சென்ற இதழ் தலையங்கம், சில முக்கிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது: "தலித் கட்சிகளுக்கு மட்டும் கொள்கைகள் தேவையில்லையா?' / "அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாமா?'... வேறு எந்தக் கட்சிகளைக் காட்டிலும், தலித் கட்சிகளுக்கு கொள்கைகள் முக்கியம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், தலித் கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்ற காரணத்தால்தான் அவை இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டனவா? நீர்த்துப்போய் விட்டதாகச் சொல்லப்படும் தலித் கட்சிகளைக்கூட ஏற்க மறுப்பவர்கள், கொள்கை உறுதியுடன் இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்வார்களா? தேர்தல் அரசியலில் எல்லா வகையான சமரசங்களையும் செய்து கொள்பவர்கள்தான் தலித் கட்சிகளைப் புறக்கணிப்பதற்கு இப்படியான போலி காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

அரசியல் தீண்டாமையால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தலித் கட்சிகள், "தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்' என்ற வாதத்திலும் சாரம் இல்லை. அரசியல் அதிகாரத்தை தேர்தல் அரசியலால் மட்டுமே வென்றெடுத்துவிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஒரு தலித் கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதால், சாதி / ஊழல் கட்சிகளே தலித் வாக்குகளை அபகரித்துக் கொள்வதற்கும்; தலித்துகளை நிரந்தரமாக ஏமாற்றுதற்கும் வாய்ப்பாகின்றது. சாதி ஒழிப்பு என்ற லட்சியத்தை அடையும் வரை, சாதி ரீதியான இடஒதுக்கீடு எப்படி இன்றியமையாததோ, அதேபோல்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை, தலித் கட்சிகள் தேர்தலில் பங்கேற்பதும் இன்றியமையாததாகின்றது. இரட்டை வாக்குரிமை நடைமுறைச் சாத்தியமில்லாத சூழலில், தலித் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தனித் தொகுதிகளே தீர்வாகின்றன. ஆனால், அது ஒரு போலி பிரதிநிதித்துவம் என்பது, அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதுதான். இந்நிலையில், இம்மக்களின் உரிமைகளை அரசியல் களத்தில் வென்றெடுக்க, ஒரு தலித் கட்சியின் அவசியத்தை யார் மறுக்க முடியும்?

மேலவளவு முருகேசன், தி.மு.க. வேட்பாளராகத் தேர்தலில் பங்கேற்பதற்கும், பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கும் ஒரு தலித் கட்சியான "விடுதலைச் சிறுத்தைகள்'தானே தேவைப்படுகிறது. இந்த அவலத்தைக் கண்டித்து பட்டினி கிடப்பவர்கள், ஆதங்கப்படுவதாகச் சொல்பவர்கள், தலித் பிரதிநிதித்துவம் தங்கள் கட்சியிலும் இருப்பதாகப் பீற்றிக் கொள்பவர்கள் எவரும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல் சாதிவெறியின் பிரதிநிதிகளாகவே அமைதி காக்கின்றனர். "ஓட்டுப் பொறுக்கி அரசியல்' என்ற விமர்சகர்கள்கூட, இந்த அநீதிக்கு எதிராக எதையும் பொறுக்குவதில்லை. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கும் திராவிடப் பாரம்பரியங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தும் இடதுசாரிகளும் கள்ளர் சாதி வெறியை எதிர்த்து வெளிப்படையாக செயல்பட அஞ்சுவதேன்? ஒரு தலித் கட்சியால்தான் அதைத் துணிந்து எதிர்க்க முடியும் என்பதற்கு - முனைவர் பட்ட ஆராய்ச்சிகள் தேவையில்லை.
.

சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் அரங்கில், தலித் கட்சிகள் தந்திரமாக செயல்படாமல்; முக்கியப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருக்கலாம். இதைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்ய வேண்டிய தேவை, எல்லா ஜனநாயக சக்திகளுக்கும் உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இக்காரணங்களுக்காக, தலித் கட்சிகளின் தேவையை முற்றாக மறுதலித்துவிட முடியுமா? திண்ணியம் கொடுமைகளைப் பற்றி பேச, எத்தனைக் கட்சிகள் இருக்கின்றன? அம்பேத்கர் சிலைகள் குற்றவாளிகள் போல, கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டிக்க எவரும் இல்லையே! தமிழக அரசில் 17 ஆயிரம் தலித் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று குரல் கொடுக்க, சட்டமன்றத்தில் யார் இருக்கிறார்கள்? இந்தப் பத்தாண்டுகளில், பரிதி இளம்வழுதி கருணாநதியைப் பாதுகாக்க, குறைந்தது நூறு முறையாவது சட்டமன்றத்திலிருந்து அவமானப்படுத்தப்பட்டு, தூக்கியெறியப்பட்டிருப்பார். ஆனால், தலித் உரிமைகளை முன்வைத்து ஒரு முறையாவது, அவர் வெளிநடப்புச் செய்திருப்பாரா? அவர் நினைத்தாலும், அப்படிச் செய்துவிட முடியாதே!

சமூக மாற்றத்தை வலியுறுத்துபவர்கள்கூட, கருணாநதி வர வேண்டுமா? ஜெயலலிதா வர வேண்டுமா? என்று தேநீர்க் கடை அரசியல் போல, தேர்தல் நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஆனால், தேர்தல் அரசியலில் தலித் பிரதிநிதித்துவம், பெண்களின் பிரதிநிதித்துவம், கோலோச்சும் சாதி அரசியல், வாரிசு அரசியல் பற்றியெல்லாம் விவாதிப்பதற்குத் தயாராக இல்லை. கருணாநதியா, ஜெயலலிதாவா என்று மட்டும் முடிவெடுப்பதற்கு கட்சிக்காரர்கள் போதுமே!

ஆங்கிலேயர் ஆட்சியே மேல் எனில், காங்கிரஸ் தோன்றியிருக்காது; காங்கிரஸ் கட்சியே போதும் எனில் திராவிட இயக்கம் தேவையற்றதாக இருந்திருக்கும்; திராவிட இயக்கமே உரிமைகளைப் பாதுகாக்கும் எனில், தலித் கட்சிகள் தோன்றியிருக்காது. ஆனால் இதுகாறும், தலித் வரலாறு, தலித் இயக்கம், தலித் இலக்கியம், தலித் அரசியல்... என அனைத்தும் புறக்கணிக்கப்பட்டதால்தான் "தலித் அரசியல்' முகிழ்த்தெழுகிறது என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது.

-தலித் முரசு செய்தியாளர்
Pin It