ஆதீனகர்த்தாக்களும், அறிவுக் குத்தகைதாரர்களும் இட ஒதுக்கீடு இந்தத் திருக்கோயிலை பாழ்படுத்திவிடும் என்று வாயடிக்கும் முன்னாள் இன்னாள் அய் அய் டி இயக்குனர்களும் இதற்கு இன்று வரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் சேர்க்கையே இப்படியென்றால், இவர்கள் பேராசிரியர் நியமனத்தில் என்னென்ன குளறுபடிகள் செய்திருப்பர் என்பது அந்த முன்னாள் இன்னாள் 'ஆண்டவர்களுக்கே' வெளிச்சம். அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே இத்தகைய செயற்கரிய செயல்களைச் செய்பவர்கள் தன்னாட்சி கோருவது தங்கள் செயல்பாடுகள் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாதவாறு தங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதற்குத்தானே தவிர வேறெதற்குமல்ல என்பதுதான் உண்மை.

-ரெ.கா.பாலமுருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)